2023 ஆண்டின் முக்கியமான முதல் வானியல் நிகழ்வான வால்விண்மீனின் (வால் நட்சத்திரம்) வரவைப் பார்க்கத் தயாரா...?
வால்விண்மீன் C/2022 E3 (ZTF) இப்போது நாம் பார்க்கும் வகையில் தெரிகிறது... ஆம்...தற்போது இது பூமியை நெருங்கி வந்திருக்கிறது. பூமிக்கு மிக அருகில் வந்திருப்பதால் இதை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
வால்விண்மீன்கள் அல்லது வால் நட்சத்திரங்கள் என்றால் என்ன?
இரவு வானை அலங்கரிக்கும் வான்பொருட்களில் வால்விண்மீன்களுக்குச் சிறப்பிடம் உண்டு. திடீரென வானில் வாலுடன் தோன்றிச் சில நாட்களில் மறைந்துவிடும் இவற்றை முற்காலத்தில் மக்கள் அச்சத்துடனேயே பார்த்துள்ளனர். பேரழிவிற்கான சகுனங்களையும், கெட்டச் செய்திகளையும் தாங்கிவரும் தூதர்களாகப் பெரும்பாலான மக்கள் இவற்றைப் பார்த்தனர். தமிழ் மரபில் வால்விண்மீன்களின் வரவு மன்னனுக்கு நடைபெறப்போகும் கேட்டை முன்னமே அறிவிக்கும் சகுனமாகப் பார்க்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஆரம்பத்தில் கமல் 'வாய்ஸ் ஓவரில்' ஒரு வால்நட்சத்திரம் வந்திருப்பதாகவும் அதனால் சோழ மன்னனுக்கு ஆபத்து விளையலாம் என்று சோதிடர்கள் கணிப்பதாகவும் கூறுவார். இதுபோன்ற கருத்துகள் உலகின் பலபகுதிகளிலும் நிலவியிருந்ததை வரலாற்றில் காணலாம். இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் நல்ல செய்தியைத் தாங்கிவந்ததாக நம்பப்பட்ட வால்விண்மீன்களும் உண்டு.
வால்விண்மீன்களைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலிருந்து பாரதியார் பாடல்கள்வரைக் கிடைக்கின்றன. அறிவியல் வளர்ச்சிக் காரணமாக இன்று நமக்கு இவற்றைப் பற்றி நிறைய தெரியும். அவை எங்கிருந்து வருகின்றன, எப்போது வருகின்றன என்பனவற்றை எல்லாம் நாம் தற்போது அறிந்து வைத்துள்ளோம்.
வால் நட்சத்திரங்கள் எனப்படும் இவ் வால்விண்மீன்கள் நீர், மீத்தேன், அம்மோனியா, கார்பன்டை ஆக்சைடு ஆகியவற்றின் உறைபனியாலும், தூசி மற்றும் பாறைப் பொருட்களாலும் ஆனவை. எனவே, ஒரு வால்விண்மீனை உறைந்த நீரிலான பனிக்கட்டி, உறைந்த வாயுக்களிலானப் பனிகட்டி, தூசித் துகள்களின் கலவை எனக் கூறலாம். விண்மீன்களைப் போன்று இவற்றுக்கு சுயஒளி கிடையாது.
ஆங்கிலத்தில் இவை காமெட்(Comet) என அழைக்கப்படுகின்றன. காமெட் என்ற பெயர் கிரேக்கத்தில் 'கோமட்டா' என்றச் சொல்லிலிருந்து வந்துள்ளது. இதற்கு 'நீண்டமுடியை உடைய' என்று பொருள். பார்க்கப்படும் பொருள் பார்ப்பவரின் பார்வையைப் பொருத்து பெயர்பெறும். இவற்றின் நீண்ட வால் நீண்டத் தலைமுடியைப் போலக் காணப்பட்டதால் இவ்வாறு பெயரைப் பெற்றிருக்கிறது.
இவற்றை வானில் நேரடியாகக் காண்பது ஒருவரின் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக அமையும். அத்தகைய நல்வாய்ப்பு ஒன்று தற்போது உருவாகியுள்ளது.
என்ன நண்பர்களே C/2022 E3 (ZTF) யைக் காணத் தயாராகிவிட்டீர்களா...?
எங்கே... எப்போது... பார்க்க வேண்டும்?
இப்போது வந்துள்ள வால்விண்மீனை எப்போது பார்க்க வேண்டும்?
2023 ஜனவரி கடைசிவாரத்திலிருந்து பிப்ரவரி முதல் வாரம் வரை உள்ள நாட்கள் இதைப் பார்க்க ஏற்றவை. பிப்ரவரி1, 2 ஆம் தேதிகளில் பூமிக்கு அருகில் 26 மில்லியன் மைல் (42 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் இயங்கும். பெரும்பாலான வால்விண்மீன்கள் பூமிக்கு அருகில் இருந்தாலும் சூரியனை நெருங்கியிருக்கும் அதனால் பார்க்க கடினமாக இருக்கும். ஆனால் இது பூமிக்கு அருகே வரும்போது நன்றாகப் பார்க்கும்படி இருக்கும். ஆனால் உங்களுக்கு இடர்பாடாக இருக்கப்போவது நிலவு. ஜனவரி 29, 30 தேதிகளில் இரவு பன்னிரண்டு மணியிலிருந்து விடியும் வரைப் பார்க்கலாம். பிப்ரவரி 1, 2 தேதிகளில் இரவு முழுவதும் வடக்கு வானில் தெரிந்து கொண்டிருக்கும், ஆனால் அந்த நாட்களில் நிலவு ஒளிபொருந்திய நிலையில் இருப்பதால் பார்ப்பது கடினம். எனவே நிலவு மறைந்த பின்னர் விடியற்காலை நான்கு மணியிலிருந்து சூரியன் உதிக்கும் வரைக் காணலாம்.
எந்தத் திசையில் பார்க்க வேண்டும்?
வடக்குவானில் இதைப் பார்க்கவேண்டும். ஜனவரி 29, 30 தேதிகளில் வடக்கு வானில் துருவ விண்மீனுக்கு (Polaris) கிழக்கே 10° தொலைவில், பூமியிலிருந்து 15° உயரத்தில், +5.6 ஒளிர்வுத் திறனுடன் காட்சியளிக்கும். இரவு முழுவதும் தெரிந்தாலும் இரவு பன்னிரண்டு மணிவரை நிலவின் ஒளியினால் தெளிவாகப் பார்க்க முடியாது. எனினும் இரவு பன்னிரண்டு மணிக்குமேல் விடியும் வரை இதைப் பார்க்க நீண்ட நேரம் நமக்குக் கிடைக்கும். இவ்வாறு நீண்ட நேரம் கிடைப்பது அரிதானது. பிப்ரவரி 1, 2 தேதிகளில் நிலவு மறைவதற்குச் சற்று நேரமாகும், எனவே விடியற்காலை நான்கு மணியிலிருந்து சூரிய உதயம்வரைக் காணலாம்.
(படம் இணைக்கப்பட்டுள்ளது, அதைப் பார்த்துக்கொள்ளவும்)
இவற்றை ஏன் பச்சை வால்விண்மீன் (Green Comet) என அழைக்கின்றனர்?
தற்போது வந்துள்ள C/2022 E3 (ZTF) தலைப் பகுதியில் கார்பன்-கார்பன், கார்பன்-நைட்ரஜன் பிணைப்புகள் உள்ளதால் பச்சை நிறத்தில் ஒளிரும். எனவேதான் இதை பச்சை வால்விண்மீன் (Green Comet) என அழைக்கின்றனர். பெரும்பாலும் எல்லா வால்விண்மீன்களும் பச்சை நிறத்தில் ஒளிர்பவையே.
வால்விண்மீன்களுக்கு மட்டும் எப்படி வால் முளைக்கிறது?
வால்மீன்கள் நமது சூரியக் குடும்பத்தின் ஒரு அங்கம் ஆகும். இவை சூரியனை நீள்வட்டப் பாதை (Elliptical path), பரவளை (Parabolic path) எனப்படும் மிக நீண்டப் பாதையில் சுற்றி வருகின்றன. இவை சூரியனுக்கு அருகில் வரும்போதுதான் வால் போன்ற அமைப்பு உருவாகிறது.
இவற்றின் தலைப் பகுதி உறைந்த பனிக்கட்டியாக இருக்கும். சூரியனிலிருந்து தொலைவில் இருக்கும்போது இவற்றிற்கு வால் இருக்காது. சூரியனை நெருங்கும் வேளையில் சூரியனின் வெப்பத்தால் தலைப்பகுதியிலுள்ள பொருட்கள் ஆவியாகின்றன. தலைப்பகுதி தொடர்ந்து நகர்வதால் ஆவியான வாயுப் பொருட்கள் பின்னோக்கி வால்போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. புகைவண்டி வேகமாகச் செல்லும்போது புகை பின்னோக்கித் தள்ளப்படுவதைப் போலச் சூரியன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் வால் தோன்றும்.
சூரியனை 3 வானியல் அலகுகள் (3- AU) (AU - Astronomical Unit, 1 AU = சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட சராசரித் தூரமான 15 கோடி கிலோமீட்டர்) தூரத்தை நெருங்கும்போது சூரியனின் வெப்பத்தால் தலைப் பகுதியிலுள்ள பனிப்பொருட்கள் ஆவியாகி எதிர்திசையில் வால் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
இவை எங்கிருந்து வருகின்றன?
பெரும்பாலான வால்மீன்கள் நமது சூரிய மண்டலத்தில் புளுட்டோவிற்கு அப்பால் உள்ள குய்ப்பர் பட்டை (Kuiper Belt) மற்றும் ஊர்ட் மேகம் (Oort Cloud) ஆகிய பகுதிகளிலிருந்து வருபவைகளாக உள்ளன. வியாழன் கோளுக்கு அருகிலிருந்து வரும் குறைந்த சுற்றுக்காலங்களைக் கொண்ட வியாழக் குடும்ப வால்மீன்களும் உண்டு.
குய்ப்பர் பட்டை (Kuiper Belt)
நமது சூரிய மண்டலத்தில் புளுட்டோவிற்கு அப்பால் 30 இலிருந்து 50 வானியல் அலகுகள் (Astronomical Unit) தொலைவில் உள்ள பகுதி குய்ப்பர் பட்டை (Kuiper Belt) என்று அழைக்கப்படுகிறது. ஜெரால்டு குய்ப்பர் என்ற வானவியலாளர் இதை 1992 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அதனால் இவர் பெயரிலேயே இது அழைக்கப்படுகிறது.
இங்குச் சிறியதும், பெரியதுமான பாறைப் பொருட்கள் நிறைய உள்ளன. இப்பாறைப் பொருட்கள் உலோகங்கள், எளிதில் ஆவியாகக் கூடிய மீத்தேன், அம்மோனியா போன்ற வாயுக்கள் உறைந்த நிலை ஐஸ்கட்டிகளாலும் ஆனவை. இங்குள்ள பொருட்கள் அனைத்தும் சேர்ந்து டோனெட் வடிவில் (டோனெட்டா...? அதாங்க நம்ம ஊரு உளுந்த வடை) இருக்கும். இங்கிருப்பவை நமது சூரியக் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் இவையும் சூரியனைச் சுற்றிவருகின்றன. இவை சூரியனைச் சுற்றும் காலம் 200 ஆண்டுகளுக்குள் இருக்கும். நமது சூரியக் குடும்பத்தின் கடைக்குட்டிக் குள்ளக் கோளான புளூட்டோ(Pluto) இப்பகுதியிலிருந்துதான் இயங்குகிறது.
புளூட்டோ மட்டுமல்ல ஹௌமியா, எரிஸ், ஸெட்னா, மேக்மேக் போன்ற குள்ளக் கோள்களும் இப்பகுதியிலிருந்தான் இயங்குகின்றன. இது 460 கோடி ஆண்டுகளுக்கு முன் நமது சூரியக் குடும்பம் உருவாகியபோது மீதமான சிறு சிறு பொருட்களால் ஆனது. இங்குள்ள பொருட்கள் குய்ப்பர் பட்டைப் பொருட்கள் ( KBo - Kuipper Belt Objects) என அழைக்கப்படுகின்றன.
2015 ஜூலை மாதம் அமெரிக்கா ஏவிய நியூ ஹொரைசான்ஸ் (New Horizons mission) என்ற விண்கலம் புளூட்டோவின் மேலாகப் பறந்துச் சென்றது. அது குய்ப்பர் பட்டையை ஆய்வு செய்தது. மார்ச் 2019 ஏவப்பட்ட நியூ ஹொரைசான்ஸ் பூமியிலிருந்து 66 கோடி கிலோமீட்டர் தொலைவில் இயங்கியது, மணிக்கு 53,000 கிலோமீட்டர் வேகத்தில் குய்ப்பர் பட்டையின் ஆழமானப் பகுதிக்குள் சென்றது. மேலும் கூடுதல் குய்ப்பர் பட்டைப் பொருட்களை ஆராய்வதற்காக நியூ ஹொரைசான்ஸ் பணி தற்போது 2021 வரை நீட்டிக்கப்பட்டது.
ஊர்ட் மேகங்கள் (Oort Clouds)
நமது சூரிய மண்டலத்தில் குய்ப்பர் பட்டைகளைத் தாண்டி 2,000 இலிருந்து 2,00,000 வானியல் அலகுகள் வரை பரவியுள்ள வால்விண்மீன் கூட்டத்திற்கு ஊர்ட் மேகங்கள் (Oort Clouds) என்று பெயர். இதை 1950 ஆம் ஆண்டு டச்சு நாட்டை சார்ந்த ஜான் ஊர்ட் (John Oort) என்பவர் கண்டுபிடித்தார். அதனால் இவை ஊர்ட் மேகங்கள் என அழைக்கப்படுகின்றன.
இது தட்டையான வட்டு வடிவிலான உட்பகுதியையும் கோள வடிவிலான வெளிப் பகுதியையும் கொண்டுள்ளது. இப்பகுதிதான் நமது சூரியக் குடும்பத்தின் எல்லையாக விளங்குகிறது. ஊர்ட் மேகங்களின் இருப்பை நம்மால் நேரில் பார்த்து உறுதி செய்யமுடியவில்லை, எனினும் அதன் இருப்பை கொள்கை ரீதியில் விளக்க முடிகிறது. சுற்றுக் காலம் 200 மேல் உள்ள வால்மீன்கள் இங்கிருந்துதான் வருகின்றன.
இங்கிருந்து வரும் வால்விண்மீன்களின் மையத் தொலைவுத் தகவு ஒன்றுக்கு அருகில் இருப்பதால் இவற்றின் பாதை பரவளையில் அமைகிறது. அதனால் பெரும்பாலானவை ஒருமுறை மட்டும் சூரியனுக்கருகில் வரும் வால்மீன்களாக அமைகின்றன.
தற்போது வந்துள்ள C/2022 E3 (ZTF) இம் இத்தகையதே. இதன் சுற்றுக்காலம் 50,000 ஆண்டுகளாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 25,000 ஆண்டுகளுக்கு முன்னர் அதனிடத்திலிருந்து புறப்பட்ட இவ்வால்விண்மீன் தற்போதுதான் சூரியனை நெருங்கி வருகிறது. அடுத்த 25,000 ஆண்டுகளில் அதனிடத்திற்குப் போய்விடும். இது மீண்டும் இங்கே வரவேண்டுமெனில் அதற்கு மேலும் 50,000 ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் அதற்குள் அது அழிந்துவிட்டிருக்கும். சென்றமுறை அதாவது 50,000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இது பூமியை நெருங்கி வந்தபோது பூமியில் ஹோமோ சேப்பியன்களும் (நாமதான்), நியாண்டர்தால்களும் வாழ்ந்துகொண்டிருந்ததைப் பார்த்திருக்கும். தற்போது பூமியைப் பார்த்து அடடா பூமியில் எவ்வளவு மாற்றங்கள் என வியந்துபோகும்.
அமைப்பு
ஒரு வால்விண்மீனுக்கு உட்கரு(Nucleus), தலை(Coma), வால்(Tail) என மூன்று பகுதிகள் இருக்கும். சூரியனிலிருந்து மூன்று வானியல் அலகுகள் (AU) தொலைவை எட்டும்போது உட்கருவிற்குமேல் உறைந்திருக்கும் பனிப்பொருட்கள் ஆவியாக்கப்பட்டு, இந்த ஆவியானது உட்கருவைச் சுற்றி ஒரு பெரிய வாயுமண்டலம் போன்று காட்சியளிக்கிறது. இந்த வாயுக்களாலான உருண்டை தலைப்பகுதி (Coma) என்றழைக்கப்படுகிறது. வால்விண்மீன்கள் கோள்களை ஒப்பிடும்போது சிறியவை. இவற்றின் உட்கருக்கள் சிறியதாக இருந்தாலும் நன்றாக பிரகாசிப்பவை.
உட்கரு (Nucleus)
உட்கருவானது உறைந்த நிலையில் வாயுக்கள், தூசிகள், பாறைப் பொருட்களால் ஆனது. பத்து முதல் நூறு கிலோமீட்டர் வரை விட்டம் கொண்டது.
தலை (Coma)
கருவைச் சுற்றியுள்ள ஆவியாக்கப்பட்ட வாயுமண்டலம் தலையாக விளங்குகிறது . தொலைநோக்கி வழியே பார்க்கும்போது கலங்கலாகக் காட்சியளிக்கிறது. இதன் நிறம் அங்குள்ளப் பொருட்களைப் பொருத்து அமைகிறது. இப்போது வந்துள்ள வால்விண்மீனின் நிறம் பச்சையாக இருக்கும். அதனால்தான் இதை 'பச்சை வால்நட்சத்திரம்' என்று அழைக்கின்றனர்.
வால் (Tail)
ஒரு வால்விண்மீனின் நன்றாகத் தெரியும் பகுதி அதன் வாலாகும். தூசிவால், அயனிவால் என இரு வகையிலான வால் இருக்கும். சூரிய வெப்பத்தால் தலைப் பகுதியிலிருக்கும் வாயுக்கள் இது விரைந்து நகர்வதால் தூக்கி எறியப்பட்டு தூசிவாலாகத் தெரியும். இது மிக நீளமாகவும் சற்று வளைந்தும் காணப்படும். தலையிலுள்ள வாயுக்கள் அயனிகளாகவும் இருப்பதால் இதற்கு அயனிவாலும் ஏற்படும். இது நீளமாகவும் நேராகவும் காட்சியளிக்கும்.
வால்விண்மீன்களில் எத்தனை வகைகள் உண்டு?
நீண்டகாலத்திற்கு ஒரு முறை வந்து செல்பவை, குறுகிய காலத்தில் வந்து செல்பவை, சூரியனுக்கு அருகே வரும்போது மறைந்து போகின்றவை. பாதையைச் சரியாக கணக்கிட முடியாதவை எனப் பலவகைகள் உண்டு. இவற்றில், குறைந்த காலத்தில் சூரியனைச் சுற்றுபவையின் சுற்றுக்காலம் மூன்று ஆண்டு முதல் இருநூறு ஆண்டுவரை இருக்கும்.
6 ஆண்டுக்கும் குறைவாக 126 வால்விண்மீன்களும்,
6 -12 ஆண்டு 839 வால்விண்மீன்களும்,
12 - 24 ஆண்டு 2670 வால்விண்மீன்களும்,
24 - 100 ஆண்டு 50 வால்விண்மீன்களும்,
100 -1000 ஆண்டு 20 வால்விண்மீன்களும்,
1000 – 10000 ஆண்டு 30 வால்விண்மீன்களும்அடையாளம் காணப்பட்டுள்ளன.
1864 ஆம் ஆண்டு தோன்றிய ஒரு வால்விண்மீன் 20 இலட்சம் ஆண்டுக்கு பிறகே மறுபடியும் தோன்றும் என்றும் கணக்கிட்டிருக்கிறார்கள்.
வால்விண்மீன்கள் எவ்வாறு பெயரிடப்படுகின்றன?
அனைத்து வால்விண்மீன்களுக்கும் ஒரு பெயரும், எண்ணும், கொடுக்கப்பட்டிருக்கும். எண்களால் கொடுக்கப்படும் பெயர்களின் முதல் எழுத்து அதன் வகையையும், அடுத்தப்பகுதி கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டையும் மூன்றாவது பகுதி கண்டுபிடிக்கப்பட்ட மாதத்தின் பகுதியையும், கடைசியாகக் குறிக்கப்படும் எண் அது அம்மாதத்தின் எத்தனையாவது வான்பொருள் என்பதையும் குறிக்கும்.
வால்மீன்களில் C , P , D , X என வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன.
C - என்பது நீண்டகாலத்திற்கு ஒரு முறை வந்து செல்லும் வால்விண்மீன்.
P - என்பது குறுகிய காலத்தில் வந்து செல்லும் வால்விண்மீன்.
D - என்பது சூரியனுக்கு அருகே வரும்போது மறைந்து போகும் வால்விண்மீன்.
X - என்பது பாதையைச் சரியாகக் கணக்கிட முடியாத வால்விண்மீன்.
ஆண்டுக்குப் பிறகு வரும் ஒற்றை ஆங்கில எழுத்து கண்டுபிடிக்கப்பட்ட மாதத்தின் பகுதியைக் குறிக்கும்.
A - ஜனவரி 1 - 15
B - ஜனவரி 16 – 31
C - பிப்ரவரி 1 – 15
D - பிப்ரவரி 16 – 27
E - மார்ச் 1 – 15
F - மார்ச் 16 – 31
G - ஏப்ரல் 1 – 15
H - ஏப்ரல் 16 - 30
I - - -
J - மே 1 – 15
K - மே 16 - 31
L - ஜுன் 1 - 15
M - ஜுன் 16 - 30
N - ஜுலை 1 – 15
O - ஜுலை 15 – 31
P - ஆகஸ்ட் 1 – 15
Q - ஆகஸ்ட் 16 – 31
R - செப்டம்பர் 1- 15
S - செப்டம்பர்16 – 30
T - அக்டோபர் 1 – 15
U - அக்டோபர்16 - 31
V - நவம்பர் 1 – 15
W - நவம்பர் 16 – 30
X - டிசம்பர் 1 – 15
Y - டிசம்பர் 16 - 31
Z - - -
(I இம் Z இம் மாதங்களைக் குறிக்க பயன்படுத்தப்படுவதில்லை)
எடுத்துக்காட்டாக ஒரு வால்விண்மீனுக்கு C\2021 A1 (Leonard) என பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் C\2021 A1 (Leonard) என்பதிலிருந்து இது நீண்ட காலத்திற்குப் பிறகு திரும்ப வரும் வால்விண்மீன் என்றும், 2021 ஆண்டின் ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வான்பொருள்களுள் முதலாவது இது எனவும், இதைக் கண்டுபிடித்தவர் லியோனார்டு எனவும் புரிந்துகொள்கிறோமல்லவா..!
அதுபோல C\2019 Y4 என்பதிலிருந்து, இது நீண்ட காலத்திற்குப் பிறகு திரும்ப வரும் வால்விண்மீன் என்றும், 2019 ஆண்டின் டிசம்பர் மாதப் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வான்பொருள்களுள் நான்காவது எனவும் தெரிந்துகொள்ளலாம்.
இதுபோல C/2014 Q2 (Lovejoy) , C/2011 L4 (PANSTARRS) என்ற பெயர்களிலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொள்கிறீர்கள்? (இங்கு PANSTARRS – PANoramic Survey And Rapid Response System என்பது நிறுவனத்தின் பெயர்.)
சில ஆண்டுகளுக்கு முன் வந்த வால்மீன்கள்
C\2019 Y4 (ATLAS) ATLAS - Asteroid Terrestrial-impact Last Alert System.
C\2012 S1(ISON). ISON- International Scientific Optical Network.
தற்போது வந்துள்ள வால்விண்மீனுக்கு C/2022 E3 (ZTF) என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிலிருந்து இது 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் பாதியில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது வான்பொருள் எனப் புரிந்துகொள்ளலாம். ZTF - Zwicky Transient Facility (wide-field survey camera)
உடல்கூறு
√ எல்லா வால்விண்மீன்களும் பெரும்பாலும் பனியுடன் சேர்ந்த தூசுப் பொருட்களால் ஆனவை.
√ ஒழுங்கற்ற கரடுமுரடான மேற்பரப்பைக் கொண்ட பாறைப் பொருள்களான பனிப்பந்தைப் போன்றவை.
√ ஒளியை மிகவும் குறைவாகப் எதிரொளிக்கக் கூடியவை.
√ இவற்றின் உட்கருவின் அளவிற்கும் அவை சூரியனை நெருங்கும்போது ஒளிர்தலுக்கும் தொடர்பில்லை.
√ சூரியனை நெருங்கும்போது பனி ஆவியாகி வாயுக்களும், தூசுப்பொருட்களும் வெளியிடப்படுகின்றன.
√ வால் பகுதி சூரியனை நெருங்கும்போது மட்டும்தான் உருவாகும். சூரியனை விட்டு விலகிச் செல்லும்போது மறைந்துவிடும்.
√ உட்கரு சூடாகும்போது பனி ஆவியாகி தலை உருவாகிறது. இந்தத் தலை தூசுப் பொருட்களாலான ஒளிமிக்க கோள வடிவம் கொண்டது.
√ நீர், மீத்தேன், கார்பன்டை ஆக்ஸைடு ஆகிய பொருட்கள் தலைப் பகுதியிலிருந்து தள்ளப்பட்டு பெரிய வாலாக மாறுகிறது.
√ இதனுடைய நிறம் இதில் கலந்திருக்கும் பொருட்களைப் பொருத்தது.
√ சிலசமயம் இரண்டு வால்கள் இருக்கும். ஒன்று வாயுக்களாலானது மற்றொன்று அயனிகளாலானது.
இவற்றை எவ்வாறு பார்க்க வேண்டும்?
√ ஒளிமிக்க விளக்குகள் இல்லாத இடத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு வானத்தை உற்றுநோக்க வேண்டும்
√ எந்த விண்மீன் கூட்டங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறதோ அங்கே தேடவேண்டும்.
√ பூமிக்கு அருகே வரும்போது சிலசமயம் வெறுங்கண்ணால் பார்க்க முடியும் என்றாலும் பைனாக்குலர், தொலைநோக்கி வழியாகவும் பார்க்கலாம்.
√ இவை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விட்டால் அதை குறிப்பிட்ட நேரத்தில் கண்டு அதனுடைய போக்கை அதாவது எந்தெந்த விண்மீன் கூட்டங்களைக் கடந்து செல்கிறது என்பதைப் படம் வரைந்து குறித்து வைத்துக் கொள்ளவும்.
√ நீங்கள் பார்த்தவற்றை நண்பர்களிடமும், வானவியல் அறிஞர்களிடமும் கலந்துரையாடி ஐயங்களுக்கு விளக்கம் பெறலாம்.
√ குறிப்பு : இவை சூரியனுக்கு அருகில் இயங்கும்போது தொலைநோக்கி, பைனாக்குலர் மூலமாகப் பார்க்க முயற்சிக்கக் கூடாது, ஏனெனில் சூரிய ஒளி தொலைநோக்கி வழியாக நேரடியாகக் கண்ணைத் தாக்கினால் கண்பார்வை நிரந்தரமாகப் பாதிக்கப்படும்.
இவற்றால் பூமிக்கு ஆபத்து வருமா?
வால்மீன்கள் வருவதால் பூமிக்கோ, உயிரினங்களுக்கோ எந்த ஆபத்தும் ஏற்படாது. இவை வருவதால் இயற்கை பேரிடர்கள் ஏற்படும், மனிதர்களுக்கு அழிவு வரும் என்பதெல்லாம் தவறான மூடநம்பிக்கைகள். அவை பூமியில் மோதினால்தான் விளைவுகள் ஏற்படும், ஆனால் அதற்கு வாய்ப்பு மிகக் குறைவு.
இவற்றால் பூமிக்கு ஆபத்து வருமா?
வால்விண்மீன்கள் வருவதால் பூமிக்கோ, உயிரினங்களுக்கோ எந்த ஆபத்தும் ஏற்படாது. இவை வருவதால் இயற்கை பேரிடர்கள் ஏற்படும், மனிதர்களுக்கு அழிவு வரும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கைகள். அவை பூமியில் மோதினால்தான் விளைவுகள் ஏற்படும், ஆனால் அதற்கு வாய்ப்பு மிகக் குறைவு.
இரண்டும் ஒன்றுதான். நட்சத்திரம் வடமொழிசொல் அதற்கு இணையான தமிழ்ச்சொல் விண்மீன். வானில் மின்னும் நட்சத்திரங்களைக் கடலில் நீந்தும் மீன்களைப் போன்று உருவகம் கொண்டு மீன்கள் எனக் கூறுவது சங்க இலக்கிய காலந்தொட்டே மரபாக உள்ளது.
"மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்...." புறநானூறு - 117
கபிலர் சனிக்கோளை மைம்மீன் என்றும் வால்விண்மீனைத் தூமம் எனவும் குறிப்பிடுவதைக் காண்க.
"தலைநாள் மீன் நிலை திரிய
நிலைநாள் மீன் அதன் எதிர்தரத்
தொல்நாள் மீன் துறைபடியப்...."
புறநானூறு - 229
கூடலூர் கிழார் மீன் எனக்கூறுவதையும் காணும்போது அவர்கள் கோள்களையும், நட்சத்திரங்களையும் மீன் என்ற பொதுப்பெயரில் அழைத்துள்ளது தெரியும்.
வால்விண்மீன்கள் கோள்களை ஒப்பிடும்போது அளவில் சிறியவை. இவற்றின் உட்கருக்கள் சிறியதாக இருந்தாலும் நன்றாக ஒளிர்பவை. இவற்றின் சுற்றுப்பாதை சில சமயம் பெரிய கோள்களுக்கு அருகில் அமையும்போது கோள்களின் ஈர்ப்புவிசையால் அவற்றின் சுற்றுப்பாதையில் சில சமயம் மாற்றம் நிகழ்கிறது. சிலசமயம் கோள்களின் ஈர்ப்பில் இவை மாட்டிக்கொள்கின்றன. ஷுமேக்கர் லெவி என்ற வால்விண்மீன் வியாழன் கோளின் ஈர்ப்பால் 21 துண்டுகளாக உடைந்து அந்த கோளின் மீதே விழுந்ததைப் பார்த்தோப். அதுபோல ஐசான் என்ற வால்விண்மீன் சூரியனுக்கு அருகில் வந்தபோது அதன் ஈர்ப்பைத் தாங்க முடியாமல் பல துண்டுகளாகச் சிதைந்து போனதையும் பார்த்தோம். C\2022 E3 (ZTF) தற்போது சூரியனை நெருங்கியுள்ளது. அது நமக்கு நன்கு காட்சிதரும் என நம்புவோம்.
வான்நோக்குதல் என்பது பொதுவாக மகிழ்வுத் தரும் பொழுதுபோக்கு அறிவியல். அதிலும் அரிதாக வரும் இதுபோன்ற வால்விண்மீன்களைப் பார்த்து அதை மற்றவர்களுக்கும் காட்டி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
பாலா பாரதி




No comments:
Post a Comment