தமிழர்கள் பத்தாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே நிலவின் பிறைகளைக் கொண்டு சந்திர நாட்காட்டியைப்
பயன்படுத்தினர் என்று தமிழ்நாட்டில் காணப்படும் பாறை ஓவியங்களில் இருந்து
தெரிகிறது. பின்னர் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனின் இயக்கத்தை
நுட்பமாகக் கணித்துச் சூரிய நாட்காட்டியை உருவாக்கிக் கொண்டனர். பன்னிரண்டு
மாதங்களின் பெயர்களை, சூரியன் இயங்கும் உடுக்கணத்தின் பெயர்களாகக் கொண்டிருந்தனர்.
சூரியன் மேழத்தில் இயங்கும் மாதம் மேழம், விடையில் இயங்கும் மாதம் விடை, இதுபோல
ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம்
என பன்னிரண்டு மாதங்களின் பெயர்களை வைத்திருந்தனர். சித்திரை, வைகாசி
வடமொழியினர் பயன்படுத்திய சந்திர நாட்காட்டியின் மாதங்களின் பெயர்களிலிருந்து
பெறப்பட்டவை.
தமிழர்களின் சூரிய நாட்காட்டியுடன் வடமொழியினரின் சந்திர நாட்காட்டி இணைந்து இன்றைய தமிழ் மாதங்களின் பெயர்கள் கிடைத்தன. சற்று விரிவாகப் பார்த்தால்தான் புரியும். கில்பர்ட் சிலேட்டர் “ ... இதுபோலவே தமிழ் ஆண்டுத்தொகுப்புமுறை (பஞ்சாங்கம்) ஆராய்ச்சிக்கு நல்ல தூண்டுதல் தரத்தக்கதாயுள்ளது. இன்று இத்துறையில் இரண்டு முறைகள் வழங்குகின்றன : ஒன்று சமயத்துறை சார்ந்தது, மற்றொன்று வாழ்க்கைத்துறை சார்ந்தது. சமயத்துறை சார்ந்த ஆண்டுத்தொகுப்பு முறை, தெலுங்குப் பஞ்சாங்கம் உட்பட எல்லா ஆசியப் பஞ்சாங்கங்களையும் போலவே மதிமுறை சார்ந்தது. இதுபற்றித் தனிப்படக் குறிப்பிட எதுவுமில்லை. ஆனால், சமயஞ் சாராத ஆண்டுத்தொகுப்பு ஞாயிற்றுச் சார்பானது மட்டுமன்று, முழுநிறை முறையிலேயே ஞாயிற்று வழியாய் அமைவது. அது மேனாட்டு முறைபோல, மதிய முறைப்படி முதலில் கணிக்கப்பட்ட மாதத்தை ஞாயிற்று முறைப்படி கணித்த ஆண்டுடன் பிற்காலத்தில் கொண்டு ஒட்டவைத்த முறையல்ல. சற்றும் மட்டுமழுப்பலில்லாமல் அது வியக்கத்தக்கவகையில் முனைத்த ஞாயிற்று முறையாயுள்ளது. ஏனெனில், அது ஒரு மாதத்தை இத்தனை முழு நாட்கள் என்றுகூட வகுத்தமைப்பதில்லை.” என்கிறார் .
பன்னிரண்டு இராசிகளும், இருபத்து ஏழு விண்மீன்களும் படத்தில் காட்டியவாறு அமைந்துள்ளன. சூரியன் மேழ இராசியில் இயங்கும் மாதம் சித்திரை எனப்படுகிறது. மாதத்தின் பெயர் எவ்வாறு பெறப்படுகிறது எனில் அந்த மாதத்தின் முழுநிலவு எந்த விண்மீனுக்கருகில் இயங்குகிறதோ அந்த விண்மீனின் பெயரால் அம்மாதம் அழைக்கப்படுகிறது. முழு நிலவு அன்று சூரியனும் நிலவும் நேரெதிராக இருக்கும் என நமக்குத் தெரியும். சூரியன் மேழத்தில் இருக்கும்போது மேழத்திற்கு நேரெதிராக இருக்கும் சித்திரை விண்மீனுக்கருகே முழுநிலவு வருவதால் அம்மாதம் சித்திரை எனப் பெறுகிறது. மேலும், அந்த நாளே சித்திரா பௌர்ணமியாகும். இங்கு ஒரு செய்தியைக் கவனிக்க வேண்டும். சித்திரா பௌர்ணமியன்று மாதம் ஆரம்பிப்பதில்லை மாதம் ஏற்கனவே சூரியன் மேழத்தில் நுழைந்தபோதே ஆரம்பித்துவிட்டது. அந்த மாதத்தின் முழுநிலவு அந்த மாதத்தில் ஏதோ ஒரு நாளில் வரும் அப்போது முழுநிலவு எந்த விண்மீன் அருகில் இருக்கிறது என்பதைப் பொறுத்து மாதத்தின் பெயர் கொடுக்கப்படுகிறது. இதேபோல் இரண்டாவது மாதத்தில் சூரியன் விடை (ரிஷபம்) இராசியில் இயங்கும். இந்த மாதத்தின் முழுநிலவு விசாகம் விண்மீனுக்கருகே இருக்கும் எனவே இரண்டாவது மாதம் வைகாசி (வைஸாக) எனப் பெயர் பெறுகிறது. இவ்வாறே மூன்றாவது மாதம் ஆனி எனவும் தொடர்ந்து மற்ற மாதங்களின் பெயர்கள் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி எனவும் பெயர்களைப் பெறுகின்றன.
- பாலா பாரதி

No comments:
Post a Comment