Sunday, 31 December 2023

பாறை ஓவியங்களில் வானியல் பதிவுகள்

பழங்காலத்தில் மனிதர்கள் தாங்கள் வாழ்ந்த குகைகளில் வரைந்து வைத்துள்ள ஓவியங்களைப் பாறை ஓவியங்கள் அல்லது குகை ஓவியங்கள் என்கிறோம். வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய இப்பதிவுகள் மனிதப் பண்பாட்டு வளர்ச்சியைத் தெரிந்துக்கொள்ள உதவுவனவாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் பாறை ஓவியங்கள் பற்றி உலகிற்குத் தெரியவந்தது. உலகின் பலபகுதிகளில் கிடைக்கும் இவ்வோவியங்களில் பிரான்ஸ் நாட்டில் லாஸ்காஸ், சாவெட் குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்கள் புகழ்பெற்றவை. அதுபோல இந்தோனேஷியா தீவில் கண்டுபிடிக்கப்பட்ட கை ஓவியங்கள் மிகவும் பழமையானவைகளாகக் கருதப்படுகின்றன. இந்தியாவில் மத்தியப்பிரதேசத்திலுள்ள பிம்பெட்காவில் புகழ்பெற்ற பாறை ஓவியங்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய ஓவியங்கள் கிடைப்பது சிறப்பானதாகும். தமிழ்நாட்டில் கிடைக்கும் ஓவியங்கள் பெரும்பாலும் சிவப்பு, வெள்ளை நிற ஓவியங்களாக உள்ளன. இவ்வோவியங்களில் மனித, விலங்கின உருவங்கள், வேட்டைக் காட்சிகள், சண்டைக் காட்சிகள், அன்றாடச் செயல்பாடுகள் போன்ற காட்சிகளுடன் வானியல் குறியீடுகளும் ஓவியங்களாகக் காணப்படுகின்றன.

     பிரான்ஸ் நாட்டின் லாஸ்காஸ் குகைகளில் ஓரையான் உடுக்கணம், காளை உடுக்கணத்துடன் கார்த்திகை விண்மீன் கூட்டமும் வரையப்பட்டுள்ளன. இது வரையப்பட்ட காலம் 15,000 ஆண்டுகள் என்கிறார்கள். அதாவது 15,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே வானில் உள்ள விண்மீன்களைக் கண்டு அவற்றைத் தொகுதிகளாகப் பிரித்துப் பதிவுச் செய்யும் வழக்கம் இருந்துள்ளது. இதுபோல ஓரையான் உட்பட பல உடுக்கணங்களைத் தமிழ்நாட்டிலும் தொல்பழங்கால மக்கள் குகைகளில் வரைந்து வைத்துள்ளனர். பாறை ஓவியங்களில் இரண்டுவகை உண்டு. ஒன்று வண்ணக் கலவைக் கொண்டு பாறைகளில் வரைவது (Pictographs) மற்றொன்றுப் பாறைகளைக் கீறி உருவங்களை உண்டாக்கும் பாறைக்கீறல் ஓவியங்கள் (Petroglyphs).

     நீலகிரி மாவட்டம் கொணவக்கரையில் ‘ஏர்பெட்' என்ற இடத்திலுள்ள ஒரு குகையில் பாறைக்கீறல்களாக வானியல் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றில் மனிதன், தேள், பாம்பு ஆகிய உருவங்கள் முதன்மையாகக் காட்டப்பட்டுள்ளன. இவற்றில் மனித உருவம் ஓரையான் உடுக்கணத்தையும், தேள் உருவம் விருச்சிக உடுக்கணத்தையும், பாம்பு உருவம் நமது பால்வெளி மண்டலத்தையும் குறிப்பதாக இருக்கலாம். மேலும், இங்குச் சூரியன், நிலவு போன்ற உருவங்களும் காணப்படுகின்றன. இதுபோலப் பல இடங்களில் வானியல் தொடர்பான ஓவியங்கள் கிடைத்தாலும், அவற்றுள் 'புலிக்கரடு' ஓவியங்கள் தனித்துவமானவைகளாகத் திகழ்கின்றன.




        மதுரை மாவட்டம், பேரையூர் அருகிலுள்ள புலிக்கரடு என்ற குகையில் வெள்ளை நிறத்தில் நிறைய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்கள் பாறை ஓவியங்கள் ஆய்வாளரான திரு. க.த.காந்திராஜன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. இக்குகையின் தலைக்குமேலே உள்ள பாறையில் சூரியன், நிலவு உருவங்கள் ஒளிரேகைகளுடன் வரையப்பட்டுள்ளன. இரண்டுக்கும் இடையில் வளைகோடொன்று போடப்பட்டு அதில் குறுக்காகச் சிறு கோடுகள் போடப்பட்டுள்ளன. இந்த சிறு குத்துக் கோடுகள் எண்ணிக்கைக்காகப் போடப்பட்டுள்ளன. மேலும், இதில் பதினைந்து கோடுகள் உள்ளன. இந்த எண்ணிக்கை நிலவின் இரு நிலைகளான அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடைப்பட்ட நாட்களின் எண்ணிக்கையாகும். இரண்டு ஒளிரேகைகளுடன் கூடிய வட்டங்களில் ஒன்று சூரியன் மற்றது நிலவு. எது சூரியன்? எது நிலவு? என்ற கேள்விக்கு சாதக நூலொன்றில் உள்ள பாடலிலிருந்து விடை கிடைக்கிறது.

 

"ஐந்திருபத் தொன்றேழ் அதன்பின்னோற்

       கொன்பது பத்(து)

உந்திய லீரெட்டு நான் கொரு நான்

       (கு)-உந்தும் 

கதிராதி பாம்பீறாய்க் கட்டுரைத்த கோள்கட்(கு) 

எதிரா வருங்கதிராம் என்."

 (பக்கம் 4, காலச்சக்கரம், தஞ்சாவூர் சரசுவதி மகால் வெளியீட்டு எண்:125, தில்லைநாயகப் புலவர் இயற்றியது, பதிப்பாசிரியர் வித்துவான் திரு.அடிகளாசிரியர், முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர்).

 பொருள்: சூரியனுக்கு ஐந்து, சந்திரனுக்கு இருபத்தொன்று, செவ்வாய்க்கு ஏழு, புதனுக்கு ஒன்பது, வியாழனுக்குப்பத்து, வெள்ளிக்கு பதினாறு, சனிக்கு நான்கு, இராகுவிற்கு நான்கு கதிராகும். 

        ஓவியத்தின் வலப்புறத்திலுள்ள வட்டத்தில் ஐந்து ரேகைகளும், இடப்புறத்திலுள்ள வட்டத்தில் இருபத்தொன்று ரேகைகளும் காட்டப்பட்டுள்ளன. மேற்கண்ட பாடலின் பொருள்படி வலப்புறத்திலுள்ளது சூரியன், இடப்புறத்திலுள்ளது நிலவும் ஆகும். நிலவு தேய்ந்து வளர்வது சூரியனின் ஒளியினால், மேலும் அது தேய்ந்து மறையும் காலம் பதினைந்து என்பது இவ்வோவியத்தின் பொருளாகும். இவை வரையப்பட்ட காலம் என்னவாக இருக்கும்? லாஸ்காஸ் ஓவியங்களில் காணப்படும் வானியல் குறியீடுகள் 15,000 ஆண்டுகள் பழமையானவையாதலால் அதுபோல வரையப்பட்ட இந்த ஓவியமும் மிகப் பழமையானதாகத்தான் இருக்கும். குறைந்தது 5000 முதல் 10,000 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கும் என்பது நமது மதிப்பீடு. அறிவியல் ஆய்வின் மூலம் காலத்தைக் கணிக்கும்போது அதன் பழமை நமக்குத் தெரியவரும். மேற்கூறிய பாடல் சினேந்திரமாலை என்னும் நூலில் உள்ளதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். எனவே இப்பாடல் வடமொழியிலிருந்து வந்துள்ளது எனப் புரிந்துகொள்ளலாம். ஆனால், வடமொழிக்கு தமிழிலிருந்து போயுள்ளது என்பதை இந்த ஓவியம் மூலம் உறுதியாகக் கூறலாம். இக்குகையில் வாழ்ந்த கணியர்கள் வரைந்து வைத்துள்ள ஓவியங்கள் இவை. இவ்வோவியங்களின் எழுத்து வடிவங்களான பாடல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டன. ஓலைச்சுவடிகளை இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்குமேல் பாதுகாக்க முடியாது. மூல ஓலைச்சுவடிகள் அழிந்து விட்டாலும் அவற்றின் ஓவிய வடிவம் குகையொன்றில் கிடைப்பது சிறப்பானதாகும்.

                                                                                                                     - பாலா பாரதி 

 

No comments:

Post a Comment