கிறிஸ்துவ நண்பர்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள். இன்று (09-04-2023) உலகம் முழுவதும் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவ மக்கள் கொண்டாடிவரும் 'ஈஸ்டர் ஞாயிறு' எனப்படும் 'உயிர் மீட்சித் திருநாள்' ஒவ்வொரு ஆண்டும் ஒரே தேதியில் வருவதில்லை. ஏனெனில் இந்நாள் நிலவை அடிப்படையாகக் கொண்டது.
ஈஸ்டர் ஞாயிறு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
"Easter Day is the first Sunday after the full moon which happens upon or next after the 21st day of March; and if the full moon happens upon a Sunday. Easter day is the Sunday after"
(Whitaker's Almanack 1945)
ஒவ்வொரு ஆண்டும் சமபகலிரவு நாளுக்கு (Equinox) பின்னர் வரும் முழுநிலவு நாளைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் நாளாக அறிவிக்கப்படும். மேலும், அந்நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னர் வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும் (Good Friday) கொள்ளப்படும். ஒருவேளை முழுநிலவு ஞாயிற்றுக்கிழமையில் வந்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் நாளாக அறிவிக்கப்படும்.
சமபகலிரவு நாள் (Equinox) மார்ச் 21/22 இல் வருவதால் ஈஸ்டர் மார்ச் 22 இலிருந்து ஏப்ரல் 25 இக்குள் ஒருநாளில் வரும். இந்த ஆண்டு மார்ச் 21 இக்குப் பிறகு முழுநிலவு ஏப்ரல் 7 ஆம் தேதி வந்தது, எனவே 7 ஆம் தேதிக்குப் பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் தேதியில் வருவதனால் 9 ஆம் தேதி ஈஸ்டராகவும், 7 ஆம் தேதியில் வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும் கொண்டாடப்படுகிறது.
இதற்கும் சித்ரா பவுர்ணமிக்கும் என்ன தொடர்பு?
சித்திரை மாதத்தில் வரும் முழுநிலவே சித்ரா பவுர்ணமி. அந்நாளில் முழுநிலவு சித்திரை (Spica) வின்மீண் அருகே இயங்கும். உலக மக்கள் அனைவராலும் ஏதோ ஒருவகையில் சிறப்பாகக் கொண்டாடப்படும் சித்ரா பவுர்ணமி சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவாகக் குறிப்பிடப்படுகிறது.
"சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென" (சிலம்பு 56:64)
அதாவது சித்திரை மாதத்தில் சித்திரை நாள்மீன் அருகே நிலவுத் தோன்றும் நாள். வடநாட்டு நாட்காட்டிகளில் தற்போது நடைபெறும் மாதம் "சைத்ரா" அதாவது சித்திரை மாதம் (தமிழ் நாட்காட்டியில் பங்குனி மாதம்). அதனால் ஏப்ரல் 6 ஆம் தேதி சித்ரா பவுர்ணமியை அவர்கள் கொண்டாடிவிட்டார்கள். ஆனால், தமிழ் நாட்காட்டி அன்றைய நாளை பங்குனி 23 எனக் குறிப்பிடுவதால் தமிழ்நாட்டில் பங்குனி உத்திரமாகக் கொண்டாடினோம். இந்த குழப்பத்திற்குக் காரணம் வடமொழியினர் வானியலை அடிப்படையாகக் கொண்டு நாட்காட்டியில் மாற்றம் செய்துவிட்டனர். தமிழ் நாட்காட்டியில் அத்தகைய திருத்தம் செய்யப்படாததால் 23 நாட்கள் வேறுபாடு உள்ளது. நாட்காட்டியில் செய்யவேண்டிய திருத்தங்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளோம். விரைவில் புத்தகமாக வெளிவரும்.
மற்ற பவுர்ணமிகளைவிட சித்ரா பவுர்ணமிக்கு என்ன சிறப்பு?
நிலவை அடிப்படையாகக்கொண்ட நாட்காட்டிகளில் பவுர்ணமி சிறப்பிடம் பெறுகிறது. அது ஆண்டின் முதல் பவுர்ணமி என்பதால் சித்ரா பவுர்ணமி மற்ற பவுர்ணமிகளிடமிகளைவிட மேலும் சிறப்பைப் பெறுகிறது. அப்படியானால் தை மாதம் ஆண்டின் முதல் மாதம் இல்லையா? என்ற ஐயம் இயல்பாக எழும். அது தனி ஆய்வு, அதுகுறித்து விரிவாகப் பின்னர் பார்ப்போம்.
- பாலா பாரதி


No comments:
Post a Comment