காலக்கணிப்பில் நாழிகை என்ற அலகு முதன்மையானது. இன்றும் சாதகம் கணிப்பவர்கள் நாழிகையையே பயன்படுத்துகின்றனர். இரண்டரை நாழிகை ஓர் ஓரையாகும். ஓர் ஓரை என்பது இன்றைய காலக் கணக்கின்படி ஒரு மணி நேரம் ஆகும். இந்த ஓரை எனும் சொல் ஓரையான் உடுக்கணத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டுள்ளது. ஓரை என்பது தமிழ்ச்சொல். ஓரையான் உடுக்கணத்தின் பெயருடன் ஓரை என்ற காலத்தின் அலகிற்கான பெயரையும் உலகத்தோர் தமிழர்களிடமிருந்து பெற்றிருக்கின்றனர். ஓரை எனும் தமிழ்ச்சொல் வடமொழிக்குச் செல்லும்போது 'ஹோரை' என்றாகிறது. கிரேக்கத்திற்குச் செல்லும்போது 'ஹோரா' என்றாகி, இலத்தீன் வழியே ஆங்கிலத்திற்கு 'ஹோராஸ்' என வந்து இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் 'ஹவர்' (Hour) என்றாகியிருக்கிறது. அதிலிருந்து 'ஹோரோஸ்கோப்' என்ற சாதகத்துக்குப் பெயரும் வந்தது. தொல்காப்பியத்தில் ஓரை என்ற சொல் குறிப்பிடப்படுகிறது.
"மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோற் கில்லை" (தொல்.பொருள்.கள.44)
வையாபுரிபிள்ளையும், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியும் இதில் வரும் ஓரை தமிழ்ச்சொல் இல்லை என்றும், இது 'ஹோரா' என்ற கிரேக்கச் சொல்லின் மருஉ எனவும் வாதிடுவர். வையாபுரிபிள்ளை காரணம் கூறும்போது, ஓரை என்ற காலத்தைக் குறிக்கக்கூடிய சொல் தொல்காப்பியத்தில் உள்ளது, ஆனால் சங்க இலக்கியங்களில் இல்லை. எனவே தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்கு பின்னர் எழுதப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்கிறார். அவரின் இந்தத் தலைகீழ் பார்வையால் தொல்காப்பியம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்ற மயக்கத்திற்கு அவர் ஆட்படவேண்டி இருந்தது.
தமிழ் மொழியில் உள்ள சொற்கள் அனைத்தும் சங்க இலக்கியங்களில் உள்ளதா? எனில் இல்லை. எல்லா சொற்களும் சங்க இலக்கியங்களில் இடம்பெற வேண்டிய முறை இல்லை. சூழலுக்கு ஏற்ப சொற்கள் அமையும். எடுத்துக்காட்டாகத் தொல்காப்பியம் தொல் மரபியலில் மூடு (1564)-சிறு பெண்ணாடு என்ற சொல் இடம்பெறுகிறது. சிறுவயதை உடைய பெண் ஆட்டைக் குறிக்கும் இச்சொல் சங்க இலக்கியங்களில் இடம் பெறவில்லை. பேராசிரியரும் 'மூடு இக்காலத்து வழக்கில் இறந்தன' என்றார். ஆனால், கொங்கு நாட்டிலும், அறந்தாங்கி வட்டத்திலும், குளித்தலை வட்டம் பஞ்சப்பட்டியிலும் இன்று வரை மூடு வழக்கில் உள்ளது. சங்க இலக்கியத்தில் இடம்பெறாததால் இச்சொல் தமிழ்ச் சொல் இல்லை என்றாகிவிடுமா?
எனவே பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உள்ளதால் ஓரை என்பது தமிழ்ச் சொல்லே. கிரேக்கர்கள்தான் இச்சொல்லைக் கடன்பெற்றனர். இந்த ஒரு சொல்லை வைத்து அவர்கள் வாதிட்டாலும், கிரேக்கர்களிடமிருந்தே தமிழர்கள் வானியலைக் கற்றிருக்க வேண்டும் என்ற முன்முடிவுடன் (Pre-Judice) ஆய்ந்துள்ளனர் எனத் தெரிகிறது. மாறாகச் சார்பில்லாமல் அவர்கள் ஆய்வு செய்திருந்தால் கிரேக்கர்கள் தமிழர்களிடமிருந்து கற்றுக் கொண்டதற்குச் சான்று கிரேக்கர்களின் பழங்குறிப்புகளிலிலேயே உள்ளதைக் கண்டிருப்பார்கள்.
தமிழர்கள் காலத்தை அளவிட பல்வேறு அளவு முறைகளைக் கையாண்டனர். அதாவது மொழி, மருத்துவம், காலம், இசை என்று ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அளவு முறையினைப் பயன்படுத்தினர். அதனால் தான் இலகு, துரிதம், துடி, நிமையம், காட்டை, இலபம், கணம், மாத்திரை, யாமம், நாழிகை, விநாழிகை, தர்ப்பரை எனப் பல்வேறு காலநுட்ப அளவுகளின் பெயர்கள் தமிழ் மொழியில் புழக்கத்தில் இருந்தன. இவ்வாறு காலத்தையும் அதன் நுட்பத்தையும் பலவாறு பகுத்துக் கையாண்டு வந்திருக்கின்றனர் தமிழர்கள்.
- பாலா பாரதி
No comments:
Post a Comment