தமிழர் ஆண்டுக் கணக்கில் முதல் மாதமாக வருவது தையா? சித்திரையா? என்பதில் நீண்டகாலமாகவே விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தையே முதல் மாதம் என்பதற்கு அதன் சார்பானவர்கள் பல தரவுகளையும், சித்திரையே முதல் மாதம் என்பதற்கு அதன் சார்பானவர்கள் பல தரவுகளையும் கொடுத்து வருகின்றனர்.
தை மாதம்தான் ஆண்டின் முதல்மாதம் என்பதற்கு அதைச் சார்ந்தவர்கள் பின்வரும் காரணங்களைக் கூறுகிறார்கள்:தமிழர்கள் சூரியன் தனது வடசெலவைத் துவங்கும் நாளையே முதல் நாளாகக் கொண்டிருந்தனர். விவசாய அறுவடை திருநாளில் சூரியனையும் மாடுகளையும் வணங்கி அந்நாளைக் கொண்டாடினர். பஞ்சாங்கத்தில் தை மாதத்தை அடிப்படையாகக் கொண்ட மகர சங்கராந்தி ஆண்டுபலன் என்னும் பெயரில் ஆண்டு பலன்கள் கணித்து வெளியிடுவது தற்போதும் நடைமுறையில் உள்ளது. பொங்கல் பண்டிகை தமிழருக்கு முதன்மையான திருநாள், ஆகவே அதுவே புத்தாண்டாக இருக்க முடியும்.
'தை பிறந்தால் வழி பிறக்கும்'
எனும் நம்பிக்கையூட்டும் பழமொழியையும் சான்றாகக் கொள்ளலாம். ஒரு ஆண்டு இளவேனில் (சித்திரை-வைகாசி), முதுவேனில் (ஆனி-ஆடி), கார் (ஆவணி-புரட்டாசி), கூதிர் (ஐப்பசி-கார்த்திகை), முன்பனி (மார்கழி-தை), பின்பனி (மாசி-பங்குனி) என ஆறு பருவங்களாகக் பிரிக்கப்பட்டு, இளவேனிற்காலம் முதன்மையாகக் கொள்ளப்பட்டது. தைமாதத்தை இலக்கியங்களும் பெருமை பேசுகின்றன.
“தைஇத் திங்கள் தண்கயம் போல்" எனப் புறநானூறும்
"தையில் நீராடி தவம் தலைப் படுவாயோ" எனக் கலித்தொகையும்
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" எனக் குறுந்தொகையும்
தையை சிறப்பித்துக் கூறுகின்றன. முதற்காலத்தில் ஆண்டுப்பிறப்பு சித்திரை முதல்நாளாக இருந்ததில்லை என டாக்டர் மு.வ. கூறுகிறார். இராமநாதபுரம் கீழக்கரையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டின் மூலம் தை மாதம் முதல் மாதமாக இருந்தது தெரிகிறது. சித்திரையை முதல் மாதமாகக் கொண்ட அறுபதாண்டு சுழற்சிமுறை தமிழர்களுக்கானதல்ல வடமொழியினரின் புகுத்தல், அறுபது ஆண்டுகளின் பெயர் அனைத்தும் வடமொழிப் பெயர்கள். வடநாட்டினர் தமிழர்களின் மீது ஆதிக்கம் செலுத்தவே சித்திரையை முதன்மையாகக் கொண்ட ஆண்டுமுறையைத் தமிழர்களின் மீது திணிக்கின்றனர்.
"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டமும், கற்பித்ததே
அறிவுக் கொவ்வா அறுபது ஆண்டுகள். தரணி ஆண்ட, தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
என்று பாவேந்தர் பாரதிதாசன் சாடுவதாகக் கூறுவர். தமிழர் வாழ்வில் உழவுக்கே முதலிடம். அதனால்தான் வள்ளுவர் 'ஏர்ப்பின்னது உலகம்' என்றார். தை பிறந்தால் வழிபிறக்கும் எனக் காத்திருக்கும் உழவர்களுக்கு தை மாதம் தானே முதல் மாதமாக இருக்க முடியும். அருட்பிரகாச வள்ளலாரும் தமிழர்க்கு ஏற்றமாதம் தை என்பதோடு, தவ ஆற்றலுக்கு ஏற்றது என்பதால், தை மாதத்தில் தைப்பூசத்தில் அருட்சோதி காண்பித்தார். தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் என திருஞான சம்பந்தரும் தை மாதத்தின் சிறப்பைக் கூறுகிறார்.
பூமி சூரியனை (நீள்)வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஒருமுறை சுற்ற ஆகும் காலம் ஓர் ஆண்டு. பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் பூமியைச் சுற்றி வருவதைப்போல் தெரிகிறது. அவ்வாறே எடுத்துக்கொள்வோம். சூரியனின் வட்டப்பாதை எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது எனக்கூற முடியாது. ஏனெனில் ஒரு வட்டத்திற்கு ஆரம்பமும் இறுதியும் இல்லை. இவ்வட்டத்தில் நாமாக ஒரு புள்ளியைக் குறித்து இது முதற்புள்ளியாகக் கணக்கிட முடியுமல்லவா? தமிழர்கள் அவ்வாறே செய்தனர். சூரியப்பாதையும் வான் நடுவரையும் வெட்டிக்கொள்ளும் இருபுள்ளிகளில் ஒரு புள்ளியை எடுத்துக்கொண்டனர். அந்தப் புள்ளியில் சூரியன் இருக்கும்போது பகலும் இரவும் சமமாக இருக்கும். அதாவது அப்புள்ளி சமநோக்குப்புள்ளி (Vernal Equinox) எனப்படுகிறது.
அடுத்து பன்னிரண்டு இராசிகளில் மேழத்தை முதல் இராசியாகக் கொண்டனர். மேழ இராசி தொடங்கும் முதற்புள்ளி (First Point of Aries) யில் சமநோக்குபுள்ளி சந்திக்கும் நாள் அவ்வாண்டின் முதல் நாள். அதாவது மேழ இராசியில் சூரியன் நுழையும் முதல் நாள் அவ்வாண்டின் முதல் நாளாகக் கணக்கிடப்படுகிறது. இக்கணக்கீட்டின்படி பார்த்தால் சித்திரை மாதமே ஆண்டின் முதல் மாதமாக அமைகிறது. ஒர் ஆண்டில் சூரியனின் இயக்கத்தை வேறொரு வகையிலும் புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் திசையை ஆண்டு முழுவதும் நோக்கினால் இப்புள்ளிகள் இட வலமாக நகர்வதைப் பார்க்கலாம். சூரியன் வலக் கோடியிலிருந்து இடக் கோடியை நோக்கிப் பயணிப்பதுபோல தோன்றும். இது வடசெலவு (உத்திராயணம்) எனப்படுகிறது. நமக்கு வலக் கோடியிலிருந்து இடக் கோடிக்குப் பயணம் தை முதல் நாளன்று தொடங்குகிறது. சூரியனின் ஓர் ஆண்டின் இயக்கத்தை இடது வலதாகப் பார்த்தால் ஆண்டின் முதல் மாதம் தை மாதம் எனவருகிறது. தை மாதம் தான் ஆண்டின் முதல் மாதம் என்பதற்கும் பல தரவுகள் கொடுக்கப்படுகின்றன.
சித்திரையே முதல் மாதம் என வாதிடுபவர்கள் பின்வரும் கருத்துகளை முன்வைக்கின்றனர்:
"திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடுநிலை இய
உரோகிணி நினைவனள் நோக்கி" (நெடுநல் வாடை 160-163)
என்று நக்கீரனார் பாடியிருக்கிறார். சூரியன் வட்டப்பாதையில் சுற்றுகிறது. அதில் ஆரம்பப்புள்ளி, இறுதிப்புள்ளி என்று ஏதுமில்லை. இருந்தும் இது ஆகாய நடுவரையை வெட்டும் புள்ளியைக் கொண்டு இப்புள்ளி மேழ உடுக்கணத்தில் நுழையும் நாளே ஆண்டின் முதல் நாள், அந்த மாதம் சித்திரையாகும். பாடலில் நக்கீரனார் ஆடுதலை எனக் குறிப்பிடுவது மேழ உடுக்கணத்தைத்தான். பழமையான கோயில்களில் இருபத்து ஏழு விண்மீன்கள் சிற்ப வடிவில் காட்டப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக ஆவுடையார் கோயில் சிற்பத்தில் இந்த இருபத்து ஏழு விண்மீன்களைப் பார்க்கலாம். இதில் முதலாவதாக அசுவதி விண்மீன் உள்ளது. இந்த அசுவதிக்குச் சூரியன் வரும் நாளே சித்திரை முதல் நாள். அசுவதி விண்மீன் மேழத்தில் இயங்குவது. எனவே சித்திரைத்தான் ஆண்டின் முதல் மாதம். பிங்கல நிகண்டு இராசியின் பெயர்களை மேடமு மிடபமு மிதுனமுங் கடகமும் சிங்கமும் கன்னியும் துலாமும் தேளும் தனுவும் மகரமும் கும்பமும் மீனும் என்றே வரிசைப்படுத்துகிறது.
கோடைக் காலமே முதலாவது பருவம். 'தலைவந் திசைவேனில்' (சீவக-648) எனச் சீவகசிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது. கோடைகாலத்தின் தொடக்கம் சித்திரையாகும். வீரமாமுனிவரும் தமிழர்கள் ஏப்ரல் மாதத்தில் ஏதோ ஒரு நாளில் ஆண்டின் முதல் நாளைக் கொண்டுள்ளனர் என்கிறார். சென்னை பல்கலைக்கழகத்தால் 1912 ஆம் ஆண்டு, பதிப்பிக்கப்பட்ட தமிழ் பேரகராதியில் 'சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழர் ஆண்டுக் கணக்கில் முதல் மாதமாக வருவது தையா? சித்திரையா? என்பதில் நீண்டகாலமாகவே விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தையே முதல் மாதம் என்பதற்கு அதன் சார்பானவர்கள் பல தரவுகளையும், சித்திரையே முதல் மாதம் என்பதற்கு அதன் சார்பானவர்கள் பல தரவுகளையும் கொடுத்து வருகின்றனர். உண்மையில் எது என்பதைப் பார்க்கும் முன்னர் சில அடிப்படைச் செய்திகளைப் பார்ப்போம்.
நிலவு நாட்காட்டி (Lunar Calendar)
நிலவின் வளர்பிறை, தேய்பிறைகளை அடிப்படையாகக் கொண்டுக் கணக்கிடப்படுவது நிலவு நாட்காட்டி ஆகும். உலகின் மிகப்பழமையான நாள் கணக்கிடும் முறை இதுவாகும். பிரான்ஸ் நாட்டின் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட பாறைஓவியங்களில் இதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டிலும் உசிலம்பட்டிக்கு அருகில் புலிப்புடவு எனும் குகையில் நிலவு நாட்காட்டி பாறைஓவியமாக வரையப்பட்டுள்ளது. ஒரு பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமிவரை உள்ளது ஒரு மாதம். இது 29.5 நாள்களைக் கொண்டது. ஓர் ஆண்டின் 12 மாதங்களில் ஒருமாதம் 29 நாள்களாகவும், அடுத்த மாதம் 30 நாள்களாகவும் எடுத்துக் கொள்ளப்படும். மொத்தம் 29.5 x 12 = 354 நாள்களைக்கொண்டது ஒரு நிலவு ஆண்டு (Lunar Year). மாதம் என்ற பெயர் நிலவின் மற்றொரு பெயரான 'மதி'யிலிருந்து வந்தது.
சூரிய நாட்காட்டி (Solar Calendar)
சூரிய நகர்வை அடிப்படையாகக் கொண்டது சூரிய நாட்காட்டி (உண்மையில் சூரியன் நகரவில்லை பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் நகர்வதைப்போல தோன்றுகிறது). இதில் இரண்டுவகையான இயக்கங்கள் உண்டு. ஒன்று கிழக்கு, மேற்காக இயங்கும் இயக்கம். இரண்டாவது தெற்கு, வடக்காக நகர்வது. மறுபடியும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் சூரியன் அவ்வாறு நகரவில்லை பூமி சூரியனை 23.5 பாகை சாய்ந்தவாறு சுற்றுவதால் அவ்வாறு தோன்றுகிறது. கிழக்கு, மேற்காக இயங்கும் இயக்கத்தில் சூரியனின் பாதை வட்டமாக இருக்குமல்லவா? ஒரு வட்டத்திற்கு 360 பாகை, இதைச் சுற்றி முடிக்க ஆகும் காலம் ஒரு நாள் இல்லையா? காலை சூரிய உதயத்திலிருந்து மறுநாள் சூரிய உதயம் வரை உள்ள காலம் ஒருநாள்.
சூரியன் விண்மீன்களின் நிலைத்த பின்னணியில் நகர்ந்து வருகிறது. ஒரு விண்மீன் அருகிலிருந்து நகர ஆரம்பித்த சூரியன் மீண்டும் அதே விண்மீன் அருகே வர ஆகும் காலம் ஓர் ஆண்டாகும். இதை உடு ஆண்டு (Sidereal Year) என்போம். இது 365.2563 நாள்களாகும். ஒரு வட்டத்திற்கு ஆரம்பப் புள்ளி இல்லை எனவே சூரியப் பாதையான வட்டத்தில் நாம் ஒரு புள்ளியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகாய நடுக்கோடும் (Celestial Equator), சூரியப்பாதையும் (Zodiac) வெட்டிக்கொள்ளும் இரு புள்ளிகளில் ஒரு புள்ளியைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்து கணக்கிடுகிறோம். இப்புள்ளி மேழ உடுக்கணத்தின் (Aries Constellation) மீது விழுகிறது. இப்புள்ளி வசந்தகால சமபகலிரவு நாள் (Vernal Equinox) ஆகும். சூரியன் மேழ இராசியில் இயங்கும் மாதம் 'சித்திரை'. (தற்போது மேழ விழு நகர்ந்துவிட்டது. அதனால் ஏற்பட்ட/ஏற்படும் விளைவுகளைத் தனியாகக் காண்போம்). எனவே ஆண்டின் முதல் மாதம் சித்திரையே.
நிற்க...
சூரியனின் மற்றொரு நகர்வான கிடைமட்ட நகர்வை (Horizontal movement) கணிக்க ஆண்டு முழுவதும் சூரியன் உதிக்கும் புள்ளியைப் பார்க்க வேண்டும். சூரியன் உதிக்கும் புள்ளி ஒவ்வொரு நாளும் கிடைமட்டமாக நகர்ந்துக் கொண்டே வரும். அது தெற்கிலிருந்து வடக்கே நகர்வது வடசெலவு (உத்திராயணம்) என்றும், வடக்கிலிருந்து தெற்கே நகர்வது தென்செலவு (தட்சினாயணம்) எனவும் அழைக்கப்படுகிறது. வட செலவுக்கு ஆறு மாதங்கள், தென் செலவுக்கு ஆறு மாதங்கள் என்பது ஒர் ஆண்டின் கணக்காகும். பருவ காலங்கள் இதனடிப்படையில் அமைவதால் பருவ ஆண்டு (Tropical Year) எனவும் அழைக்கப்படுகிறது. இது 365.2422 நாள்களைக் கொண்டது. இவ்வாண்டுமுறை வடசெலவு (உத்திராயண) நாளிலிருந்து எண்ணப்படுகிறது. உத்திராயணம் ஆரம்பிப்பது தை மாதத்தில். எனவே ஆண்டின் முதல் மாதம் 'தை' யே. (வானியல்படி இதில் வேறுபாடு உண்டு அதைத் தனியே காண்போம்).
நிற்க...
உடு ஆண்டின் (Sidereal Year) முதல் மாதம் "சித்திரை", பருவ ஆண்டின் (Tropical Year) முதல் மாதம் "தை". இப்போது நமது கேள்விக்கு வருவோம்
'தமிழர்கள் சித்திரையை முதல் மாதமாகக் கொண்டனரா?, தையை முதல் மாதமாகக் கொண்டனரா?'
தற்போது கிரிகோரியன் நாட்காட்டியை அனைவரும் ஏற்றுக்கொண்டு ஜனவரி முதல் தேதியை ஆண்டின் முதல் நாளாகக் கடைபிடிக்கிறோம். இவ்வாண்டு அனைவரும் கடைபிடிக்கும் 'பொது ஆண்டு'. வங்கிகளும், பணம் வரவு, செலவு செய்கிறவர்களும் ஏப்ரல் முதல் தேதியை ஆண்டின் முதல் நாளாகவும், அவ்வாண்டை 'நிதி ஆண்டு' (Financial Year) என்றும் அழைக்கின்றனர். பள்ளிகள், கல்லூரிகளில் ஜுன் மாதத்தை முதல் மாதமாக் கொண்ட 'கல்வி ஆண்டு' (Academic Year) கடைபிடிக்கிறார்கள். எனவே பொது ஆண்டு அனைவருக்குமானது, செய்யும் தொழிலைப் பொறுத்து மற்றொரு ஆண்டு முறையையும் நாம் பயன்படுத்துகிறோம் அல்லவா? அதுபோல மதம் சார்ந்த செயல்பாடுகளுக்கு சித்திரையை முதலாவதாகக் கொண்டும், விவசாயப் பணிகளுக்காக தையை முதலாவதாகவும் கொண்டனர்.
பயிர்த்தொழில் புரியும் விவசாயிகள் பொது ஆண்டுடன் விவசாயத்திற்கு அடிப்படையான பருவ ஆண்டைப் பயன்படுத்துவது இயல்புதானே! அதனால்தான் இரண்டு கருத்துக்களுக்கும் தரவுகள் கிடைக்கின்றன.
சித்திரை முதல் மாதம் என்பது வடமொழியினர் தமது மீது திணித்ததாகத் தையைக் கடைபிடிப்பவர்கள் கருதுகிறார்கள். அப்படியல்ல, சித்திரை மாதமும் தமிழர்களுக்கு உரியதுதான். சூரிய நாட்காட்டியில் மேழம் என்று பெயர் பெற்றிருந்த மாதம் சூரிய - சந்திர நாட்காட்டியில் சித்திரை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது, அவ்வளவே.
ஆக, சித்திரை முதல் நாள் பொது ஆண்டின் தொடக்கம். தை முதல் நாள் விவசாய ஆண்டின் தொடக்கம். இரண்டும் தமிழர்களுக்கு உரியதே
- பாலா பாரதி
No comments:
Post a Comment