மாசி மாதத்தில் நிகழும் முழுநிலவு நிகழ்வு மாசி மகம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் ஒரு முழுநிலவு நிகழ்வு நடக்கும். அந்நாளில் நிலவின் அருகே இருக்கும் விண்மீனின் பெயருடன் அந்நாள் வழங்கப்படுவது தமிழ் மரபு. சான்றாகச் சித்திரை மாதத்தின் முழுநிலவு சித்திரை விண்மீனின் அருகே இருப்பதால் அந்நாள் "சித்திரா பௌர்ணமி" என்று அழைக்கப்படுகிறது.
அதுபோல மாசி மாதத்தில் முழுநிலவு மகம் விண்மீன் அருகே இயங்கும் நாளே "மாசி மகம்" ஆகும். மகம் விண்மீன் சிம்மராசியில் இருக்கும் ஒளிபொருந்திய விண்மீனாகும். இது இந்திய வானியலில் 27 விண்மீன்களில் ஒன்றாக விளங்குகிறது. நம்மிலிருந்து 85 ஒளியாண்டுத் தொலைவில் இது உள்ளது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் இரவு வானை அலங்கரிக்கும் உடுக்கணங்களில் சிம்மம் முதலிடத்தைப் பெறும். பெயருக்கேற்ற சிங்கத்தின் தோற்றத்துடன் காணப்படும் இதை எளிதில் அடையாளம் காணலாம்.
மார்ச் மாதத்தில் மாலை கிழக்கே தோன்றும் இந்த சிங்கத்தின் பிடரி வெட்டரிவாள் போலத் தோன்றும். வெட்டரிவாளின் கைப்பிடியில் ஒளிபொருந்திய விண்மீனைப் பார்ப்பீர்கள். அவ்விண்மீனே "மகம்". இது ஆல்ஃபா லியோனிஸ் (Alpha Leonis) என்ற வானியல் பெயரையும் "ரெகுளஸ்" (Regulus) என்ற மரபுப் பெயரையும் இவ்விண்மீன் பெறுகிறது. இதன் பொலிவெண் +1.40.
- பாலா பாரதி



No comments:
Post a Comment