இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு சேலத்துக்காரர்கள் பதிவு செய்த விண்கல் பொழிவு (Meteor Shower). நவம்பர் மாத வானை அலங்கரிக்கும் வானியல் நிகழ்வுகளில் ஒன்று சிம்ம விண்கல் பொழிவு (Leonid Meteor Shower). சிம்மராசி (Leo Constellation) கிழக்கில் உதித்து சற்றே மேலெழுந்து நிற்கும் நவம்பர் மாத இரண்டாவது வாரத்தில் இந்த உடுக்கணத்திலிருந்து விழுவதாகத் தோன்றும் விண்கல் பொழிவு புகழ்பெற்றது. பொதுவாக, ஒரு வால்மீன் (Comet) போன பாதையில் அது விட்டுச் சென்ற கழிவுகள் இருக்கும். ஜெட் விமானம் சென்ற பின்பு வானில் அதன் புகை வெள்ளைக் கோடாக காட்சியளிப்பதை நாம் கூட சில வேளைகளில் பார்த்திருப்போம். அதுபோல வால்மீன் விட்டுச்செல்லும் கழிவுகள் (Debris) மிதந்துக் கொண்டிருக்கும் பகுதியை நம் பூமி கடக்கும் போது அக்கழிவுப் பொருள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழையுமல்லவா? அப்போது காற்றின் உராய்வால் அவை எரிந்தபடி விழும். இதையே விண்கல் பொழிவு என்கிறோம். கழிவுப் பொருள்கள் பெரும்பாலும் அளவில் மிகச்சிறியதாக இருக்கும், எனவே இவை எரிந்து விழும்போது கம்பி மத்தாப்பிலிருந்து நெருப்புப் பொறி பறப்பதைப்போலத் தெரியும். அளவில் சற்றுப் பெரிதாக உள்ளவை எரிநட்சத்திரம் போல் எரிந்துகொண்டு சில வினாடிகள் பார்க்கும்படி விழும். அளவில் இன்னும் பெரிதாக இருந்துவிட்டால் எரியும் பந்து போல (Fire Ball) விழும். பூமியை அடையும் முன்னரே இவை எரிந்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் ஒரேநாளில் பூமி அப்பகுதியைக் கடப்பதால் ஒரு விண்கல் பொழிவு ஒவ்வொரு ஆண்டும் ஒரே தேதிகளில் நிகழும். இவை விழும்போது எந்த உடுக்கணத்திலிருந்து (Constellation) விழுவதுபோலத் தெரிகிறதோ அந்த உடுக்கணத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன. லைரா உடுக்கணத்திலிருந்து விழுவதுபோல் தோன்றும் பொழிவு 'லைரிட் பொழிவு' எனப்படுகிறது. இதுபோல ஓரையானில் நிகழும் பொழிவு 'ஓரைனைட்', பெர்சியஸில் நிகழும் பொழிவு 'பெர்சியட்' எனப்படுகின்றன. இதுபோல ஒன்றுதான் லியோனிட் (Leonid). இப் பொழிவுகள் அனைத்தும் ஆண்டில் குறிப்பிட்ட தேதியில் நடைபெறும்.
இதுபோல இன்னும் பல பொழிவுகள் உள்ளன. ஒருமணி நேர இடைவெளியில் ஐம்பது, நூறு எண்ணிக்கையில் விழுந்தால் நாம் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும். இவற்றில் அதிகமான விண்கற்கள் விழுவதால் ஜெமினிட்டும், லியோனிட்டும் புகழ்பெற்றவை. லியோனிட் நவம்பர் 17,18 தேதிகளில் நடைபெறும். 1833 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி வானில் மிகப் பெரிய விண்கல் பொழிவைக் கண்டதாக அமெரிக்கர்கள் பதிவு செய்துள்ளனர். 1833 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 12, 13 தேதிகளில் சிம்ம உடுக்கணத்தின் திசையிலிருந்து ஆயிரக்கணக்கான விண்கற்கள் விழுந்தபடி இருந்திருக்கின்றன. வானிலிருந்து விழுந்த நெருப்புப் பந்துகளைப் பார்த்த பாஸ்டன் நகர மக்கள் உலகம் அழியப் போவதாகப் பயந்திருக்கின்றனர். இதுபோல 1966 இல் 15 நிமிட இடைவெளியில் நூற்றுக்கணக்கில் விண்கற்கள் விழுந்துள்ளன. 2002 ஆம் ஆண்டுப் பொழிவிலும் அதிக எண்ணிக்கையிலான விண்கற்கள் விழுந்துள்ளன. டெம்பெல்-டட்டில் (Tempel-Tuttle) என்றழைக்கப்படும் வால்மீன் (Comet) விட்டுச் சென்ற பொருள்கள் இருக்கும் பகுதியின் வழியே நமது பூமி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் கடக்கும்போது இந்நிகழ்வு நடக்கிறது. டெம்பெல்-டட்டில் (Tempel-Tuttle) கடைசியாக 1998 இல் சூரியனுக்கு மிக அருகில் வந்தது மேலும் 2031 இல் மீண்டும் திரும்ப வரும். சிம்ம விண்கல் பொழிவை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சேலத்திலிருந்து பார்த்திருப்பதாக குறிப்புக் கிடைத்திருக்கிறது. (சேலம் நண்பர் Siva Kg அவர்கள் கொடுத்த தகவல்).
சேலத்தில் இறைபணியாற்றிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாதிரியார் சங். சிங்கராயர் (Fr. L. Depigny) அவர்கள் எழுதியவற்றைத் தொகுத்து தமிழில் புத்தகமாக 1958 ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறார்கள். "சேலம் மேற்றிராசன சரித்திரச் சுருக்கம்" எனப் பெயரிடப்பட்ட இப்புத்தகத்தை பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய சங்.M.S. ஜோசப் சுவாமி அவர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார். (கத்தோலிக்க திருச்சபையில் முன்னாள்களில் "ஆயர்" என்னும் சொல்லுக்குப் பதிலாக "மேற்றிராணியார்" என்னும் சொல் வழக்கத்தில் இருந்தது). இப்புத்தகத்தின் 91-92 ஆம் பக்கங்களில் லியோனைட் விண்கல் பொழிவு பற்றிய குறிப்புக் காணப்படுகிறது.
"1832 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மைசூரிலும் சேலத்திலுமிருந்த மக்கள் பல நாட்கள் இரவிலே பழுக்கக்காய்ச்சின இரும்பை சம்மட்டி கொண்டு அடிக்கும் போது தெறித்து விழும் நெருப்புப் பொறிகளைப் போன்று வானமண்டலத்திலே எரிகற்களின் கூட்டங்களைக் கண்டனர். அதற்கு அடுத்த ஆண்டே (1833) பெரிய பஞ்சம் தோன்றியது. இப்பஞ்சத்தை மக்கள் சக்கி முக்கிப் பஞ்சம் என்றழைத்தனர். சேலத்தில் மட்டும் 28% மக்கள் இறந்தனர், தென் ஆற்காட்டில் மக்கள் இறந்த தொகை இதைவிட அதிகமாயும். கோயம்பத்தூரில் சற்று குறைவாகவும் இருந்தது."
அமெரிக்காவில் 1883 இல் லியோனைட் பொழிவைப் பார்த்துள்ளதுபோல, தமிழ்நாட்டில் 1882 ஆம் ஆண்டு பார்த்திருக்கின்றனர். மேலும் இந்நிகழ்வை அடுத்த ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்துடன் தொடர்புபடுத்தியுள்ளனர். சேலத்துக்காரர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கலாம். (சேலம்டா... கெத்துடா...)





No comments:
Post a Comment