அதிகாலையில் இளம்பெண்கள் துயிலெழுந்து குளிர்ந்த நீர்நிலைகளில் நீராடித் தங்களுக்கு நல்ல துணையை அருளுமாறு இறைவனிடம் வேண்டும் வழக்கம் சங்ககாலம் முதற்கொண்டு இருந்துவருகிறது.
“இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇ
பெருந்தோட் குறுமகள் அல்லது
மருந்து பிறிது இல்லையான் உற்ற நோய்க்கே" (நற்றிணை:80:6-8)
நல்ல கணவனைப் பெறவேண்டி, தன் தோழிகளைக் கூட்டிக் கொண்டு தைத் திங்களில் குளிர்ந்த நீரால் நிரம்பிய குளத்தில் நீராடி நோன்பிருந்த ஒரு பெண்ணைப் பற்றி நற்றிணை கூறுகிறது.
"செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்
கண்ணிற் காணின் என்னாகுவள் கொல்?
நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போலப்
பலர்படிந்து உண்ணும்நின் பரத்தை மார்பே" - ஐங்குறுநூறு : 84
மகளிர் பலர் கூடி நீராடும் தைத் திங்களைப் பற்றி மேற்கண்ட பாடலில் புலவர் கூறுகிறார். இதனைப் பரிபாடல் 'அம்பா ஆடல்' எனக் குறிப்பிடப்படுகிறது. இளம்பெண்கள் தம் அன்னையர் அருகிலிருக்க நீராடுவதால் அம்பா ஆடல் என்று அழைக்கப்பட்டதாகக் தமிழறிஞர்கள் பலர் விளக்கமளித்துள்ளனர். அம்பா என்பதற்கு அம்பாள், அன்னை என்று பொருள் சொல்லப்படுகிறது.
"வையெயிற் றவர்நாப்பண் வகையணிப் பொலிந்துநீ
தையில் நீராடிய தவம் தலைப் படுவையோ' - கலித்தொகை 59:12-13
இப்பாடலில் தலைவி தனது காதலில் அக்கறைக் காட்டாததால் தலைவன் குறையாக அவளை நோக்கிக் கூறும்போது தைநீராடல்பற்றிக் கூறுவதாக உள்ளது.
"இன்ன பண்பின் நின்தைந் நீராடல்
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட" - பரிபாடல் 11:134-135
"நீ தக்காய் தைந்நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும்'' - பரிபாடல் 11:115
"தாய் அருகா நின்று தவத் தைந்நீராடுதல்
நீ உரைத்தி, வையை நதி” - பரிபாடல் 11:91-92
எனத் தைந்நீராடலை உயர்த்திப் பல இடங்களில் பாடியியுள்ளனர்.
தைநீராடல் வழக்கம் இன்று இல்லை, ஏன்?
மார்கழி நீராடலை சங்கஇலக்கியங்கள் ஏன் குறிப்பிடவில்லை?
சங்க இலக்கியங்களில் போற்றிப் பாடப்பெற்ற தைந் நீராடல் என்னும் விழா கைவிடப்படவில்லை. அவ்விழா தற்போது மார்கழி நீராடல் என்ற பெயரில் தொடர்கிறது. ஏன் மாதத்தின் பெயரை மாற்றிக் கொண்டாடுகின்றனர் இதற்கான பதில் எளிமையானது.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து இளம்பெண்கள் தனது தோழிகளுடன் நீராடி வழிபடும் வழக்கத்தைப் 'பாவை நோன்பு' என்பர். சைவ சமயத்தில் மாணிக்கவாசகர் திருவெம்பாவையிலும், வைணவ சமயத்தில் ஆண்டாள் திருப்பாவையிலும் பாவை நோன்பைக் குறிப்பிடுகின்றனர். இவ்விழா மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாளில் 'ஆருத்ரா தரிசனம்' என்ற பெயரில் நடைபெறுகிறது. அப்போது கடைபிடிக்கப்படும் நோன்பு 'திருவெம்பாவை நோன்பு' எனவும் 'பாவை நோன்பு' எனவும் அழைக்கப்படுகிறது.
சங்ககாலத்தில் கடைபிடிக்கப்பட்ட தைநீராடல், பக்தி இயக்கக் காலத்தில் மார்கழி நீராடலாக மாறியுள்ளது. இவ்விழாவின் பெயர் மாதத்தின் பெயரால் அமைந்தாலும், வானியலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதாவது தமிழர்கள் இவ்விழா என்று கொண்டாடவேண்டும் என்பதை, முழுநிலவு எந்த விண்மீனின் அருகே தோன்றுகிறது என்பதைக்கொண்டு அறிகின்றனர். முழு நிலவு திருவாதிரை விண்மீன் அருகில் தோன்றும் நாளில் இவ்விழா கடைபிடிக்கப்படுகிறது.
"ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து.
மா இருந்திங்கள் மறு நிறை ஆதிரை” - பரிபாடல் 11:76-77
சங்ககாலத்தில் தைமாதத்திற்கான முழு நிலவு திருவாதிரையை அருகே தோன்றியது , ஆனால் தற்போது திருவாதிரை அருகே முழுநிலவு மார்கழி மாதத்தில் தோன்றுகிறது.
"மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!" - திருப்பாவை -1
பக்தி இலக்கியக் காலத்திலிருந்து திருவாதிரை அருகே முழுநிலவு மார்கழி மாதத்தில் தோன்றியது என ஆண்டாள் கூறுவதிலிருந்து தெரிகிறது. நிலவின் இயக்கத்திலேயோ, புவியின் இயக்கத்திலேயோ எந்த மாறுதலும் ஏற்படவில்லை. மேலும் இதுபோன்ற நீராடல் விழாக்கள் அடுத்தடுத்த மாதங்களில் வராது. தமிழ் நாட்காட்டியில் உள்ள ஒரு குறையினால் தமிழ்நாட்காட்டி ஒரு மாதம் அளவிற்கு முன்னோக்கி நகர்ந்துவிட்டதுதான் காரணம். நாட்காட்டி ஒருமாதம் அளவிற்கு முன்னோக்கி நகர்ந்தால் கடைபிடிக்கப்படும் நாள் ஒருமாத அளவிற்கு பின்னோக்கி வந்துவிடும்.
- பாலா பாரதி
குறிப்பு: தற்போது மார்கழி மாதம் நடைபெறுகிறது. மார்கழி 22 (06-01-2023) பௌர்ணமி வருகிறது. அன்று மாலை கிழக்கு வானில் ஓரையான் உடுக்கணம் உயர்ந்திருக்கும். இவ்வுடுக்கணத்திலுள்ள சிவப்பு நிற விண்மீனே திருவாதிரை (Betelgeuse). இதனருகே நிலவு இருப்பதைக் காண்பீர்கள். நிலவின் ஒளியால் திருவாதிரையைப் பார்ப்பது கடினமாக இருந்தாலும் பார்க்கமுடியும்.


No comments:
Post a Comment