தமிழர் ஆண்டுக் கணக்கில் முதல் மாதமாக வருவது தையா? சித்திரையா? என்பதில் நீண்டகாலமாகவே விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தையே முதல் மாதம் என்பதற்கு அதன் சார்பானவர்கள் பல தரவுகளையும், சித்திரையே முதல் மாதம் என்பதற்கு அதன் சார்பானவர்கள் பல தரவுகளையும் கொடுத்து வருகின்றனர்.
தை மாதம்தான் ஆண்டின் முதல்மாதம் என்பதற்கு அதைச் சார்ந்தவர்கள் பின்வரும் காரணங்களைக் கூறுகிறார்கள்: தமிழர்கள் சூரியன் தனது வடசெலவைத் துவங்கும் நாளையே முதல் நாளாகக் கொண்டிருந்தனர். விவசாய அறுவடை திருநாளில் சூரியனையும் மாடுகளையும் வணங்கி அந்நாளைக் கொண்டாடினர். பஞ்சாங்கத்தில் தை மாதத்தை அடிப்படையாகக் கொண்ட மகர சங்கராந்தி ஆண்டுபலன் என்னும் பெயரில் ஆண்டு பலன்கள் கணித்து வெளியிடுவது தற்போதும் நடைமுறையில் உள்ளது. பொங்கல் பண்டிகை தமிழருக்கு முதன்மையான திருநாள், ஆகவே அதுவே புத்தாண்டாக இருக்க முடியும்.
ஒர் ஆண்டில் சூரியனின் இயக்கத்தை வேறொரு வகையிலும் புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் திசையை ஆண்டு முழுவதும் நோக்கினால் இப்புள்ளிகள் இட வலமாக நகர்வதைப் பார்க்கலாம். சூரியன் வலக் கோடியிலிருந்து இடக் கோடியை நோக்கிப் பயணிப்பதுபோல தோன்றும். இது வடசெலவு (உத்திராயணம்) எனப்படுகிறது. நமக்கு வலக் கோடியிலிருந்து இடக் கோடிக்குப் பயணம் தை முதல் நாளன்று தொடங்குகிறது. சூரியனின் ஓர் ஆண்டின் இயக்கத்தை இடது வலதாகப் பார்த்தால் ஆண்டின் முதல் மாதம் தை மாதம் என வருகிறது. தை மாதம் தான் ஆண்டின் முதல் மாதம் என்பதற்கும் பல தரவுகள் கொடுக்கப்படுகின்றன.
'தை பிறந்தால் வழி பிறக்கும்'
எனும் நம்பிக்கையூட்டும் பழமொழியையும் சான்றாகக் கொள்ளலாம். தைமாதத்தை இலக்கியங்களும் பெருமை பேசுகின்றன.
“தைஇத் திங்கள் தண்கயம் போல்" எனப் புறநானூறும்
"தையில் நீராடி தவம் தலைப் படுவாயோ" எனக் கலித்தொகையும்
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" எனக் குறுந்தொகையும்
தையை சிறப்பித்துக் கூறுகின்றன.
பூமி சூரியனை (நீள்)வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஒருமுறை சுற்ற ஆகும் காலம் ஓர் ஆண்டு. பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் பூமியைச் சுற்றி வருவதைப்போல் தெரிகிறது. அவ்வாறே எடுத்துக்கொள்வோம். சூரியனின் வட்டப்பாதை எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது எனக்கூற முடியாது. ஏனெனில் ஒரு வட்டத்திற்கு ஆரம்பமும் இறுதியும் இல்லை. இவ்வட்டத்தில் நாமாக ஒரு புள்ளியைக் குறித்து இது முதற்புள்ளியாகக் கணக்கிட முடியுமல்லவா? தமிழர்கள் அவ்வாறே செய்தனர். சூரியப்பாதையும் வான் நடுவரையும் வெட்டிக்கொள்ளும் இருபுள்ளிகளில் ஒரு புள்ளியை எடுத்துக்கொண்டனர். அந்தப் புள்ளியில் சூரியன் இருக்கும்போது பகலும் இரவும் சமமாக இருக்கும். அதாவது அப்புள்ளி சமநோக்குப்புள்ளி (Vernal Equinox) எனப்படுகிறது.
அடுத்து பன்னிரண்டு இராசிகளில் மேழத்தை முதல் இராசியாகக் கொண்டனர். மேழ இராசி தொடங்கும் முதற்புள்ளி (First Point of Aries) யில் சமநோக்குபுள்ளி சந்திக்கும் நாள் அவ்வாண்டின் முதல் நாள். அதாவது மேழ இராசியில் சூரியன் நுழையும் முதல் நாள் அவ்வாண்டின் முதல் நாளாகக் கணக்கிடப்படுகிறது. இக்கணக்கீட்டின்படி பார்த்தால் சித்திரை மாதமே ஆண்டின் முதல் மாதமாக அமைகிறது.
சித்திரையே முதல் மாதம் என வாதிடுபவர்கள் பின்வரும் கருத்துகளை முன்வைக்கின்றனர்:
"திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடுநிலை இய
உரோகிணி நினைவனள் நோக்கி" (நெடுநல் வாடை 160-163)
என்று நக்கீரனார் பாடியிருக்கிறார். சூரியன் வட்டப்பாதையில் சுற்றுகிறது. அதில் ஆரம்பப்புள்ளி, இறுதிப்புள்ளி என்று ஏதுமில்லை. இருந்தும் இது ஆகாய நடுவரையை வெட்டும் புள்ளியைக் கொண்டு இப்புள்ளி மேழ உடுக்கணத்தில் நுழையும் நாளே ஆண்டின் முதல் நாள், அந்த மாதம் சித்திரையாகும். பாடலில் நக்கீரனார் ஆடுதலை எனக் குறிப்பிடுவது மேழ உடுக்கணத்தைத்தான். பழமையான கோயில்களில் இருபத்து ஏழு விண்மீன்கள் சிற்ப வடிவில் காட்டப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக ஆவுடையார் கோயில் சிற்பத்தில் இந்த இருபத்து ஏழு விண்மீன்களைப் பார்க்கலாம். இதில் முதலாவதாக அசுவதி விண்மீன் உள்ளது. இந்த அசுவதிக்குச் சூரியன் வரும் நாளே சித்திரை முதல் நாள். அசுவதி விண்மீன் மேழத்தில் இயங்குவது. எனவே சித்திரைத்தான் ஆண்டின் முதல் மாதம். பிங்கல நிகண்டு இராசியின் பெயர்களை மேடமு மிடபமு மிதுனமுங் கடகமும் சிங்கமும் கன்னியும் துலாமும் தேளும் தனுவும் மகரமும் கும்பமும் மீனும் என்றே வரிசைப்படுத்துகிறது.
கோடைக் காலமே முதலாவது பருவம். 'தலைவந் திசைவேனில்' (சீவக-648) எனச் சீவகசிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது. கோடைகாலத்தின் தொடக்கம் சித்திரையாகும். வீரமாமுனிவரும் தமிழர்கள் ஏப்ரல் மாதத்தில் ஏதோ ஒரு நாளில் ஆண்டின் முதல் நாளைக் கொண்டுள்ளனர் என்கிறார். சென்னை பல்கலைக்கழகத்தால் 1912 ஆம் ஆண்டு, பதிப்பிக்கப்பட்ட தமிழ் பேரகராதியில் 'சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' எனக் கூறப்பட்டுள்ளது.
கிரிகோரியன் நாட்காட்டியை அனைவரும் ஏற்றுக்கொண்டு ஜனவரி முதல் தேதியை ஆண்டின் முதல் நாளாகக் கடைபிடிக்கிறோம். இவ்வாண்டு அனைவரும் கடைபிடிக்கும் பொது ஆண்டு. வங்கிகளும், பணம் வரவு, செலவு செய்கிறவர்களும் ஏப்ரல் முதல் தேதியை ஆண்டின் முதல் நாளாகவும், அவ்வாண்டை நிதி ஆண்டு (Finalcial Year) என்றும் அழைக்கின்றனர். பள்ளிகள், கல்லூரிகளில் ஜுன் மாதத்தை முதல் மாதமாக் கொண்ட கல்வி ஆண்டு (Academic Year) கடைபிடிக்கிறார்கள். எனவே பொது ஆண்டு அனைவருக்குமானது, செய்யும் தொழிலைப் பொறுத்து மற்றொரு ஆண்டு முறையையும் நாம் பயன்படுத்துகிறோம் அல்லவா? பயிர்த்தொழில் புரியும் விவசாயிகள் பொது ஆண்டுடன் விவசாய ஆண்டைப் பயன்படுத்துவது இயல்புதானே? சித்திரை மாதத்தை முதல் மாதமாகக் கொண்ட ஆண்டு முறையைப் பொது ஆண்டாகவும், தை மாதத்தை முதல் மாதமாகக் கொண்ட ஆண்டை விவசாய ஆண்டாகவும் கடைபிடித்துள்ளனர். அதனால்தான் இரண்டு கருத்துக்களுக்கும் தரவுகள் கிடைக்கின்றன.
ஏன் தை மாதத்தை முதல் மாதமாகக் கொள்ளவேண்டும்? கல்வி ஆண்டு (Academic Year) ஏன் ஜுன்மாதம் ஆரம்பிக்கிறது? ஆண்டுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விட்டபின் ஜுன் மாதம் பள்ளிகள் ஆரம்பித்தால் நிர்வாக வசதிப்படி எளிதானது. இந்தியாவில் மே மாதம் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். தேர்வுத் தாள்களை ஆசிரியர்கள் திருத்தி மதிப்பெண்பட்டியல் தயாரிப்பதையும் செய்துவிடலாம். அதாவது செய்யப்படும் தொழிலின் வசதிக் கருதி ஆண்டுமுறையைக் கடைபிடிக்கிறோம்.
விவசாயிகளைப் பொறுத்தவரை 'ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பார்கள். ஆடியில் விதைக்கிறார்கள். தையில் அறுவடைச் செய்கிறார்கள். அறுவடையின் பலனைக் கண்டு மகிழ்ந்து அதற்கு துணைபுரிந்த மாடுகளுக்கும், இயற்கைக்கும் நன்றி கூறி அதை விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இந்த மாதம் அவர்களுக்குச் செல்வம் புழங்கும் மாதம் எனவே பயிர்த்தொழில் புரியும் விவசாயிகள் தங்களின் விவசாய ஆண்டை தைமாதத்தில் தொடங்குகின்றனர். வங்கித் தொழில் புரிவோர் பொது ஆண்டையும், நிதி ஆண்டையும் (Financial Year) கடைபிடிக்கின்றனர். கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் பொது ஆண்டையும், கல்வி ஆண்டையும் (Academic Year) கடைபிடிக்கின்றனர். அதுபோலவே விவசாயத் தொழில் புரிவோர் பொதுஆண்டின் முதல் மாதமான சித்திரையையும், விவசாய ஆண்டின் முதல் மாதமான தையையும் கடைபிடித்திருக்கின்றனர்.
எனவே, தமிழர் ஆண்டுமுறையில் முதல் மாதம் சித்திரையா? தையா? என்ற கேள்விக்கு நமக்குக் கிடைக்கும் பதில் இரண்டும்தான். சித்திரை முதல் மாதம் என்பது வடமொழியினர் தமது மீது திணித்ததாகத் தையைக் கடைபிடிப்பவர்கள் கருதுகிறார்கள். ஆனால் அப்படியல்ல சித்திரை மாதமும் தமிழர்களுக்கு உரியதுதான். சூரிய நாட்காட்டியில் மேழம் என்று பெயர் பெற்றிருந்த மாதம் சூரிய-சந்திர நாட்காட்டியில் சித்திரை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது, அவ்வளவே.
ஆக, சித்திரை முதல் நாள் பொது ஆண்டின் தொடக்கம். தை முதல் நாள் விவசாய ஆண்டின் தொடக்கம். இரண்டும் தமிழர்களுக்கு உரியதே.
நிற்க!
இதில் ஒரு இடர்ப்பாடு உண்டு. தற்காலங்களில் சித்திரை முதல் நாளும், தை முதல் நாளும் அதற்குரிய நாட்களில் வருவதில்லை. மேழ இராசியின் முதற்புள்ளியில் சூரியன் நுழையும் நாளே சித்திரை முதல்நாள் எனப் பார்த்தோம். ஆனால் இவ்வாண்டு சூரியன் மேழத்தில் பங்குனி ஏழாம் தேதியன்றே நுழைந்துவிட்டது. அதாவது ஆண்டு பிறப்பை இருபத்து மூன்று நாட்கள் கழித்துக் கொண்டாடி இருக்கிறோம். அதுபோல இந்த ஆண்டு சூரியன் வடசெலவை தொடங்கிய நாள் மார்கழி ஆறாம் தேதி, ஆனால் நாம் இருபத்து மூன்று நாட்கள் கழித்துக் கொண்டாடி இருக்கிறோம். இதற்குக் காரணம் நம் நாட்காட்டி இருபத்து மூன்று நாட்கள் முன்னோக்கிப் போய்விட்டது. இதைப் புரிந்துகொள்ள நாம் வானியலுக்குப் போக வேண்டும்.
- பாலா பாரதி
No comments:
Post a Comment