இரவு வானில் வட அல்லது தென் துருவத்தை நோக்கி உங்கள் கேமராவின் ஷட்டரை அதிகநேரம் திறந்து வைத்து படமெடுத்தீர்கள் என்றால் இந்த 'விண்மீன் நகர்வு' படம் உங்களுக்குக் கிடைக்கும். வானில் விண்மீன்கள் நகரும் பாதையை இப்படம் காட்டுகிறது. அனைத்து விண்மீன்களும் துருவ விண்மீனைச் சுற்றி வருவதைப் பார்க்கலாம். உண்மையில் பூமி சுழல்வதால் இத்தோற்றம் ஏற்படுகிறது. ஆணி அடித்தார்போல நகராமல் இருக்கும் துருவ விண்மீனை (Pole Star) மற்ற விண்மீன்கள் சுற்றி வருவதைப் போல தெரியும். நமக்கு வலமிருந்து இடமாக சுற்றுவதைப் போல தோற்றமளிக்கும், இதற்குக் காரணம் பூமி இடமிருந்து வலமாகச் சுழல்வதே.
துருவ விண்மீன் மிகத் துல்லியமான வடக்குத் திசையில் உள்ளதா? என்றால், இல்லை... மிகத் துல்லியமான வடக்கில் விண்மீன் எதுவும் இல்லையாதலால் அருகிலுள்ள விண்மீனான ஆல்பா உர்சா மைனாரிஸ் என்ற விண்மீனை துருவமீனாகக் கொண்டுள்ளோம். நடுவில் நன்றாக கவனித்தால் துருவ விண்மீனும் ஒரு மையத்தைச் சுற்றி வருவதைப் பார்க்கலாம். நடுவிலுள்ள துருவ விண்மீன் ஒருவர் இருக்கும் இடத்தின் அட்சரேகையின் உயரத்தில் இருக்கும். இப்படம் 10° வட அட்சரேகையிலிருந்து எடுக்கப்பட்டதால் துருவ விண்மீன் 10° உயரத்தில் இருப்பதைக் காணலாம். அதிகமான அட்சரேகையிலிருந்து பார்க்கும்போது சில உடுக்கணங்கள் துருவமீனை வட்டமாக சுற்றிவருவதைக் காணலாம். இவை துருவஞ்சுற்று உடுக்கணங்கள் (Circumpolar Constellations) எனப்படும். பெருங்கரண்டி (Big Dipper), சிறு கரடி ( Ursa Mino), கேசியோப்பியா (Cassiopeia), டிராக்கோ (Draco) ஆகியவை துருவஞ்சுற்று உடுக்கணங்கள் ஆகும்.
இப்படம் திருச்சி திருப்பட்டூர் அருகில் எதுமலையிலிருந்து எடுக்கப்பட்டது. மூன்று மணிநேரத்தில் 450 படங்கள் எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டது.
Star Trails
From the dark site locking the shutter open for long exposure for few hour creates 'Star Trails' portraits as Earth's motion causes the stars to make streaks on the frame .
Nikon D750 | 17mm SIGMA DC | f/2.8 | 25 Sec | 450 frames staked | 21-04-2023 | Ethumalai, Trichy.
- பாலா பாரதி

No comments:
Post a Comment