ஓரையான் உடுக்கணத்தின் (Orion Constellation) இடுப்புக் கச்சையில் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தியானது வெறும் கண்களுக்குத் தெரியும், பார்ப்பவரை ஈர்க்கும் வான்பொருளாகும். வெறும் கண்ணால் பார்க்கும்போது புகைபோலவும், ஆவிபோலவும் தெரியும் இதை இருகண் தொலைநோக்கி ஒன்றின் வழியே பார்க்கும்போது நம்மை வியப்பில் ஆழ்த்திவிடும்.
இளம் பச்சைநிறத்தில் பஞ்சுபோன்றும் இவ்வான்பொருள் ஒரு நெபுலா ஆகும். நெபுலா எனப்படும் வான்முகில்கள் விண்மீன்களின் பிறப்பிடங்கள். விண்மீன்கள் வான்முகில்களின் மூலப்பொருள்களிலிருந்து உருவாகின்றன. புதிதாகப் பிறந்திருக்கும் விண்மீனிருந்து வெளிப்படும் ஒளியானது அதைச்சுற்றிக் காணப்படும் பெரிய தூசிமண்டலங்களால் பிரதிபலிக்கப்படுவதால் இந்த ஆவிபோன்ற தோற்றம் ஏற்படுகிறது. இருகண் தொலைநோக்கி வழியே இளம்பச்சை நிறத்தில் தோன்றினாலும் இதன் உண்மை நிறம் இளஞ்சிவப்பாகும். இது நம்மிலிருந்து 1500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
வான்பொருள்களின் அட்டவணையின் மெஸியரின் அட்டவணை (Messier Catalog) புகழ்பெற்றது. இவ்வட்டவணையில் 42ஆவது வான்பொருளாக ஓரையான் வான்முகில் குறிக்கப்பட்டுள்ளது. இதைச்சுற்றி இருண்ட பகுதிகளும் உள்ளன. வானியலாளரான எட்வர்ட் எமர்சன் பர்னார்ட், இருண்ட நெபுலாக்களின் பட்டியலை தொகுத்துள்ளார், இது பர்னார்ட் அட்டவணை (Bernard Catalog of the Sky) என அறியப்படுகிறது. பர்னார்ட் பட்டியலிட்ட நெபுலாக்கள் பர்னார்ட் பொருள்கள் என்று அறியப்படுகின்றன. அதில் ஓரையான் வான்முகிலை உள்ளடக்கியப் பகுதிக்கு 33 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளதால் இது பெர்னார்டு 33 எனவும் அழைக்கப்படுகிறது.

No comments:
Post a Comment