Friday, 29 December 2023

திருவாதிரை | Betelgeuse

 குளிர்கால வானம் வான்நோக்குதலுக்கு சிறந்த காலம். இக்காலத்தில் சூரியன் மாலையில் சீக்கிரமாகவே மேற்கே மறைந்துவிடுவதால் இரவுப் பொழுது சற்று நீண்டதாக இருக்கும். நமக்கு வானைப் பார்க்க அதிக நேரம் கிடைக்கும். மேலும், இக்காலத்தில் நமக்கு ஆர்வமூட்டும் உடுக்கணங்கள் (Constellations) இரவு வானை அலங்கரிப்பதைக் காணலாம். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஓரையான்
வான்நோக்குபவர்களுக்கு ஆரம்பத்தில் எளிதாகக் கண்டு கொள்ளக்கூடியதும் பார்ப்பவர்களின் கருத்தைக் கவரக்கூடியதுமான விண்மீன் தொகுதிகளில் 'ஓரையான்' முதன்மையானது. குளிர்காலம் முழுவதும் வானில் தோன்றும் இதன் மனித தோற்றமும், பொலிவுமிக்க 'பீட்டில்ஜீஸ்’ ‘ரைஜல்’ ஆகிய முதல்தர பொலிவெண் கொண்ட விண்மீன்களும் நமது ஆர்வத்தைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை. வேட்டைக்காரன் ஒருவன் தனது வலக்கையில் தடியொன்றை தூக்கிக்கொண்டு இடக்கையில் கேடயத்தை ஏந்தி நின்றவாறுள்ள தோற்றத்திலிருக்கும் விண்மீன் தொகுதி தான் ஓரையான். மூன்று வரிசையான விண்மீன்களைக் கொண்ட இடைப் பட்டையில் கத்தி ஒன்று தொங்கிக் கொண்டிருப்பது போல் தெரியும். இந்த உடுக்கணத்திலுள்ள ஒளிமிகுந்த வான்பொருள்களைக் காண்போம்.
திருவாதிரை (Betelgeuse)
நமக்கு இடப்புறம் அதாவது வேட்டைக்காரனின் வலத்தோளில் சிவப்பு நிறத்தில் பொலிவுடன் விளங்கும் விண்மீன் பீட்டில்ஜீயஸ் எனப்படும் திருவாதிரை. இது நமது சூரியனை விட 300 மடங்குப் பெரியது. இது ‘ரெட்ஜெயண்ட்’ எனப்படும் செம்பூத விண்மீன் வகையைச் சேர்ந்தது. ஒர் உடுக்கணத்தின் விண்மீன் தொகுதியிலுள்ள விண்மீன்களில் பொலிவு அதிகமாக உள்ள விண்மீனை அத்தொகுதியின் பெயருக்கு முன்னால் ஆல்பா என்ற வார்த்தையைச் சேர்ப்பர், அந்த வகையில் இது “ஆல்ஃபா ஓரரையானிஸ்” என்ற வானவியல் பெயரைப் பெறுகிறது. தமிழ் மரபில் ‘திருவாதிரை’ எனவும் வடநாட்டு மரபில் ‘அர்த்ரா’ எனவும் வழங்கப்படும். இது நம்மிலிருந்து 520 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இவ்வளவு காலமாய் இதன் பொலிவு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. ஆனால் தற்போது அதன் பொலிவு குறைந்துள்ளது. எனவே இது சூப்பர் நோவாக மாறாக்கூடும் என்ற கருத்தும் கூறப்படுகிறது.
ஓரையான் என்னும் கலங்கரை விளக்கம்
ஒரு நகரத்திலுள்ள ஊரை அடையாளம் காண அதனருகில் இருக்கும் பேரூரைச் சுட்டி அதிலிருந்து எத்திசையில் எவ்வளவு தொலைவில் இவ்வூர் உள்ளது எனக் கூறுவோம் அல்லவா. அது போலத்தான் ஓரையானைக் கொண்டு பல விண்மீன்களை நாம் அடையாளம் காணலாம். இவ்வாறு, மற்ற விண்மீன்களின் இடங்களை அறிய ஓரையான் ஒரு கலங்கரை விளக்கமாக விளங்குகிறது.
ஓரையானின் ‘பெல்லாட்ரிக்சையம்' 'பீட்டில்ஜூஸையும்' இணைத்து அக்கோட்டை நீட்டினால் அக்கோடு 'புரோசியோனை' அடையும். அவனது இடுப்பில் உள்ள மூன்று விண்மீன்களையும் இணைத்து ஒரு கோடு வரைந்தால் அக்கோட்டின் இடப்புறம் 'சிரியஸை' நோக்கியும், வலப்புறம் 'அல்டிபெரானை' நோக்கியும் இருக்கும். இடுப்பிலுள்ள மூன்று விண்மீனிலிருந்து ஓரையானின் இடது காலான ரைஜல் வழியே கோடு வரைந்தால் அக்கோடு ‘அக்கிர்னர்’ என்ற விண்மீனைச் சுட்டும். இடுப்பிலிருந்து வலது காலான ‘சைப்பை' இணைக்கும் கோட்டை நீட்டினால் அக்கோடு ‘கேனபஸை' அடையும். அவன் இடுப்புக் கச்சையிலிருந்து ‘பெல்லாட்ரிக்ஸ்’ வழியாக நீட்டப்படும் கோடு ஆரைகாவின் 'காப்பெல்லாவை' அடையும். 'மின்தகாவிலிருந்து' 'பீட்டில் ஸை இணைக்கும் கோடு ஜெமினியின் ‘காஸ்டரை’ அடையும்.
குளிர்கால முக்கோணம் (Winter Traingle)
ஓரையானின் 'பீட்டில்ஜூஸ்', கேனிஸ் மேஜரின் 'சிரியஸ்' மற்றும் கேனிஸ் மைனரின் 'புரோசியான்' இம்மூன்று விண்மீன்களும் வானில் ஒரு சமபக்க முக்கோணத்தை அமைக்கும். இம்முக்கோணம் குளிர்கால முக்கோணம் எனப்படுகிறது.
- பாலா பாரதி
All reactions:
Bala Murali, Thenkongu Sathasivam and 162 others

No comments:

Post a Comment