தில்லை, உத்திரகோசை உட்பட பல புகழ்பெற்ற சைவ, வைணவ தளங்களில் ஆருத்ரா நடனக் காட்சி என்னும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. ஓர் ஆண்டில் இருமுறை இவ்விழா வருவதையும், அடுத்த ஆண்டில் இவ்விழா வராமல் போவதையும், சில நேரம் ஆண்டில் ஒருமுறை மட்டுமே வருவதையும் கவனித்திருக்கிறீர்களா? சென்ற ஆண்டு (2022) ஆருத்ரா நடனம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு (2023) ஜனரி 6 ஆம் தேதி நடைபெற்றது. மீண்டும் வரும் டிசம்பர் 27 இல் நடைபெற இருக்கிறது. ஆனால் அடுத்த ஆண்டு (2024) நடைபெறாது. ஏன் இப்படி வரவேண்டும்? சற்று விரிவாகப் பார்ப்போமா? தமிழர்கள் இவ்விழாவை என்று கொண்டாட வேண்டும் என்பதைத் 'திருவாதிரை' விண்மீனைக் கொண்டு அறிகின்றனர். முழு நிலவு திருவாதிரை விண்மீன் அருகில் தோன்றும் நாளே "ஆருத்ரா நடனக் காட்சி" நடைபெறும் நாள். திருவாதிரை என்னும் பீட்டில்ஜீயஸ் ஓரையான் உடுக்கணத்தில் உள்ள ஒளி பொருந்திய சிவப்புநிற விண்மீன். ஓரையான் உடுக்கணம் நடனமாடும் மனித உருவில் இருப்பதால் சிவன் ஆடும் நடனமாக பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வு மார்கழி மாதத்தில் முழுநிலவு அன்று அமையும்.
பாவை நோன்பு
மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து இளம்பெண்கள் தங்களது தோழிகளுடன் நீராடி வழிபடும் வழக்கத்தைப் 'பாவை நோன்பு' என்பர். சைவ சமயத்தில் மாணிக்கவாசகர் 'திருவெம்பாவையிலும்', வைணவ சமயத்தில் ஆண்டாள் 'திருப்பாவையிலும்' பாவை நோன்பைக் குறிப்பிடுகின்றனர். இவ்விழா மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாளில் 'ஆருத்ரா தரிசனம்' என்ற பெயரில் நடைபெறுகிறது. அப்போது கடைபிடிக்கப்படும் நோன்பு 'திருவெம்பாவை நோன்பு' எனவும் 'பாவை நோன்பு' எனவும் அழைக்கப்படுகிறது.
"ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து.மா இருந்திங்கள் மறு நிறை ஆதிரை” - பரிபாடல் 11:76-77"மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்!நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!" - திருப்பாவை -1என இலக்கியங்கள் இந்நிகழ்வை சிறப்பிக்கின்றன. வானியல் நோக்கில் இதன் விளக்கத்தைப் பார்ப்போமா?வான்நோக்குவர்களுக்கு ஆரம்பத்தில் எளிதாகக் கண்டுகொள்ளக்கூடியதும் பார்ப்பவர்களின் கருத்தைக் கவரக்கூடியதுமான உடுக்கணங்களுள் ‘ஓரையான்’ (Orion) முதன்மையானது. குளிர்கால வானை அலங்கரிக்கும் இதன் மனிதத் தோற்றமும், பொலிவுமிக்க ‘பீட்டில்ஜீயஸ்’, ‘ரைஜல்’ ஆகிய முதல்தர பொலிவெண் கொண்ட விண்மீன்களும் நமது ஆர்வத்தைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை. தமிழ் மரபில், நடனமாடும் வடிவிலுள்ள மனிதத்தோற்றம்தான் ஓரையான் உடுக்கணம். கிரேக்கர்கள் இதை வேட்டைக்காரன் ஒருவன் தனது வலக்கையில் தடியொன்றைத் தூக்கியவாறும், இடக்கையில் கேடயத்தை ஏந்தியவாறும் நிற்கும் வடிவைப் பார்த்தனர்.பீட்டில்ஜீயஸ் எனப்படும் திருவாதிரைவேட்டைக்காரனின் வலத்தோளில் (நமக்கு இடப்புறம்) சிவப்புநிறத்துடன் பொலிவுடன் விளங்கும் இவ்விண்மீன் நமது சூரியனைவிட 300 மடங்குப் பெரியது. இது 'சூப்பர் ரெட்ஜெயண்ட்’ எனப்படும் 'செம்பூத விண்மீன்' வகையைச் சேர்ந்தது. ஒரு விண்மீன் தொகுதியிலுள்ள விண்மீன்களில், பொலிவு அதிகமாக உள்ள விண்மீனை அத்தொகுதிப் பெயருக்கு முன்னால் ஆல்பா என்ற வார்த்தையைச் சேர்ப்பர். அந்தவகையில் இது 'ஆல்ஃபா ஒரையானிஸ்’ என்ற வானவியல் பெயரைப் பெறுகிறது. தமிழ் மரபில் 'திருவாதிரை’ எனவும் வடநாட்டு மரபில் ‘ஆருத்ரா’ எனவும் வழங்கப்படும் இம்மீன் நம்மிலிருந்து 520 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.கிரேக்கர்கள் ஓரையானை வேட்டைக்காரனாகச் சித்தரித்து பல புராணக்கதைகளை புனைந்தனர். தமிழர்களோ ஓரையானைச் சிவனின் வடிவமாகப் பார்த்தனர். இரு தோள்கள், இருகால்கள் இடுப்பிலுள்ள மூன்று விண்மீன்கள் ஆக ஏழு விண்மீன்களும் ஒரு உடுக்கை வடிவத்திலிருக்கும். இதனைச் சிவன் நடனமாடும் காட்சியாக உருவகப்படுத்தினர்.இடக் காலை தூக்கியபடி ஆடும் தாண்டவம் பிரபஞ்சநடனம் (Cosmic Dance) என அழைக்கப்படுகிறது. திருவாதிரை என அழைக்கப்படும் ஆருத்ரா விண்மீன் அருகே முழுநிலவு தோன்றும் நாளில்தான் 'ஆருத்ரா நடனம்' என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஓரையானின் தோற்றத்தையே சிவன்ஆடிய ஆருத்ரா நடனம் என்றனர். ஆருத்ரா தமிழில் 'மூதிரை' எனவும் அழைக்கப்படுகிறது.ஒரு சுழற்சியை முடிக்க சந்திரனுக்கு 29 நாட்கள், 12 மணிநேரம், 44 நிமிடங்கள், 2.9 வினாடிகளும், பூமியைச் சுற்றி வர 27 நாட்கள், 7 மணிநேரம், 43 நிமிடங்கள் 11.5 வினாடிகளும் ஆகிறது. இவ்வேறுபாட்டின் விளைவாகத் திருவாதிரை அருகே முழுநிலவு வரும் கால இடைவெளி சீராக இல்லாமல் 350 நாட்களிலிருந்து 380 நாட்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் மாறிக்கொண்டு வரும். மார்கழி மாதம் டிசம்பர் - ஜனவரியில் வருகிறதல்லவா? ஜனவரி ஆரம்பத்தில் வரும் ஆண்டில் அதே ஆண்டில் டிசம்பர் கடைசியிலும் வந்துவிடும். அவ்வாறு வருகையில் அடுத்த ஆண்டில் வராது. அந்த வகையில் இந்த ஆண்டு (2023) இரண்டு முறை வருகிறது, மேலும் அடுத்த ஆண்டு (2024) வராது. எந்த ஆண்டில் எப்போது வரும் என்பதை பின்வரும் தளத்தில் காணலாம்.


No comments:
Post a Comment