தமிழர்களின் தொடராண்டு - கலியாண்டு
இந்தியாவில் சக
ஆண்டு, விக்ரம ஆண்டு, கொல்லம் ஆண்டு உட்பட பல தொடராண்டுகள் வழக்கிலிருந்துள்ளன.
தமிழர்களுக்கென தனியான தொடராண்டு இல்லை என்பது பொதுக்கருத்து. அதனால்தான்
தமிழர்களுக்கான தனியான தொடராண்டை உருவாக்க 1921 இல் சென்னை பச்சையப்பன்
கல்லூரியில் மறைமலை அடிகள் அவர்களின் தலைமையில் திருவள்ளுவராண்டை உருவாக்கினர்.
திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகக் கருதப்படும் கி.மு.31 இல் இவ்வாண்டு தொடங்குகிறது.
எனவே பொது ஆண்டுடன் 31ஐ கூட்டினால் திருவள்ளுவராண்டு கிடைக்கும். எடுத்துக்காட்டாகப்
பொது ஆண்டு 2023 இன் திருவள்ளுவராண்டு 2023+31=2054 ஆகும். இவ்வாண்டு முறை 1971
இல் அரசிதழில் வெளிவந்து நடைமுறைக்கு வந்தது.
உண்மையில் தமிழர்களுக்கென்று தனி தொடராண்டு இல்லையா? பழங்காலத்திலேயே காலத்தை நுட்பமாக அளந்து ஆண்டைத் துல்லியமாகக் கணக்கிட்டவர்கள் தொடராண்டைப் பயன்படுத்தாமல் இருந்திருப்பார்களா? உறுதியாகப் பயன்படுத்தி இருப்பார்கள். அவர்கள் உருவாக்கிய தொடராண்டுதான் உலகின் வழக்கிலுள்ள பழமையான தொடராண்டான 'கலியாண்டு'. தமிழர்களின் தொன்மையான வானியல் அறிவிற்கு மற்றொரு சான்று 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் வகுத்துவைத்த கலியாண்டு. கி.மு.3101, பிப்ரவரி 18 ஆம் நாளில் சூரியன், சந்திரன் உட்பட பிறகோள்கள் அனைத்தும் மேழ இராசியில் ஒன்றிணைந்திருந்தன. இந்நாளையே கலியாண்டின் தொடக்கமாகக் கொண்டனர்.
கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் குறிப்பிடப்படுவதிலிருந்து கலியாண்டு மக்கள் வழக்கில் இருந்தது எனத் தெரிகிறது. கலியாண்டைக் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கும் சான்று கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் கிடைக்கிறது. கி.பி.634-635 ஆம் ஆண்டைச் சேர்ந்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியின் அய்யவொளெ கல்வெட்டில் முதன்முதலாகக் கலியாண்டு 3735 என்று குறிப்பிடப்படுகிறது. இத்துடன் சக ஆண்டு 556 எனக் குறிப்பிடப்படுவதால் கலியாண்டை மீள் உருவாக்கம் செய்வது எளிதாகியது. சக ஆண்டுடன் 78 யைக் கூட்டினால் பொது ஆண்டு கிடைக்கும். 556+78=கி.பி.634. ஆகவே கலியாண்டு 3735-634=3101. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையனின் கி.பி. எட்டாம் ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமலை, திருப்பரங்குன்றம் கிரந்தக் கல்வெட்டுகளில் கலியாண்டு குறிப்பிடப்படுகிறது. ஆனைமலைக் கல்வெட்டில் கலியாண்டு 3871 (3871-3101=கி.பி.770) என்றும் திருப்பரங்குன்றம் கல்வெட்டில் 3874 (3874-3101=கி.பி.773) என்றும் குறிப்பிடப்படுகிறது. கலியாண்டு கல்வெட்டுகள் மட்டுமின்றிச் செப்பேடுகளிலும் குறிப்பிடப்படுவதிலிருந்து இது பொது மக்களின் பயன்பாட்டில் இருந்துள்ளது எனத் தெரிகிறது. கோநந்தடக்கனின் பார்த்திவசேகரபுரச் செப்பேடு பின்வருமாறு கூறுகிறது.
"ஸ்வதிஸ்தி ஸ்ரீ கலியுகக் கோட்டு நன்னான்
பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதினாயிரத்து
என்பத்து ஏழு சென்ற நாள்.............. “
வேணாட்டை ஆண்ட ஆய்குல மன்னன் கோகருந்தடக்கன்
இச்செப்பேட்டில் கலியாண்டு 14,49,087 என்று கூறுவது நாட்களின் எண்ணிக்கை ஆகும்.
ஆண்டுக் கணக்கில் 14,49,087 / 365.25=3967, கலி 3967 அதாவது
கி.பி.866. கலியாண்டு முறையை உருவாக்கியவர்கள் காலத்தைக் கணித்த கணியர்
மரபினர் ஆவர். இவர்கள் அறிவர்கள் என அழைக்கப்பட்டவர்கள். இம்மரபைச் சேர்ந்த
‘கலியன்` என்பனால் இவ்வாண்டு முறை தொடங்கப்பட்டிருக்க வேண்டும். கலியன் என்ற
தமிழ்ப்பெயர் இன்றும் வழங்குவதைக் காணலாம். கலி என்பது தமிழ்ச்சொல். கலித்தல்
என்பதற்கு மகிழ்ச்சி, ஆரவாரம், மனச்செருக்கு எனப் பல பொருள்கள் உள்ளன.
குறுந்தொகை-223 ஆம் பாடலில் தலைவிக் கூற்றாக,
"பேரூர் கொண்ட ஆர்கலி விழாவில்....."
என வருகிறது. பெரிய ஊரில் உள்ள மக்கள் கொண்டாடிய மகிழ்ச்சியும், ஆரவாரமும் நிறைந்த விழா என்பது மேற்படி பாடலின் பொருள். பிங்கல நிகண்டு கலி என்பதற்கு வலிமை, ஒலி, கடல் என்று பொருள்களைச் சுட்டுகிறது. ஆனால் வடமொழியினர் கலி என்ற சொல்லுக்கு எதிர்மறையாக பொருள் கொள்கின்றனர். அதன் விளைவாகக் கலியுகத்தில் கொலை, கொள்ளை போன்றவை நடக்கும் எனக்கூறினர். கலியாண்டு முறையைக் கலியுகமாக உள்வாங்கிய வடமொழியினர் கூறிய எதிர்மறையான பொருளால் தமிழர்கள் அவ்வாண்டு முறையைப் பயன்படுத்தத் தயங்கியிருக்க வேண்டும். மேலும் இதன்மீது புராணக் கதைகள் புனையப்பட்டு
கிருதயுகம் - 17 இலட்சத்து 18 ஆயிரம் ஆண்டுகள்
திரேதாயுகம் - 2 இலட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகள்
சவாபிரயுகம் - 8 இலட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்
கலியுகம் - 4 இலட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்
எனவும், கிருஷ்ணர் வேறு உலகத்திற்கு சென்றதிலிருந்து கலியுகம் தொடங்குகிறது எனப் புராணக் கதைகளுடன் அறிவியலுக்கு அப்பாற்பட்டுக் கூறப்பட்டதால், கலியாண்டு முறை தமிழர்களிடம் அதன் சிறப்பை இழந்திருக்க வேண்டும். எட்டுத்தொகை நூல்களில் ஒன்று கலித்தொகை.
“கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு..."
என்பதிலிருந்து
கலி என்றச் சொல்லின் சிறப்பு புலனாகிறது.
“தொக்க கலியில் மூவாயிரத்துத் தொண்ணூறில்
மிக்க கரிகால வேந்தனுந்தான்” - பக்கம்
அலைக்கும் புகழ்ப் பொன்னி யாறுகரை கண்டான்
மலைக்கும் புயித்தானும் வந்து"
எனக் கலியாண்டு 3090 இல் கரிகால சோழன் காவிரிக்கு கரையெடுத்தக் காலத்தைப் பதிவு செய்திருப்பதன் மூலம் கலியாண்டு இயல்பாகவே வழக்கிலிருந்தது எனத் தெரிந்து கொள்ளலாம்.
- பாலா பாரதி
No comments:
Post a Comment