Monday, 25 December 2023

தமிழர் காலக்கணிப்பு முறையும் தற்காலத் தமிழ்நாட்காட்டியில் செய்ய வேண்டிய திருத்தங்களும்                                                                                                               பாலா பாரதி

 மலேசியாவில் ஜூலை 2023 இல் நடைபெற்ற 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலரில் வந்த கட்டுரை  பக்கம்  291-321 )

 முன்னுரை

             அன்றாடம் பார்க்கும் வானில் இயங்கும் விண்மீன்கள், கோள்கள், உடுக்கணங்கள் ஆகியவற்றிற்கும் பருவகாலங்களுக்கும் உள்ள தொடர்பைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். அவற்றை நுட்பமாக நோக்கி நீண்ட காலமாகப் பதிவுசெய்து வந்ததால் உருவானதே தமிழர் வானியல். பல தலைமுறைகளாக உடுக்கள், கோள்களின் நிலைகளை ஆராய்ந்ததனால் அவர்களால் காலத்தை நுட்பமாகக் கணக்கிட முடிந்திருக்கிறது. இன்று நாம் வானில் காணும் புகழ்பெற்ற உடுக்கணமான ஓரையான் (Orion Constellation)  தமிழ்ப் பெயரைத் தாங்கியதே. காலத்தை அளக்கும் அளவுகளுள் ஒன்றான ‘ஓரை' என்ற தமிழ்ச் சொல்லைப் பெற்றிருக்கும் இவ்வுடுக்கணம் பண்டைய கிரேக்கப் புராணக் கதைகளில் இடம் பெற்றுள்ளது. தமிழர்கள் ஒருநாளை அறுபது நாழிகைகளாகப் பிரித்து, இரண்டரை நாழிகைகள்  ஓர் ஓரையென வகுத்து, ஒரு நாளை இருபத்து நான்கு ஓரைகளாகக் பகுத்ததையே நாம் இன்று ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணிநேரமாகப் பயன்படுத்துகிறோம். 

ஓரை என்னும் கால அளவானது இன்றைய ஒரு மணிநேரமாகும். இந்த ஓரையே இன்று நாம் வழங்கும் 'ஹவர்' (Hour) என்ற ஆங்கிலச் சொல்லானது. ஒரு வாரத்திற்கு ஏழு நாட்களை வழங்கி அவற்றை ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என வரிசைப்படுத்தி இன்று உலகோர் பயன்படுத்தும் வார நாட்களின் வரிசைக்கு வழிவகுத்தனர். ஞாயிற்றுப் பாதையை 360 பாகைகளாகப் பிரித்து அதைப் பன்னிரண்டு உடுக்கணங்களாக வகுத்துப் பழமையான நாட்காட்டியை உருவாக்கி,  பழமையான தொடராண்டான கலியாண்டு முறையையும் பயன்படுத்தினர். திசைகளை அறியவும், காலத்தை அளக்கவும் கருவிகளை உருவாக்கினார்கள். உலகின் முதல் நெடுவரையை உருவாக்கி மற்ற நாட்டின் நேரங்களையும் கணித்து இன்றைய நெடுவரைக் காலகணிப்பு முறைக்கு வழிவகுத்தனர். அவர்கள் உருவாக்கிக் கொடுத்த நாட்காட்டி இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இன்றைய காலத்திற்குத் தக்கவாறு அதில் திருத்தம் செய்யாததால் இன்றைய தமிழ் நாட்காட்டியானது பருவ காலங்களைத் துல்லியமாகக் குறிக்காமல் விலகி நிற்கிறது. அத்துடன்தமிழர்ஆண்டுமுறையில் முதல் மாதம் சித்திரையா? தையா? என்பதில் குழப்பம் நீடிக்கிறது. வானியல் அடிப்படையில் இதற்குத் தீர்வு உண்டு.  

தொல்மாந்தர்கள் தாங்கள் வாழ்ந்த குகைகளில் ஓவியங்களை வரைந்து வைத்துள்ளனர். இவற்றையே பாறை ஓவியங்கள் அல்லது குகை ஓவியங்கள் என்கிறோம். உலகின் பிற பகுதிகளில் கிடைப்பது போன்று தமிழகத்திலும் இத்தகைய ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள குகைகளுக்குப் பயணம் செய்து அவற்றை நாம் ஆய்வுச் செய்து வருகிறோம். அவற்றில் சில ஓவியங்கள் வானியல் குறியீடுகளாக உள்ளன. தமிழர் தொடராண்டுமுறை ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அக்காலத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் குகைகளில் தங்களின் வானியல் கணக்கீடுகளைப் பதிவு செய்து வைத்துள்ளனர். மதுரை  உசிலம்பட்டிக்கருகில் 'புலிப்புடவு' என்னும் குகையில் இத்தகைய ஓவியங்களைப் பார்த்து அவற்றைப் பதிவு செய்திருக்கிறோம். இதிலுள்ள ஓவியம் பழைய பாடலொன்றில் கூறப்பட்ட வானியல் கூறுகளுடன்ஒத்து உள்ளது. மேலும், மிகவும் பழமையான தமிழ் நாட்காட்டியில் தற்காலத்திற்கு ஏற்றவாறு சில மாற்றங்களையும் கொண்டு வரவேண்டும்.  மேற்கண்ட கருத்துக்களை இலக்கிய, வானியல், தொல்லியல் சான்றுகளுடன் இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம். 

 தமிழர்களின் காலக் கணக்கீடு

சிறந்த வானியல் அறிவைப் பெற்றிருந்த தமிழர்கள், அதைக் கொண்டு காலத்தை மிகத்துல்லியமாக அளந்துள்ளனர்.  மொழியியலில் பயன்படுத்தப்பட்ட கால அளவினை மாத்திரை என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.

             "கண் இமை, நொடி என அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டே ஆறே'   -  (தொல்-7) 

 கையை நொடிக்க ஆகும் நேரமே ஒரு மாத்திரை என்பது இதன் பொருள். பழஞ்சூத்திரம் ஒன்று இதை மேலும் நுணுக்கமாகப் பார்க்கிறது.

             "உன்னல் காலே உறுத்தல் அரையே 

முறுக்கல் முக்கால்  விடுத்தல் ஒன்றே"

     இதன் விளக்கம்: பெரு விரலையும் நடு விரலையும் சேர்த்து நொடிக்க வேண்டும் என்று நினைத்த உடனே கால் மாத்திரை ஒலி அளவை உடைய நுண் ஒலி எழுகிறது.பெரு விரலையும் நடுவிரலையும் சேர்க்கிற போது அரை மாத்திரை ஒலி அளவை உடைய இயைபு ஒலி உண்டாகிறது.பெருவிரலையும் நடு விரலையும் சேர்த்து முறுக்கும் போது முக்கால் மாத்திரை ஒலி அளவை உடைய நடு ஒலித் தோன்றுகிறது.முறுக்கிய இரண்டு விரல்களில் நடு விரலை மட்டும் தனியே பிரித்து பெருவிரல் நடு விரலில் அடிக்கும் போது புலர் ஒலி காதில் கேட்கும்படி ஒரு மாத்திரை ஒலி அளவுடன் ஒலிக்கிறது.

 

2 கண்ணிமை

1 கைந்நொடி

2 கைந்நொடி

1 மாத்திரை

2 மாத்திரை

1 குரு

2 குரு

1 உயிர்

2 உயிர்

1 சணிகம்

12 சணிகம்

1விநாடி

60 விநாடி

1 நாழிகை

2 1/2 நாழிகை

1 ஓரை (இன்றைய ஒரு மணி நேரம்) 

3 3/4 நாழிகை

1 முகூர்த்தம்  (1 1/2 மணி நேரம்)

2 முகூர்த்தம்

1 சாமம் (3 மணி நேரம்)

4 சாமம்

1 பொழுது (12 மணி நேரம்) 

2 பொழுது

1 நாள் (24 மணி நேரம்) 

15 நாள்

1 பக்கம் 

2 பக்கம்

1 மாதம்

6 மாதம்

1 அயனம்

2 அயனம்

1 ஆண்டு

60 ஆண்டு

1 வட்டம்

 (இந்த அலகுகள் காலந்தோறும் வெவ்வேறு பெயர்களைப் பெற்றிருக்கின்றன). 

 ஓர் ஓரையே இன்றைய ஒரு மணி நேரம்

     காலக்கணிப்பில் நாழிகை என்ற அலகு முதன்மையானது. இன்றும் சாதகம் கணிப்பவர்கள் நாழிகையையே பயன்படுத்துகின்றனர். இரண்டரை நாழிகை ஓர் ஓரையாகும். ஓர் ஓரை என்பது இன்றைய காலக் கணக்கின்படி ஒரு மணி நேரம் ஆகும். இந்த ஓரை எனும் சொல் ஓரையான் உடுக்கணத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டுள்ளது. ஓரை என்பது தமிழ்ச்சொல். ஓரையான் உடுக்கணத்தின் பெயருடன் ஓரை என்ற காலத்தின் அலகிற்கான பெயரையும் உலகத்தோர் தமிழர்களிடமிருந்து பெற்றிருக்கின்றனர். ஓரை எனும் தமிழ்ச்சொல் வடமொழிக்குச் செல்லும்போது 'ஹோரை' என்றாகிறது. கிரேக்கத்திற்குச் செல்லும்போது 'ஹோரா' என்றாகி, இலத்தீன் வழியே ஆங்கிலத்திற்கு 'ஹோராஸ்' என வந்து இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் 'ஹவர்' (Hour) என்றாகியிருக்கிறது. அதிலிருந்து 'ஹோரோஸ்கோப்' என்ற சாதகத்துக்குப் பெயரும் வந்தது.  தொல்காப்பியத்தில் ஓரை என்ற சொல் குறிப்பிடப்படுகிறது.

             "மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் 

துறந்த ஒழுக்கம் கிழவோற் கில்லை"    (தொல்.பொருள்.கள.44)

     வையாபுரிபிள்ளையும், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியும்  இதில் வரும் ஓரை தமிழ்ச்சொல் இல்லை என்றும், இது 'ஹோரா' என்ற கிரேக்கச் சொல்லின் மருஉ எனவும் வாதிடுவர். வையாபுரிபிள்ளை காரணம் கூறும்போது, ஓரை என்ற காலத்தைக் குறிக்கக்கூடிய சொல் தொல்காப்பியத்தில் உள்ளது, ஆனால் சங்க இலக்கியங்களில் இல்லை. எனவே தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்கு பின்னர் எழுதப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்கிறார். அவரின் இந்தத் தலைகீழ் பார்வையால் தொல்காப்பியம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்ற மயக்கத்திற்கு அவர் ஆட்படவேண்டி இருந்தது. 

 தமிழ் மொழியில் உள்ள சொற்கள் அனைத்தும் சங்க இலக்கியங்களில் உள்ளதா? எனில் இல்லை. எல்லா சொற்களும் சங்க இலக்கியங்களில் இடம்பெற வேண்டிய முறை இல்லை. சூழலுக்கு ஏற்ப சொற்கள் அமையும். எடுத்துக்காட்டாகத் தொல்காப்பியம் தொல் மரபியலில் மூடு (1564)-சிறு பெண்ணாடு என்ற சொல் இடம்பெறுகிறது. சிறுவயதை உடைய பெண் ஆட்டைக் குறிக்கும் இச்சொல் சங்க இலக்கியங்களில் இடம் பெறவில்லை. பேராசிரியரும் 'மூடு இக்காலத்து வழக்கில் இறந்தன' என்றார். ஆனால், கொங்கு நாட்டிலும், அறந்தாங்கி வட்டத்திலும், குளித்தலை வட்டம் பஞ்சப்பட்டியிலும் இன்று வரை மூடு  வழக்கில் உள்ளது. சங்க இலக்கியத்தில் இடம்பெறாததால் இச்சொல் தமிழ்ச் சொல் இல்லை என்றாகிவிடுமா?

 எனவே பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உள்ளதால் ஓரை என்பது தமிழ்ச் சொல்லே. கிரேக்கர்கள்தான் இச்சொல்லைக் கடன்பெற்றனர். இந்த ஒரு சொல்லை வைத்து அவர்கள் வாதிட்டாலும், கிரேக்கர்களிடமிருந்தே தமிழர்கள் வானியலைக் கற்றிருக்க வேண்டும் என்ற முன்முடிவுடன் (Pre-Judice) ஆய்ந்துள்ளனர் எனத் தெரிகிறது. மாறாகச் சார்பில்லாமல் அவர்கள் ஆய்வு செய்திருந்தால் கிரேக்கர்கள் தமிழர்களிடமிருந்து கற்றுக் கொண்டதற்குச் சான்று கிரேக்கர்களின் பழங்குறிப்புகளிலிலேயே உள்ளதைக் கண்டிருப்பார்கள். 

 தமிழர்கள் காலத்தை அளவிட பல்வேறு அளவு முறைகளைக் கையாண்டனர். அதாவது மொழி, மருத்துவம், காலம், இசை என்று ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அளவு முறையினைப் பயன்படுத்தினர். அதனால் தான் இலகு, துரிதம், துடி, நிமையம், காட்டை, இலபம், கணம், மாத்திரை, யாமம், நாழிகை, விநாழிகை, தர்ப்பரை எனப் பல்வேறு காலநுட்ப அளவுகளின் பெயர்கள் தமிழ் மொழியில் புழக்கத்தில் இருந்தன. இவ்வாறு காலத்தையும் அதன் நுட்பத்தையும் பலவாறு பகுத்துக் கையாண்டு வந்திருக்கின்றனர் தமிழர்கள்.

 ஒரு வாரத்திற்கு ஏன் ஏழு நாட்கள்?

 கோள்களின் எண்ணிக்கையே வார நாட்கள் என்பது பொதுவான கருத்து. வெறும் கண்களுக்குத் தெரியாத யுரேனஸ், நெப்டியூனைத் தவிர்த்துப் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி என ஐந்து கோள்கள்தான் அந்தக் காலத்தில் தெரியும். ஆங்கிலத்தில் பிளானெட்டுகள் (Planets) எனப்படும் சொல் கிரேக்கத்திலிருந்துப் பெறப்பட்டது. அதற்குத் திரிபவர்கள் (Wanderes) எனப்பொருள். அதாவது விண்மீன்களின் நிலைத்த பின்னணியில் நகரும் இவற்றை கிரேக்கர்கள் திரிபவர்கள் என அழைத்துள்ளனர். அவர்களின் கொள்கைப்படி சூரியனும், சந்திரனும் பிளானெட்டுகள் அல்ல. அவர்கள் வார நாட்களை உருவாக்கியிருந்தால் வாரத்திற்கு ஐந்து நாட்கள் என உருவாக்கியிருப்பார்கள். தமிழர்கள் இவற்றை கோள்கள் என அழைத்துள்ளனர். அதாவது கோளமான (உருண்டை) வடிவத்தைக் கொண்டவை என்ற பொருள்படி. அப்படிப் பார்த்தால் சூரியனும், சந்திரனும் கோள்களே. ஆகவே இவர்கள் கணக்கின்படி மொத்தம் ஏழு கோள்கள். இவ்வேழு கோள்களும் பூமியை வலம் வருவதாகக் கொண்டு ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள் என வகுத்துள்ளனர். இக்கருத்து பின்னர் இராகு, கேதுவையும் சேர்த்து நவக்கிரகங்களாக மாற்றம் பெற்றுள்ளது. கோள்கள் கோளவடிவிலானவை  என்பதை மட்டும் அவர்கள்  அறிந்திருக்கவில்லை, அவற்றின் அளவுகளைக் கூட அறிந்திருக்கின்றனர். நமது சூரியக் குடும்பத்தின் பெரிய கோள் வியாழன் (Jupiter) என இப்போது நமக்குத் தெரியும். ஆனால் இதைத் தமிழர்கள் வெகுகாலத்திற்கு முன்பே தெரிந்து வைத்திருக்கின்றனர். வியாழன் என்ற சொல்லுக்குப் பெரியது எனப்பொருள்.

 

வியல் < வியன் < வியாழம் (விசாலம்) < வியாழன் 

 

என வேர்சொல் விரியும்.

 

“வியல் என் கிளவி அகலப் பொருட்டே”                                  (தொல்-உரி.16)

 வியாபித்தல் என்றால் பெரிய இடத்தை நிரப்புதல் என இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். திருச்சிக்கருகில் இன்றைய கருவூர் மாவட்டத்து  நெய்தலூர் அருகே 'வியாழமேடு' என்ற ஊர் உள்ளது. பெரியமேடு ஒன்றின் மேல் இவ்வூர் உள்ளது. பெரிய மேடு எனப் பொருள்படும்படி அவ்வூர் வியாழமேடு என அழைக்கப்படுகிறது. வானை நன்றாகப் பார்க்குமாறு அமைந்துள்ள இவ்வூரில் காலத்தைக் கணித்துக்கூறிய கணியர்கள் வாழ்ந்திருக்கவேண்டும். அவர்கள் வழிவந்தவர்களான சாதகம் கணிக்கும் வள்ளுவர் மரபினர் இன்றும் இவ்வூரில் சாதகம் எழுதிக்கொடுக்கின்றனர். 

 வார நாட்களின் பெயர்கள் எவ்வாறு பெறப்பட்டன?

 வார நாட்களான ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவை Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday எனத் தமிழில் உள்ள அதே பொருளுடனேயே அழைக்கப்படுகின்றன. இந்த ஏழு நாட்களும் எந்த வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கான தெளிவான விளக்கம் எங்கும் இல்லை. சுமேரியர்களிடமிருந்து, கிரேக்கர்கள் கற்றனர். கிரேக்கர்களிடமிருந்து ரோமானியர் கற்றனர் எனப் பொதுவாகவே கூறப்பட்டுள்ளது. இதற்கான சரியான விளக்கம் கிடைக்காததால் இம்மயக்கம் ஏற்பட்டிருக்கலாம். தமிழர்களிடம் இதற்கான தெளிவான விளக்கம் உள்ளது. 1955 இல் முதல் பதிப்பாக வந்த 'சாதக அலங்காரம்' எனும் புத்தகத்தில் உள்ள பாடல்களுள் ஒன்றில் இதற்கான விளக்கம் உள்ளது. இந்நூலின் ஆசிரியர் திரு கீரனூர் நடராஜன். இப்பாடல் பதினேழாம் நூற்றாண்டு ஓலைச் சுவடிகளில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

                         "அருக்கன் புகர்புந்தி யிந்துண்

       மந்தனோ டந்தணன் சேய் 

இருக்குங் கடிகை யிரண்டரையா

       மிந்த ஓரைகளில்...."

 

(அருக்கன்-ஞாயிறு, புகர்-வெள்ளி, புந்தி-புதன், இந்து-திங்கள், துண்மந்தன்-சனி, அந்தணன்-வியாழன், சேய்-செவ்வாய்)

 

பொருள்:        ஒரு நாளை ஞாயிறு, வெள்ளி, புதன், திங்கள், சனி, வியாழன், செவ்வாய் ஆகிய ஏழு கோள்களும், இரண்டரை இரண்டரை நாழிகையாகத் தம்முள் மாறி மாறிப் பங்கிட்டுக் கொள்கின்றன.

 

ஒரு நாள்      =   60 நாழிகை 

60 நாழிகை   =  24 ஓரை

ஒரு நாள்      = 24 ஓரை

 

மேற்சொன்ன வரிசையில் இரண்டரை நாழிகைகள் அதாவது ஓர் ஓரையை (ஒரு மணி நேரம்) ஒவ்வொரு கோளும் எடுத்துக்கொள்ள, 24 ஓரைகள் முடிந்து 25 ஆவது ஓரை எந்தக் கோளில் வருகிறதோ அக்கோளின் பெயரால் அந்த நாள் அழைக்கப்படும்.  

 

 1

ஞாயிறு

1

திங்கள்

1

செவ்வாய்

1

புதன்

1

வியாழன்

1

வெள்ளி

1

சனி

2

வெள்ளி

2

சனி

2

ஞாயிறு

2

திங்கள்

2

செவ்வாய்

2

புதன்

2

வியாழன்

3

புதன்

3

வியாழன்

3

வெள்ளி

3

சனி

3

ஞாயிறு

3

திங்கள்

3

செவ்வாய்

4

திங்கள்

4

செவ்வாய்

4

புதன்

4

வியாழன்

4

வெள்ளி

4

சனி

4

ஞாயிறு

5

சனி

5

ஞாயிறு

5

திங்கள்

5

செவ்வாய்

5

புதன்

5

வியாழன்

5

வெள்ளி

6

வியாழன்

6

வெள்ளி

6

சனி

6

ஞாயிறு

6

திங்கள்

6

செவ்வாய்

6

புதன்

7

செவ்வாய்

7

புதன்

7

வியாழன்

7

வெள்ளி

7

சனி

7

ஞாயிறு

7

திங்கள்

8

ஞாயிறு

8

திங்கள்

8

செவ்வாய்

8

புதன்

8

வியாழன்

8

வெள்ளி

8

சனி

9

வெள்ளி

9

சனி

9

ஞாயிறு

9

திங்கள்

9

செவ்வாய்

9

புதன்

9

வியாழன்

10

புதன்

10

வியாழன்

10

வெள்ளி

10

சனி

10

ஞாயிறு

10

திங்கள்

10

செவ்வாய்

11

திங்கள்

11

செவ்வாய்

11

புதன்

11

வியாழன்

11

வெள்ளி

11

சனி

11

ஞாயிறு

12

சனி

12

ஞாயிறு

12

திங்கள்

12

செவ்வாய்

12

புதன்

12

வியாழன்

12

வெள்ளி

13

வியாழன்

13

வெள்ளி

13

சனி

13

ஞாயிறு

13

திங்கள்

13

செவ்வாய்

13

புதன்

14

செவ்வாய்

14

புதன்

14

வியாழன்

14

வெள்ளி

14

சனி

14

ஞாயிறு

14

திங்கள்

15

ஞாயிறு

15

திங்கள்

15

செவ்வாய்

15

புதன்

15

வியாழன்

15

வெள்ளி

15

சனி

16

வெள்ளி

16

சனி

16

ஞாயிறு

16

திங்கள்

16

செவ்வாய்

16

புதன்

16

வியாழன்

17

புதன்

17

வியாழன்

17

வெள்ளி

17

சனி

17

ஞாயிறு

17

திங்கள்

17

செவ்வாய்

18

திங்கள்

18

செவ்வாய்

18

புதன்

18

வியாழன்

18

வெள்ளி

18

சனி

18

ஞாயிறு

19

சனி

19

ஞாயிறு

19

திங்கள்

19

செவ்வாய்

19

புதன்

19

வியாழன்

19

வெள்ளி

20

வியாழன்

20

வெள்ளி

20

சனி

20

ஞாயிறு

20

திங்கள்

20

செவ்வாய்

20

புதன்

21

செவ்வாய்

21

புதன்

21

வியாழன்

21

வெள்ளி

21

சனி

21

ஞாயிறு

21

திங்கள்

22

ஞாயிறு

22

திங்கள்

22

செவ்வாய்

22

புதன்

22

வியாழன்

22

வெள்ளி

22

சனி

23

வெள்ளி

23

சனி

23

ஞாயிறு

23

திங்கள்

23

செவ்வாய்

23

புதன்

23

வியாழன்

24

புதன்

24

வியாழன்

24

வெள்ளி

24

சனி

24

ஞாயிறு

24

திங்கள்

24

செவ்வாய்

 இதன்படி பார்த்தால் முதல் நாளின் பெயர் 'ஞாயிறு' என எடுத்துக் கொள்வோம் இருபத்து நான்கு ஓரைகள் முடிந்து இருபத்து ஐந்தாவது ஓரையாக அதாவது அடுத்த சுற்றின் முதல் ஓரையாகத் திங்கள் வருகிறது எனவே இரண்டாம் நாளின் பெயர் 'திங்கள்'. இத்திங்கள் முதல் ஓரையாகக் கொள்ளப்பட்டு மீண்டும் 24 ஓரைகளைக் கடந்தால் அடுத்து வரும் ஓரை ‘செவ்வாய்'. இதுவே மூன்றாம் நாளின் பெயர். இச்செவ்வாயை முதல் ஓரையாகக் கொண்டு மீண்டும் இருபத்து நான்கு ஓரைகளைக் கடந்தால் அடுத்த ஓரையாக 'புதன்' வருகிறது. எனவே நான்காம் நாளின் பெயர் 'புதன்'. இவ்வாறாக ‘வியாழன்` ஐந்தாவது நாளாகவும், 'வெள்ளி' ஆறாவது நாளாகவும், 'சனி' ஏழாவது நாளாகவும் வருகிறது. 

 ஒரு நாளுக்கு ஏன் 24 மணி நேரம்?

அறுபது விநாடிகள் ஒரு நிமிடம், அறுபது நிமிடங்கள் ஒரு மணி. எனவே அறுபது மணிதானே ஒரு நாளாக இருக்க வேண்டும்? ஏன் இருபத்து நான்கு மணி நேரம் ஒரு நாளாக உள்ளது? இதற்கும் சரியான விளக்கம் வேறெங்கும் இல்லை, ஆனால் தமிழர் காலக் கணக்கீட்டில் உள்ளது. தமிழகத்திற்கு வந்த வீரமா முனிவர் என்கிற கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்கிற பாதிரியார், தமிழர்களின் நாட்காட்டிகளை ஆராய்ந்து அவர்களின் காலக்கணிப்பைப் பற்றி De Annis ac Mensibus Tamulicis (Tamil months and years) என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்.

 ‘தமிழர்கள் ஒரு நாளை அறுபது மணிகளாக அளக்கின்றனர்'. 

 இங்கு அவர் மணி எனக்குறிப்பிடுவது நாழிகையை. எனவே ஒரு நாளைக்கு அறுபது மணி (நாழிகை) என்றே கணக்கிட்டுள்ளனர். இன்றைக்கும் சாதகம் கணக்கிடுபவர்கள் ஒரு நாளை அறுபது நாழிகைகளாகக் கொண்டே கணக்கிடுவதை காணலாம்."அல்லுபகல்அறுபதுநாழிகையும்" என்றொருவழக்குண்டு. இந்த அறுபது நாழிகைகளை ஓரைகளாகப் பிரிக்கும்போது ஒரு ஓரைக்கு இரண்டரை நாழிகைகளைக் கொடுத்துள்ளனர், அதாவது அறுபது நாழிகை = இருபத்து நான்கு ஓரைகள். திருச்சி-துறையூர் சாலையில் உள்ள திருவெள்ளறை என்ற ஊரில் உள்ள பெருமாள் கோயில் வானியல் குறியீடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் பெருமாளைக் காண இரண்டு வாயில் உண்டு. இவ்விரு வாயில்களும் உத்திராயன வாயில், தட்சிணாயன வாயில் என அழைக்கப்படுகின்றன. தை முதல் தேதியிலிருந்து ஆனி கடைசி தேதி வரை உத்திராயன வாயிலும், ஆடி முதல் தேதியிலிருந்து மார்கழி கடைசி தேதி வரை தட்சிணாயன வாயிலும் திறந்திருக்கும். இவை சூரியன் நகரும் வடசெலவு, தென் செலவு காலங்கள் ஆகும். இந்த வாயில்களில் படிக்கட்டுகளின் வழியே ஏறிச் சென்று இறைவனை வழிபட வேண்டும். இவ்விரண்டு வாயில்களிலிலுமுள்ள படிக்கட்டுகளின் எண்ணிக்கை இருபத்து நான்கு. இது இருபத்து நான்கு ஓரைகளைக் குறிக்கக் கூடிய கட்டுமானம் ஆகும்.

 தமிழர்களின் தொடராண்டு - கலியாண்டு

இந்தியாவில் சக ஆண்டு, விக்ரம ஆண்டு, கொல்லம் ஆண்டு உட்பட பல தொடராண்டுகள் வழக்கிலிருந்துள்ளன. தமிழர்களுக்கென தனியான தொடராண்டு இல்லை என்பது பொதுக்கருத்து. அதனால்தான் தமிழர்களுக்கான தனியான தொடராண்டை உருவாக்க 1921 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் அவர்களின் தலைமையில் திருவள்ளுவராண்டை உருவாக்கினர். திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகக் கருதப்படும் கி.மு.31 இல் இவ்வாண்டு தொடங்குகிறது. எனவே பொது ஆண்டுடன் 31ஐ கூட்டினால் திருவள்ளுவராண்டு கிடைக்கும். எடுத்துக்காட்டாகப் பொது ஆண்டு 2023 இன் திருவள்ளுவராண்டு 2023+31=2054 ஆகும். இவ்வாண்டு முறை 1971 இல் அரசிதழில் வெளிவந்து நடைமுறைக்கு வந்தது.

 உண்மையில் தமிழர்களுக்கென்று தனி தொடராண்டு இல்லையா? பழங்காலத்திலேயே காலத்தை நுட்பமாக அளந்து ஆண்டைத் துல்லியமாகக் கணக்கிட்டவர்கள் தொடராண்டைப் பயன்படுத்தாமல் இருந்திருப்பார்களா? உறுதியாகப் பயன்படுத்தி இருப்பார்கள். அவர்கள் உருவாக்கிய தொடராண்டுதான் உலகின் வழக்கிலுள்ள பழமையான தொடராண்டான 'கலியாண்டு'. தமிழர்களின் தொன்மையான வானியல் அறிவிற்கு மற்றொரு சான்று 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் வகுத்துவைத்த கலியாண்டு. கி.மு.3101, பிப்ரவரி 18 ஆம் நாளில் சூரியன், சந்திரன் உட்பட பிறகோள்கள் அனைத்தும் மேழ இராசியில் ஒன்றிணைந்திருந்தன. இந்நாளையே கலியாண்டின் தொடக்கமாகக் கொண்டனர். கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் குறிப்பிடப்படுவதிலிருந்து கலியாண்டு மக்கள் வழக்கில் இருந்தது எனத் தெரிகிறது. கலியாண்டைக் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கும் சான்று கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் கிடைக்கிறது. கி.பி.634-635 ஆம் ஆண்டைச் சேர்ந்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியின் அய்யவொளெ கல்வெட்டில் முதன்முதலாகக் கலியாண்டு 3735 என்று குறிப்பிடப்படுகிறது. இத்துடன் சக ஆண்டு 556 எனக் குறிப்பிடப்படுவதால் கலியாண்டை மீள் உருவாக்கம் செய்வது எளிதாகியது. சக ஆண்டுடன் 78 யைக் கூட்டினால் பொது ஆண்டு கிடைக்கும். 556+78=கி.பி.634. ஆகவே கலியாண்டு 3735-634=3101. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையனின் கி.பி. எட்டாம் ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமலை, திருப்பரங்குன்றம் கிரந்தக் கல்வெட்டுகளில் கலியாண்டு குறிப்பிடப்படுகிறது. ஆனைமலைக் கல்வெட்டில் கலியாண்டு 3871 (3871-3101=கி.பி.770) என்றும் திருப்பரங்குன்றம் கல்வெட்டில் 3874 (3874-3101=கி.பி.773) என்றும் குறிப்பிடப்படுகிறது. கலியாண்டு கல்வெட்டுகள் மட்டுமின்றிச் செப்பேடுகளிலும் குறிப்பிடப்படுவதிலிருந்து இது பொது மக்களின் பயன்பாட்டில் இருந்துள்ளது எனத் தெரிகிறது. கோநந்தடக்கனின் பார்த்திவசேகரபுரச் செப்பேடு பின்வருமாறு கூறுகிறது. 

 

"ஸ்வதிஸ்தி ஸ்ரீ கலியுகக் கோட்டு நன்னான்

பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதினாயிரத்து

என்பத்து ஏழு சென்ற நாள்.............. “

வேணாட்டை ஆண்ட ஆய்குல மன்னன் கோகருந்தடக்கன் இச்செப்பேட்டில் கலியாண்டு 14,49,087 என்று கூறுவது நாட்களின் எண்ணிக்கை ஆகும். ஆண்டுக் கணக்கில் 14,49,087 / 365.25=3967, கலி 3967 அதாவது கி.பி.866. கலியாண்டு முறையை உருவாக்கியவர்கள் காலத்தைக் கணித்த கணியர் மரபினர் ஆவர். இவர்கள் அறிவர்கள் என அழைக்கப்பட்டவர்கள். இம்மரபைச் சேர்ந்த ‘கலியன்` என்பனால் இவ்வாண்டு முறை தொடங்கப்பட்டிருக்க வேண்டும். கலியன் என்ற தமிழ்ப்பெயர் இன்றும் வழங்குவதைக் காணலாம். கலி என்பது தமிழ்ச்சொல். கலித்தல் என்பதற்கு மகிழ்ச்சி, ஆரவாரம், மனச்செருக்கு எனப் பல பொருள்கள் உள்ளன. குறுந்தொகை-223 ஆம் பாடலில் தலைவிக் கூற்றாக,

 "பேரூர் கொண்ட ஆர்கலி விழாவில்....." 

 என வருகிறது. பெரிய ஊரில் உள்ள மக்கள் கொண்டாடிய மகிழ்ச்சியும், ஆரவாரமும் நிறைந்த விழா என்பது மேற்படி பாடலின் பொருள். பிங்கல நிகண்டு கலி என்பதற்கு வலிமை, ஒலி, கடல் என்று பொருள்களைச் சுட்டுகிறது. ஆனால் வடமொழியினர் கலி என்ற சொல்லுக்கு எதிர்மறையாக பொருள் கொள்கின்றனர். அதன் விளைவாகக் கலியுகத்தில் கொலை, கொள்ளை போன்றவை நடக்கும் எனக்கூறினர். கலியாண்டு முறையைக் கலியுகமாக உள்வாங்கிய வடமொழியினர் கூறிய எதிர்மறையான பொருளால் தமிழர்கள் அவ்வாண்டு முறையைப் பயன்படுத்தத் தயங்கியிருக்க வேண்டும். மேலும் இதன்மீது புராணக் கதைகள் புனையப்பட்டு 

                         கிருதயுகம் - 17 இலட்சத்து 18 ஆயிரம் ஆண்டுகள்

திரேதாயுகம் - 2 இலட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகள்

சவாபிரயுகம் - 8 இலட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்

கலியுகம் - 4 இலட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்

 எனவும், கிருஷ்ணர் வேறு உலகத்திற்கு சென்றதிலிருந்து கலியுகம் தொடங்குகிறது எனப் புராணக் கதைகளுடன் அறிவியலுக்கு அப்பாற்பட்டுக் கூறப்பட்டதால், கலியாண்டு முறை தமிழர்களிடம் அதன் சிறப்பை இழந்திருக்க வேண்டும். எட்டுத்தொகை நூல்களில் ஒன்று கலித்தொகை.

             “கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு..." 

என்பதிலிருந்து கலி என்றச் சொல்லின் சிறப்பு புலனாகிறது.

 

“தொக்க கலியில் மூவாயிரத்துத் தொண்ணூறில்

மிக்க கரிகால வேந்தனுந்தான்” - பக்கம்

அலைக்கும் புகழ்ப் பொன்னி யாறுகரை கண்டான்

மலைக்கும் புயித்தானும் வந்து"

எனக் கலியாண்டு 3090 இல் கரிகால சோழன் காவிரிக்கு கரையெடுத்தக் காலத்தைப் பதிவு செய்திருப்பதன் மூலம் கலியாண்டு இயல்பாகவே வழக்கிலிருந்தது எனத் தெரிந்து கொள்ளலாம்.

 தமிழர்களின் ஆண்டுக் கணக்கீடு

 பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள எடுத்துக்கொள்ளும் காலத்தை ஒரு நாள் என்கிறோம். இது தோராயமாக இருபத்து நான்கு மணி நேரமாகும். சரியாகக் கூறவேண்டுமானால் 23 மணி 56 நிமிடங்கள் 4 விநாடிகள். இதை உடு நாள் (Sidereal Day) என்போம்.  பூமி சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் ஓர் ஆண்டு எனப்படுகிறது. இது தோராயமாக 365 நாட்கள். சரியாக கூறினால் 365 நாள், 6 மணி, 9 நிமிடம், 10 விநாடி.

 மேலை நாட்டினர் ஒரு நாளை நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பிறகு அளக்கின்றனர். அடுத்த நாள் நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை ஒரு நாளாகக் கொள்கின்றனர். தமிழர்கள் சூரிய உதயத்திலிருந்து மறுநாள் சூரிய உதயம் வரை உள்ள காலத்தை அந்த நாளாகக் கொள்கின்றனர். ஒவ்வொரு நாள் சூரிய உதய நேரமும் சிறிதளவு மாறுவதால் ஒவ்வொரு நாளும் சரியாக இருபத்து நான்கு மணி நேரமாக இல்லாமல் சற்றுக் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கும். பூமி தன் அச்சில் தன்னைத்தானே சுழல்வதால் 'நாளும்' சூரியனை சுற்றுவதால் 'ஆண்டும்' ஏற்படுகின்றன. பூமி சூரியனைச் சுற்றும்போது, பூமியிலிருந்துப் பார்க்கும்போது சூரியன் பூமியைச் சுற்றி வருவதுபோல உள்ளது. சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைந்து மீண்டும் கிழக்கே உதிக்கிறது. இந்த சூரியன் செல்லும்பாதை சூரியபாதை அல்லது சூரிய வீதி (Zodiac) எனப்படுகிறது. இஃதுஓர் வட்டப்பாதை ஆகும்.

 இப்பாதையில் இயங்கும் உடுக்கணங்களில் பன்னிரண்டு உடுக்கணங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பன்னிரண்டு இராசிகள் என வகுத்தனர். ஒவ்வொரு இராசிக்கும் 30 பாகை சமமாகப் பகிரப்பட்டு முழு வட்டத்திற்கும் 30x12=360 பாகை கொடுக்கப்பட்டுள்ளது. இக்கணக்கீடே கணிதத்தில் வடிவியலில் ஒரு வட்டத்திற்கு 360 பாகைகளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தப் பன்னிரண்டு இராசிகள் மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் ஆகும். சூரியன் ஒவ்வொரு இராசியிலும் ஒரு மாதம் பயணிக்கும். ஒவ்வொரு இராசியிலும் சூரியன் ஒரே கால அளவில் பயணிப்பதில்லை. ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவு துல்லியமாகக் கணக்கிடப்படுகிறது.

 

எண்

பழந் தமிழ் பெயர்

தற்போதைய பெயர்

 இராசி

நாட்க ள்

நாழி கை

விநாழி கை

தற்ப ரை

வசதிக்காக

1

மேழம்

சித்திரை

மேழம்

30

55

32

00

31

2

விடை

வைகாசி

இடபம்

31

24

12

00

31

3

ஆடவை

ஆனி

மிதுனம்

31

36

38

00

32

4

கடகம்

ஆடி

கடகம்

31

28

12

00

31

5

மடங்கல்

ஆவணி

சிங்கம்

31

02

10

00

31

6

கன்னி

புரட்டாசி

கன்னி

30

27

22

00

31

7

துலை

ஐப்பசி

துலாம்

29

54

07

00

29/30

8

நளி

கார்த்திகை 

விருச்சிகம்

29

30

24

00

29/30

9

சிலை

மார்கழி

தனுசு

29

20

53

00

29

10

சுறவம்

தை

மகரம்

29

29

16

00

29/30

11

கும்பம்

மாசி

கும்பம்

29

48

24

00

29/30

12

மீனம்

பங்குனி

மீனம்

30

20

21

15

31

 

 

 

 

(359)

(371)

(271)

15

 

 

 

 

 

365

15

31

15

 

 

(371 நாழிகை = 6 நாள்+11 நாழிகை ,

271 விநாழிகை = 4 நாழிகை+ 3 விநாழிகை)

1 ஆண்டு = 365 நாள் +15 நாழிகை + 31 விநாழிகை + 15 தற்பரை

 தமிழ் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களா?

தமிழர்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலவின் பிறைகளைக் கொண்டு சந்திர நாட்காட்டியைப் பயன்படுத்தினர் என்று தமிழ்நாட்டில் காணப்படும் பாறை ஓவியங்களில் இருந்து தெரிகிறது. பின்னர் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனின் இயக்கத்தை நுட்பமாகக் கணித்துச் சூரிய நாட்காட்டியை உருவாக்கிக் கொண்டனர்.  பன்னிரண்டு மாதங்களின் பெயர்களை, சூரியன் இயங்கும் உடுக்கணத்தின் பெயர்களாகக் கொண்டிருந்தனர். சூரியன் மேழத்தில் இயங்கும் மாதம் மேழம், விடையில் இயங்கும் மாதம் விடை, இதுபோல ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் என பன்னிரண்டு மாதங்களின் பெயர்களை வைத்திருந்தனர். சித்திரை, வைகாசி வடமொழியினர் பயன்படுத்திய சந்திர நாட்காட்டியின் மாதங்களின் பெயர்களிலிருந்து பெறப்பட்டவை.

 தமிழர்களின் சூரிய நாட்காட்டியுடன் வடமொழியினரின் சந்திர நாட்காட்டி இணைந்து இன்றைய தமிழ் மாதங்களின் பெயர்கள் கிடைத்தன. சற்று விரிவாகப் பார்த்தால்தான் புரியும். கில்பர்ட் சிலேட்டர் “ ... இதுபோலவே தமிழ் ஆண்டுத்தொகுப்புமுறை (பஞ்சாங்கம்) ஆராய்ச்சிக்கு நல்ல தூண்டுதல் தரத்தக்கதாயுள்ளது. இன்று இத்துறையில் இரண்டு முறைகள் வழங்குகின்றன : ஒன்று சமயத்துறை சார்ந்தது, மற்றொன்று வாழ்க்கைத்துறை சார்ந்தது. சமயத்துறை சார்ந்த ஆண்டுத்தொகுப்பு முறை, தெலுங்குப் பஞ்சாங்கம் உட்பட எல்லா ஆசியப் பஞ்சாங்கங்களையும் போலவே மதிமுறை சார்ந்தது. இதுபற்றித் தனிப்படக் குறிப்பிட எதுவுமில்லை. ஆனால், சமயஞ் சாராத ஆண்டுத்தொகுப்பு ஞாயிற்றுச் சார்பானது மட்டுமன்று, முழுநிறை முறையிலேயே ஞாயிற்று வழியாய் அமைவது. அது மேனாட்டு முறைபோல, மதிய முறைப்படி முதலில் கணிக்கப்பட்ட மாதத்தை ஞாயிற்று முறைப்படி கணித்த ஆண்டுடன் பிற்காலத்தில் கொண்டு ஒட்டவைத்த முறையல்ல. சற்றும் மட்டுமழுப்பலில்லாமல் அது வியக்கத்தக்கவகையில் முனைத்த ஞாயிற்று முறையாயுள்ளது. ஏனெனில், அது ஒரு மாதத்தை இத்தனை முழு நாட்கள் என்றுகூட வகுத்தமைப்பதில்லை.” என்கிறார் .

 



பன்னிரண்டு இராசிகளும், இருபத்து ஏழு விண்மீன்களும் படத்தில் காட்டியவாறு அமைந்துள்ளன. சூரியன் மேழ இராசியில் இயங்கும் மாதம் சித்திரை எனப்படுகிறது. மாதத்தின் பெயர் எவ்வாறு பெறப்படுகிறது எனில் அந்த மாதத்தின் முழுநிலவு எந்த விண்மீனுக்கருகில் இயங்குகிறதோ அந்த விண்மீனின் பெயரால் அம்மாதம் அழைக்கப்படுகிறது. முழு நிலவு அன்று சூரியனும் நிலவும் நேரெதிராக இருக்கும் என நமக்குத் தெரியும். சூரியன் மேழத்தில் இருக்கும்போது மேழத்திற்கு நேரெதிராக இருக்கும் சித்திரை விண்மீனுக்கருகே முழுநிலவு வருவதால் அம்மாதம் சித்திரை எனப் பெறுகிறது. மேலும், அந்த நாளே சித்திரா பௌர்ணமியாகும். இங்கு ஒரு செய்தியைக் கவனிக்க வேண்டும். சித்திரா பௌர்ணமியன்று மாதம் ஆரம்பிப்பதில்லை மாதம் ஏற்கனவே சூரியன் மேழத்தில் நுழைந்தபோதே ஆரம்பித்துவிட்டது. அந்த மாதத்தின் முழுநிலவு அந்த மாதத்தில் ஏதோ ஒரு நாளில் வரும் அப்போது முழுநிலவு எந்த விண்மீன் அருகில் இருக்கிறது என்பதைப் பொறுத்து மாதத்தின் பெயர் கொடுக்கப்படுகிறது. இதேபோல் இரண்டாவது மாதத்தில் சூரியன் விடை (ரிஷபம்) இராசியில் இயங்கும். இந்த மாதத்தின் முழுநிலவு விசாகம் விண்மீனுக்கருகே இருக்கும் எனவே இரண்டாவது மாதம் வைகாசி (வைஸாக) எனப் பெயர் பெறுகிறது. இவ்வாறே மூன்றாவது மாதம் ஆனி எனவும் தொடர்ந்து மற்ற மாதங்களின் பெயர்கள் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி எனவும் பெயர்களைப் பெறுகின்றன.

 மாறும் நாட்காட்டிகள்

            நாட்காட்டிகள் வானியலை அடிப்படையாகக் கொண்டவை. இவை பருவகாலங்களையும், பண்டிகைகளையும் நமக்குக் கூறுவன. இவை  மிகத் துல்லியமானவைகளாக இருக்க முடியாது. நீண்ட காலமாகப் பயன்படுத்தும்போது இக்கூற்றை நாம் உணரமுடியும். பூமியின் சுழற்சி மூன்று வகைகளில் அமைகிறது. ஒன்று தன்னைத்தானே சுற்றுவது (Rotation), இரண்டாவது சூரியனைச் சுற்றிவருவது (Revolution), மூன்றாவது பூமியின் அச்சு உடுக்கணங்களைச் சுற்றிவருவது (Precession). இம்மூன்று சுழற்சிகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவைகளாக அமைவதால் நாட்காட்டிகளை மிகவும் நுட்பமாக கணக்கிட வேண்டியுள்ளது. எனவே, முற்காலங்களில் நாம் பயன்படுத்திய நாட்காட்டிகளை, தற்போதுள்ள நிலைக்குத் தக்கவாறு மாற்றியமைக்க வேண்டியுள்ளது. ஒரு நாள் என்பது பூமி தன்னைத்தானே சுற்றுவதற்கு எடுத்துக்கொள்ளும் காலமாகும். இக்காலத்தை இருபத்து நான்கு மணி நேரமாக எடுத்துக் கொள்கிறோம். இக்காலத்தை பூமியின் அட்சரேகை வழியே பயணம் செய்யும் சூரியன் ஒரு தீர்க்க ரேகையைக் கடந்து மீண்டும் அந்த ரேகையை அடைவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் என்றும் கூறலாம். 

 எளிமையாகக் கூறவேண்டுமெனில் ஒரு நாள் என்பது ஒரு சூரிய உதயத்திற்கும் மற்றொரு சூரிய உதயத்திற்கும் இடைப்பட்ட காலமாகும். இதைச் சூரிய நாள் (Solar Day) என்கிறோம். ஆனால் பூமி நிலையாக நின்றபடி சுழல்வதில்லை, சூரியனைச் சுற்றியவாறு சுழல்கிறது. இதனால் பூமியின் அச்சு இருபத்து நான்கு மணிநேரத்திற்குப் பிறகு மீண்டும் பழைய நிலையை அடையாமல் சற்று முன்னோக்கி நகர்ந்திருக்கும். அதாவது இருபத்து நான்கு மணிநேரத்தில் பூமி தனது பழைய நிலைக்கு வந்திருக்கும் நிலையில், அதன் அச்சு சிறிய அளவில் முன்னோக்கி நகர்ந்திருக்கும். இன்னும் நன்றாகப் புரியுமாறு கூறவேண்டுமெனில் பூமி இருபத்து நான்கு மணிநேரத்தில் தனது பழைய நிலையை அடைவதற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்பாகவே அதன் அச்சு பழைய நிலையை அடைந்திருக்கும். தொலைவில் இருக்கும் விண்மீனை நோக்கி அதன் அச்சு இருப்பதாகக் கொண்டால், மீண்டும் அதன் அச்சு 23 மணி 56 நிமிடங்கள், 4 விநாடிகளில் திரும்பியிருக்கும். இதைத்தான் உடுநாள் (Sidereal Day) என்கிறோம். 

 

சூரிய நாள் (Solar Day) =  24 மணி

உடு நாள் (Sidereal Day) =  23 மணி 56 நிமிடம் 4 விநாடி.

            இவ்வேறுபாட்டை நாம் உணரமுடியாது. ஆனால், இக்கால வேறுபாடு வேறு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் காண்போம். 

 வான் நடுவரையும் (Clestial Equator) சூரியப் பாதையும் (Zodiac) இரண்டு கற்பனையான வட்டங்கள். இவை 23.5 பாகை சாய்ந்திருப்பவை. இவ்விரு வட்டங்களும் இரண்டு புள்ளிகளில் வெட்டிக் கொள்கின்றன. அவ்விரு புள்ளிகளைச் சமநோக்குப் புள்ளிகள் (Equinoxes) என்கிறோம். அவை இளவேனிற் சமநோக்குபுள்ளி (Vernal Equinox), குளிர்கால சமநோக்குபுள்ளி (Winter Equinox) ஆகும். இவ்விரு புள்ளிகளுக்கும் தொலைவிலுள்ள இருபுள்ளிகள் கதிர்திரும்பும் புள்ளிகள் (Solestice) ஆகும். சமநோக்குப் புள்ளியில் பயணிக்கும் சூரியன் மீண்டும் அப்புள்ளியை அடைவது ஒரு ஆண்டாகும். பூமி சூரியனைச் சுற்றி வருவதனால் சூரியன் பயணிப்பது போலத் தெரியும். இதற்கு ஆகும் காலம் 365 நாள், 5 மணி, 48 நிமிடம், 46 விநாடி (365.242187 நாட்கள்). இது சூரிய ஆண்டு (Solar Year) அல்லது பருவ ஆண்டு (Tropical Year) எனப்படுகிறது. 

 ஏற்கனவே கூறிய பூமியின் மூன்றாவது சுழற்சியான, அச்சு உடுக்கணத்தைச் சுற்றிவரும் சுழற்சியின் காரணமாகச் சமநோக்குப் புள்ளிகள் சற்றுப் பின்னோக்கி நகர்கின்றன. இதனால் பூமியின் அச்சைப் பொறுத்து ஒரு ஆண்டின் காலம் சற்று அதிகரித்து 365 நாட்கள், 6 மணி, 9 நிமிடம், 10 விநாடி (365.256363 நாட்கள்) ஆக மாறுகிறது. இதை உடு ஆண்டு (Sidereal Year) என்கிறோம். பூமியிலிருந்துப் பார்த்து இதை எவ்வாறு புரிந்துகொள்வது எனில், சூரியன் இளவேனிற் சமநோக்குப் புள்ளியின் முதற்புள்ளியில் இன்று நுழைவதாகக் கொள்வோம். அடுத்த ஆண்டு அதே நாளில் இப்புள்ளி ஏற்கனவே கடந்துவிட்டிருக்கும். அதாவது இளவேனிற் சமநோக்கு புள்ளியானது சூரியப் பாதையில் மிகமெதுவாகப் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் பூமியின் அச்சு உடுக்கணங்களைப் பொறுத்துப் பம்பரம் தலையாட்டியபடி சுற்றுவதைப் போல் சுற்றுவதே. இந்நிகழ்வானது நாட்காட்டியில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தும். சில ஆண்டுகள் கணக்கில் பருவக்காலங்களில் மாற்றம் தெரியாவிட்டாலும், நீண்டக் கால இடைவெளியில் பருவக்காலங்களின் தேதிகள் மாறுவதைக் காணலாம். 72 ஆண்டுகளுக்கு ஒரு நாள் வீதம் கூடிக்கொண்டே வரும். இந்த ஆண்டு சித்திரை முதல் நாளன்று  சூரியன் மேழ இராசியில் நுழைந்தால் 72 ஆண்டுகள் கழித்துப் பங்குனி 30 அன்றே மேழ இராசியில் நுழைந்துவிடும். அதற்கு அடுத்த 72 ஆண்டுகள் கழித்துப் பங்குனி 29 அன்றே சூரியன் மேழ ராசியில் நுழைந்துவிடும். இதை ஈடு செய்ய அதாவது எப்போதும் ஆண்டின் முதல் நாள் அன்று மேழ இராசியின் முதற்புள்ளியில் சூரியன் நுழைய ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்காட்டியில் ஒரு நாளை சேர்த்துக்கொண்டே வரவேண்டும். நாம் நான்காவது நூற்றாண்டுக்குப் பிறகு அவ்வாறு செய்யாததால், இன்று நாட்காட்டியில் 23 நாட்கள் பின்தங்கி இருக்கிறோம். தற்காலக் கணக்கீட்டின்படி தமிழ் ஆண்டிற்கும் பருவ ஆண்டிற்கும் உள்ள வேறுபாடு 0.01656 நாட்கள். 1400 ஆண்டுகளில் இவ்வேறுபாடு 1400X0.01656=23 நாட்களாக மாறியுள்ளது.

 பூமியிலுள்ள நிலநடுக்கோட்டுக்கு (Equator) இணையாகச் சூரியன் இயங்கும் வட்டமே சூரியப்பாதை (Zodiac) ஆகும். இந்த சூரியப்பாதையும், வான் நடுவரையும் (Celestial Equator) வெட்டிக்கொள்ளும் இரண்டு புள்ளிகள் விழுக்கள் (விசுக்கள்) ஆகும். இவை விழுவங்கள் எனத் தமிழ்மரபில் அழைக்கப்படுகின்றன. இருபத்தேழு நாள்மீன்களில் ஒன்றாகிய மேழம் முதல் புள்ளியாக (First Point of Aries) வருவதை மேழவிழு (மேடவிழுவம்) என்றும், இந்த மேழவிழுவிலிருந்தே சூரிய ஆண்டு தொடங்குமாறும் தமிழர்கள் நாட்காட்டியை அமைத்தனர்.

 

ஒரு வட்டத்துக்கு 360 பாகை

ஓர் உடுவிற்கு 30 பாகை (360÷12=30) 

1 பாகைக்கு 72 ஆண்டுகள்

30 பாகைக்கு (ஓர் உடு) 30x72=2160 ஆண்டுகள் 

12 உடுக்களுக்கு 12x2160=25,920 ஆண்டுகள்

 



பூமியின் அச்சு உடுக்கணத்தைப் பொறுத்துச் சுழல்வதால் விழுக்கள் இரண்டும் மெல்ல மேற்கு நோக்கித் தொடர்ந்து நகரும். இந்நிகழ்வு விழுக்கள் முன்னுறல் (Precession of Equinoxes) எனப்படுகிறது. இதனை கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஹிப்பார்கஸ் (Hipparchas) கண்டுபிடித்ததாகக் கூறுவார்கள். ஆனால், தமிழர்கள் இந்த நிகழ்வு குறித்து அதற்கு முன்பே அறிந்திருக்கின்றனர்.

 சூரியன் உதிக்கும் புள்ளி ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே வரும். ஒரு ஆண்டு முழுவதும் சூரியன் உதிக்கும் புள்ளிகளை எடுத்துக்கொண்டால் அப்புள்ளிகள் இட, வலமாக நகர்வதைக் காணலாம். ஒரு ஆண்டில் இரு நாட்கள் சூரியன் சரியான கிழக்கில் உதிக்கும். அவ்விரு நாட்களில் பகலும் இரவும் சமமாக இருக்கும். இந்த நாட்கள் சமநோக்கு நாட்கள் (Equinox) என்கிறோம். பகலும் இரவும் சமமாக இருக்கும் நாளிலிருந்து அதாவது சூரியன் சரியான கிழக்கில் உதித்து நிலநடுக்கோட்டிற்குச் சரியாக நேர்மேலே செல்லும் நாளை முதல் நாளாகக் கொண்டு ஆண்டைக் கணக்கிட்டனர். சமநோக்கு புள்ளிகளைப் போல் இடது, வலது ஓரமாக இருக்கும் இரண்டு புள்ளிகள் கதிர் திரும்பும் புள்ளிகள் (Solestice) என அழைக்கப்படுகின்றன. இப்புள்ளிகள் வரை செல்லும் சூரியன் மறுபடியும் திசைத் திரும்பும் புள்ளிகளாகும். சித்திரை முதல்நாளன்று சமநோக்கு நாளாக இருக்கும்போது கதிர் திரும்பும் புள்ளிகள் தை 1 மற்றும் ஆடி 1, இடது ஓரத்தில் ஆடி 1, வலது ஓரத்தில் தை 1 என இருக்கும். தை 1 அன்று வலதுகோடியில் உதிக்கும் சூரியன் அடுத்த நாள் அதாவது தை 2 அன்று சற்று இடதுபுறம் தள்ளி உதிக்கும். இப்படி தினமும் உதிக்கும் புள்ளி நகர்ந்துக் கொண்டே வருவதைத்தான் வடசெலவு (உத்திராயணம்) என்கிறோம்.

 சித்திரை 1 அன்று நடுவில் வந்து, மேலும் வடக்கே பயணித்து ஆனி மாதம் 30 ஆம் தேதி அன்று வடசெலவை முடித்துக்கொள்ளும். அடுத்த நாள் அதாவது ஆடி 1 அன்று தெற்கிலிருந்து வடக்கே தனது பயணத்தைத் தொடரும். இதுவே தென் செலவு (தட்சணாயணம்) என்கிறோம். உண்மையில் சூரியன் தெற்கு வடக்காக நகரவில்லை, அது உதிக்கும் புள்ளிகளை ஒரு ஆண்டு முழுவதும் கவனித்தால் அது நகர்ந்ததைப் போலத் தெரியும் பாதையைத்தான் அவ்வாறு கூறுகிறோம். சூரியன் தெற்குக் கோடியில் உதிக்கும் நாளில் கடகரேகை வழியேயும், வடக்கு கோடியில் உதிக்கும் நாளில் மகரரேகை வழியேயும் பயணிக்கும். கடகரேகையும், மகரரேகையும் நிலநடுக்கோட்டிலிருந்து 23.5 பாகை தள்ளி இருப்பவை. பூமியின் அச்சு 23.5 பாகை சாய்வாக இருந்தபடி சுழல்வதால், சூரியன் இவ்விரு ரேகைகளுக்கும் இடையில் பயணிக்கும். இதையும் முதன்முதலில் கிரேக்கர்கள் கூறினார்கள் என்பார்கள். ஆனால், சூரியனின் இந்த வட, தென் செலவுகள் கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடையில் உள்ளவர்களால் மட்டுமே உணரமுடியும். கிரேக்கம் கடக ரேகையிலிருந்து தொலைவில் உள்ளது. அங்குச் சூரியன் வடக்கேயும், தெற்கேயும் பயணிக்காது. நிலநடுக்கோட்டை ஒட்டியுள்ளவர்களுக்கே இது நன்குத் தெரியும்.

 தமிழ் நாட்காட்டியில் மாற்றம் எப்போது ஏற்பட்டது?

சூரிய நாட்காட்டியானது பருவ காலங்களைச் சுட்டுவதாக இருந்தது. சந்திர நாட்காட்டியானது சமயம் சார்ந்த செயல்பாடுகளுக்குப் பயன்படுவது. சமயம் சார்ந்தச் செயல்பாடுகள் அதிகரித்த போது அவர்களுக்கு சூரிய நாட்காட்டி போதுமானதாக இல்லை. எனவே, சந்திர நாட்காட்டியின் தேவை ஏற்பட்டது. இதனால் சூரிய நாட்காட்டியுடன் சந்திர நாட்காட்டியை இணைத்து சூரிய - சந்திர நாட்காட்டியை உருவாக்கிக் கொண்டனர். பூமி அதன் அச்சில் சாய்ந்தவாறு தலையாட்டியபடி சுற்றுவதால் வான் நடுவரையும் சூரிய பாதையும் வெட்டிக்கொள்ளும் புள்ளியானது சூரியப் பாதையில் பின்னோக்கி நகரும் எனப் பார்த்தோம். 72 ஆண்டுகளுக்கு ஒரு பாகை வீதம் பின்னோக்கி நகரும் இந்தப் புள்ளியை எப்போதும் மேழ இராசியின் முதற் புள்ளியில் இருக்குமாறு செய்ய 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாட்காட்டியில் ஒரு நாளை நீக்கி ஆண்டு எப்போதும் மேலும் ஒன்றில் ஆரம்பிக்குமாறு செய்து வந்தனர். சூரிய சந்திர நாட்காட்டி இணைந்த பிறகு அவ்வாறு செய்ய முடியாமல் அம்முறையை கைவிட்டனர்.

 சித்திரை 1 ஆக இருந்த சமநோக்கு நாள் தற்போது பங்குனி 7 (மார்ச் 21) ஆக உள்ளது. அதே போல தை 1 ஆக இருந்த கதிர் திரும்பும் நாள் தற்போது மார்கழி 6 (டிசம்பர் 21) ஆக உள்ளது. வேறுபாடு 23 நாட்கள். அதாவது நாட்காட்டி 23 நாட்கள் பின்னோக்கி நகர்ந்துள்ளது. அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன்பு நாட்காட்டியைக் கணக்கிடும் முறையை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு கைவிட்டிருக்கின்றனர். தமிழர்கள் மட்டுமல்ல வடமாநிலத்தவரும் கூட இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு வானை நோக்கி கணக்கிடும் முறையை விட்டுவிட்டுச் சாதக முறையில் கணக்கிடத் தொடங்கினர். இதற்குப் பல்வேறு படையெடுப்புகள், பண்பாட்டுக் கலப்புகள் காரணமாக இருக்கலாம்.

 தமிழரின் நடுவரை கணக்கீடு

 நேரம் உலகம் முழுவதும்  ஒரே அளவாக இருப்பதில்லை, நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒவ்வொரு நாட்டிற்கும் நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? தற்போது 'கிரீன்விச் நடுவரை' (Greenwich Meridian) யைக் கொண்டு பூமியில் உள்ள நாடுகளின் நேரங்கள் அளக்கப்படுகின்றன. கோளவடிவில் உள்ள பூமியின் மேலுள்ள நாடுகள் ஒரு செவ்வகத்தில் பொருத்தப்படுகின்றன. இதில் செவ்வகத்தின் நீளம் அகலத்தை போல் இருமடங்காக இருக்கும். இச்செவ்வகத்தின் நடுவில் கிடைமட்டமாக போடப்படும் கோடு நிலநடுக்கோடாகும். இக்கோடு இரு சம பாகங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் பூஜ்ஜியத்தில் இருந்து பதினொன்று வரை பன்னிரண்டு புள்ளிகள் குறிக்கப்படுகின்றன. வலப்புறத்தில் பூஜ்ஜியத்திலிருந்து +11 வரையிலும், இடப்புறத்தில் பூஜ்ஜியத்திலிருந்து -11 வரையும் எண்ணிடப்படுகின்றன. இப்பள்ளிகளின் வழியே செல்லும் குத்துக்கோடுகள் (உண்மையில் வளை கோடுகள்) நெடுவரைகள் (Meridians) ஆகும். நடுவில் உள்ள பூஜ்ஜியத்தின் வழியே செல்லும் நெடுவரை முதன்மை நெடுவரை (Prime Meridian) அல்லது நடுவரை என அழைக்கப்படுகிறது. இக்கோடு இங்கிலாந்தின் கிரீன்விச் வழியே செல்வதால் இதை 'கிரீன்விச் நடுவரை' (Greenwich Prime Meridian) என அழைக்கப்படுகிறது.

 இந்த நடுவரையிலிருந்து உலகின் அனைத்து பகுதிகளுக்குமான நேரங்கள் வரையறுக்கப்படுகின்றன. இந்த நடுவரை இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், மேற்கு ஆப்பிரிக்கா வழியே செல்கிறது. தற்போது அணுக்கடிகாரம்  கொண்டு நுட்பமாகக் காலத்தைக் கூறும் முறையான UTC- Universal Time Coordinate முறையைப் பயன்படுத்துகிறோம். முதன்மை நடுவரையின் வலப்புறத்தில் இருக்கும் நெடுவரையில் நேரங்கள் கூடிக்கொண்டேவரும். முதன்மை நடுவரையில் மணி நடுஇரவு 12 ஆக இருக்கும்போது வலப்புறம் முதல் நெடுவரையில் காலை ஒரு மணியாகவும், இரண்டாம் நடுவரையில் காலை இரண்டு மணியாகவும் இருக்கும். இது தொடர்ந்து அதிகரித்து பதினொன்று  மணியில் முடியும். இடப்புறம் உள்ள நெடுவரைகளில் முதல் நெடுவரையில் இரவு 11 மணியாகவும், இரண்டாவது நெடுவரையில் இரவு10 மணியாகவும் தொடர்ந்து குறைந்துகொண்டே போகும். ஒரு நாடு எந்த நெடுவரையில் அமைகிறதோ அதைப் பொறுத்து அந்நாட்டின் நேரம் கூறப்படும். எடுத்துக்காட்டாக, இந்தியா ஐந்தாவது, ஆறாவது நெடுவரைகளில் அமைந்துள்ளது. இது ஐந்தரையாக எடுத்துக் கொள்ளப்பட்டு இந்தியாவின் நேரம் UTC+5:30 எனக் கணக்கிடப்படுகிறது. இதையே இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் (IST) என்கிறோம். அதாவது கிரீன்விச்சில் நடுஇரவு 12 மணியளவில் இந்தியாவில் காலை ஐந்து முப்பது மணி. இதுபோல முதன்மை நடுவரைக்கு இடப்புறம் உள்ள நாடுகளில் நேரம் குறைத்துக் கணக்கிடப்படுகிறது. இம்முறை எப்போதிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது?  உலகம் முழுக்க ஒரே முறையைக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவில் வாசிங்டன் நகரில் 1884 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அனைவரும் பொதுவான நடுவரையைப் பயன்படுத்துவது என்றும் அது இங்கிலாந்தின் 'இராயல் அப்சர்வேட்டரி' வழியே செல்லும் கோடாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருபத்து ஐந்து நாடுகள் கலந்து கொண்டதில் இருபத்து இரண்டு நாடுகள் ஒப்புதல் அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரான்ஸ் நாடு ஏற்றுக்கொள்ளாமல் தனது நடுவரையையே தொடர்ந்து பயன்படுத்திது. பின்னர் 1911 ஆம் ஆண்டிலிருந்து அந்நாடும் பொதுவான நடுவரையை ஏற்றுக்கொண்டது. 

 பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இவ்வாறு நெடுவரைகளைக் கொண்டு காலம் கணிக்கும் முறையை ஐரோப்பியர்கள் அறிந்திருந்தனர். ஆனால் அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நெடுவரைகளைக் கொண்டு உலகில் அனைத்துப் பகுதிகளின் நேரங்களையும் அளக்கும் முறையை தமிழர்கள் வகுத்திருந்தனர். மிகப்பரந்த நிலப்பரப்பில் ஒவ்வொரு இடத்தின் நேரங்களை ஏன் கணக்கிட்டனர்? உலகின் மற்ற பகுதிகளுக்கு கடலோடிகளாகத் தமிழ் வணிகர்கள் கப்பலில் சென்று வணிகம் செய்து வந்தனர். எனவே அவர்களுக்கு மற்ற நாடுகளுக்கான நேரம் கணிக்கும் முறைத் தேவைப்பட்டிருக்கிறது. அதனால் நெடுவரைக் கணக்கீட்டு முறையை தங்களுக்கென உருவாக்கிக் கொண்டனர். இம்முறையை எப்படி உருவாக்கினர் என்பதை சற்று விரிவாகவே பார்ப்போம்.

 இதற்கானச் சான்றுகள் தமிழ் ஐந்திரங்களில் (பஞ்சாங்கங்களில்) உள்ளன. பஞ்சாங்கம் என்றாலே மூட நம்பிக்கைகள் அடங்கிய புத்தம் என்று பலர் நினைப்பர். பிற்காலத்தில் நுழைந்த சடங்குகள், நோன்புகள், திருவிழாக்கள் போன்றவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் அதில் வானியல் குறிப்புகள் மிஞ்சும். அவற்றில் நாம் வரலாற்றுக் குறிப்புகளைக் கூட தேடலாம்.  அந்த வகையில் 'மநோன்மணி விலாச சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தில்' ஒரு குறிப்புக் காணப்படுகிறது. இந்த பஞ்சாங்கம் மத்திய ஸ்தானத்திற்கு கணிக்கப்பட்டதாகவும், தஞ்சாவூர் பலசாயை அங்குலம் 2, வியங்குலம் 17, இதற்கு அஷஜ்யா 643 இக்கு அஷாம்சம் 10, பாகை 47 கலை. லங்கோஜ்யையினி மத்ய ரேகையிலிருந்து ரேகாந்திரம் 34 வினாடிக்கு யோஜனை 46 கிழக்கு.  (அட்சம் – அட்சரேகை - Latitude,  ரேகாந்திரம் - தீர்க்ரேகை - Longitude, பலசாயை - விஷுதின சூரியோச்ச சமயம் 12 அங்குல சங்குவின் நிழலின் அங்குலமும் சதாம்சமும்)

 அதாவது பஞ்சாங்கம் கணிக்கப்பட்ட இடத்தின் அட்ச, தீர்க்க ரேகைகளை அக்கால அலகுகள் கொண்டு சொல்கிறார்கள். இன்று அட்சரேகை, தீர்க்க ரேகைகளை கூறும்போது பாகை (Degree) நிமிடம் (Minute) வினாடி (Second) எனக்கூறுவதைப்போல வேறு அலகுகளை பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். இன்று ஒருவருடைய இருப்பிடத்தைக் குறிக்கும்போது அட்சரேகையிலிருந்து எவ்வளவு தொலைவு, தீர்க்க ரேகையிலிருந்து எவ்வளவு தொலைவு எனக்குறிப்பதைப் போல இங்கு குறிப்பிடுகிறார்கள். இதில் "லங்கோஜ்யையினி மத்திய ரேகைக்கு" கிழக்கே தஞ்சாவூர் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் லங்கோஜ்யையினி மத்திய ரேகை என குறிக்கப்படுவது அக்காலத்தில் தமிழர்கள் உருவாக்கிப் பயன்படுத்திய நடுவரையாகும். இதிலிருந்து இன்றைய மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜையினியையும் இலங்கையையும் இணைக்கும் குத்துக்கோடு என புரிந்து கொள்ளலாம். ஆனால் உஜ்ஜையினியையும் இன்றைய இலங்கையையும் இணைக்கும் கோடு செங்குத்தாக இல்லை. எனவே, அங்கே குறிக்கப்படுவது இன்றைய இலங்கை அல்ல உஜ்ஜையினிக்கு நேர்கீழே இலங்கை என அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஏதோ ஒரு நிலப்பரப்பாகத்தான் இருக்க முடியும்.

 உஜ்ஜையினி 23.17 பாகை வடக்கு அட்சரேகை, 75.76 பாகை கிழக்கு தீர்க்கரேகையில் கடகரேகையின் மேல் அமைந்துள்ள நகரமாகும். இந்த உஜ்ஜையினியையும் இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு நிலப்பரப்பையும் இணைக்கும் ஒரு கோடே இந்த லங்கோஜ்ஜையினி மத்திய ரேகை என எளிதில் புரிந்துகொள்ளலாம். உஜ்ஜையினி நகரம் கடகரேகையின் மீது அமைந்துள்ள நகரமாகும், இதன் எதிர்ப்புறம் நிலநடுக்கோட்டின் மேலே லங்கோஜ்ஜையினி மத்திய ரேகையை இணைக்க ஒரு  நிலப்பரப்பு உண்மையில் இருந்ததா எனில் ஆம். அது தற்போது கடலில் அமிழ்ந்துள்ளது. நெடுவரை வகுக்கப்பட்ட காலத்தில் அந்த நிலப்பகுதி தீவாக இருந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் தரவுகள் கிடைத்துள்ளன.

 நிலநடுக்கோட்டின் மேலிருந்த அப்பகுதி இன்றைய மாலத்தீவுக்கு அருகே உள்ளது. தற்போதைய மாலத்தீவு நிலநடுக்கோட்டின் மேல் இல்லை, ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு கூட மாலத்தீவின் சில தீவுகள் நிலநடுக்கோட்டின் மீது அமைந்திருந்தன. இதை ஐரோப்பிய மாலுமிகளின் வரைபடங்கள் உறுதி செய்கின்றன. சான்றாக 1676 ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய மாலுமிகள் பயன்படுத்திய வரைபடத்தைக் கூறலாம். 500 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கோட்டின் மேலே இருந்த சில தீவுகள் இன்று கடல் நீரின் அடியில் உள்ளன. இதில் ஒரு தீவைதான் லங்கோஜ்ஜையினி மத்திய ரேகை உஜ்ஜையினியுடன் இணைக்கிறது. தற்போதைய மாலத்தீவு கடல் மட்டத்திற்கு மேலே சிறிதளவே உயரமாக உள்ளது. அதாவது கடல் மட்டம் மேலும் சிறிது உயர்ந்தாலும் அழிந்துவிடும் நிலையில் உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலப்பகுதிகள் கடல் மட்டத்தின் உயர்வால் நீரில் மூழ்கிவிட்டிருக்கின்றன. லங்கோஜ்ஜையினி மத்திய ரேகையுடன் இணையும் அந்த நிலப்பரப்பே பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் 'நிரட்ச்சலங்கை'. நிராசை என்றால் ஆசையில்லாத எனப் பொருள். நிர்-பூஜ்ஜியம், நிரட்சம் என்றால் அட்ச்சம் (Latitude) பூஜ்ஜியமான என்று பொருள். அதாவது, நிரட்ச்சலங்கை என்றால் நிலநடுக்கோட்டில் பூஜ்ஜிய அட்ச்சத்தை (Latitude) உடைய இலங்கை என்று பொருள். இதுவே தென்னிலங்கை என வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

தற்போதைய தமிழ்நாட்டிற்குத் தென்கிழக்கே இருந்த நிலப்பரப்பைக் குறித்துப் பல தரவுகள் கிடைக்கின்றன. மேலும் அதைக் குறிப்பிடுகிறவர்கள் அந்த நிலப்பரப்பை இலங்கை (சிலோன்) என்று புரிந்து வைத்திருந்தனர். த சில்ட்ரன் ஆப் மூ (The Children of Mu) என்ற புத்தகத்தில் ஜேம்ஸ் சர்ச்வேர்டு(James Churchward) அவர்கள் இந்த நிலப்பரப்பை வரைபடமாக வரைந்துள்ளார். 1929 ஆம் ஆண்டு வரையப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த வரைபடம் நாம் கூறும் நிரட்சலங்கையை உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தாலமியின் வரைபடத்தில் இலங்கை நிலநடுக்கோட்டில் உள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் தாலமி இலங்கையை இருபது மடங்கு பெரிதாகத் தவறாக வரைந்துவிட்டார் என்ற கூற்றையும், நிலநடுக்கோட்டின் மேல் ஒரு நிலப்பரப்பு இருந்தது என்ற கூற்றையும் இணைத்து நோக்கினால் நிலநடுக்கோட்டின் மேலே நிரட்ச்சலங்கை என அழைக்கப்பட்ட நிலப்பரப்பு இருந்துள்ளது எனப் புரிந்து கொள்ளலாம். தாலமியும் போர்ச்சுகீசியர்களும் தங்கள் வரைபடத்தில் நிலநடுக்கோட்டின் மேல் அமைந்துள்ள நிலப்பரப்பை தெளிவாகவே குறித்து வைத்துள்ளனர். அந்நிலப்பரப்பு இன்றைய இலங்கை அல்ல, ஏனெனில் அது நிலநடுக்கோட்டிற்கு மேலே தொலைவில் உள்ளது.

 இந்த நிரட்ச்சலங்கைக்குக் கீழே லங்கோஜையினி மத்திய ரேகையை தொடர்ந்து மகரத் திருப்பத்தில் ஏதேனும் நிலப்பரப்பை இணைக்கிறதா எனத் தேடினால், அவ்வாறு ஒரு நிலப்பரப்பு தற்போது இல்லை. மேலும், அங்கு கடலின் ஆழம் குறைவாக உள்ள பகுதிகளும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே மகரத் திருப்பத்தில் அத்தகைய நிலப்பரப்பு இல்லை என்பது நமது முடிவாகும். ஆனால், மேற்கண்ட லங்கோஜையினி மத்திய ரேகையைப் பற்றி நமக்கு தரவுகளைக் கொடுத்த திரு. வெள்உவன் ஐயா அவர்கள் மகரத் திருப்பத்தில் ஒரு நிலப்பரப்பு இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாக வாதிடுகிறார். மேலும் அந்த நிலப்பரப்பே குமரிக்கண்டம் என்பதும் அவரின் வாதம்.

 பஞ்சாங்கங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வானியல் குறிப்புகளைக் கொண்ட புத்தகங்கள். இதில் உள்ள குறிப்புகளை இன்றைய கணக்கீடுகளின் மூலம் ஆய்வதன் மூலம் நாம் பல செய்திகளைப் புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் லங்கோஜையினி மத்திய ரேகை தற்போது எங்கே உள்ளது என இன்றைய காலக் கணக்கீட்டின்படி அறிந்து கொள்வோமா? தேசாந்ர சமஸ்காரத்துடன் கூடிய சித்தாந்த திருக்கணிதம் என்னும் சாதக நூலில் லங்கோஜையினி மத்திய ரேகையிலிருந்து பல ஊர்களின் தொலைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் திருச்சியை எடுத்துக்கொள்வோம். திருச்சி லங்கோஜையினி மத்திய ரேகையிலிருந்து கிழக்கே 560 மைல் தொலைவில் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது திருச்சியில் இருந்து 560 மைல்  (901 கிலோ மீட்டர்) மேற்கே இந்த ரேகை உள்ளது. மேலும் இந்த மத்திய ரேகை உஜ்ஜயினியையும் நிரட்ச்சலங்கையையும் இணைப்பதாகும். அதாவது, தீர்க்க ரேகை 75 பாகை வழியே செல்கிறது. இந்த ரேகை திருச்சியில் இருந்து மேற்கே எந்த பாகையில் அமைந்துள்ளது எனக் கணக்கிடுவோம்.

 

நிலநடுக்கோட்டின் நீளம் 

   400,75 கி.மீ   (பூமியின் சுற்றளவு)

360° பாகைக்கு         

   400,75 கி.மீ

1° பாகைக்கு          

  40075÷360 = 111.32 கி.மீ

அதாவது

111.32 கி.மீ           

 1° பாகை

1 கி.மீ         

 1÷111.32 ° பாகை

901 கி.மீ         

  901/111.32 = 8° பாகை (தோராயமாக)

                               

நெடுவரையை நாம் நேர்கோடாகக் கருதிக் கணக்கிட்டு உள்ளோம். ஆனால், அவை வளைகோடுகள் எனவே 8° பாகையில் இருந்து சிறிது வேறுபாடுகள் இருக்கும்.     மேற்கண்ட கணக்கீட்டின்படி மத்திய ரேகை திருச்சிக்கு மேற்கே 8° பாகையில் செல்கிறது என தெரிகிறது. திருச்சியின் தீர்க்கரேகை 78° பாகை. எனவே இந்த மத்திய ரேகை தற்போது 78°-8°=70° பாகையில் செல்லவேண்டும். லங்கோஜ்ஜையினி மத்திய ரேகை உஜ்ஜையினி வழியே செல்வதால் உஜ்ஜையினியின் தீர்க்க ரேகையான 73°பாகை வரவேண்டும். நமக்கு 70° என வருகிறது. தீர்க்க ரேகைகள் வளைகோடுகளாகவும் பழைய குறிப்புகளில் ஊரின் பெயர் மட்டுமே உள்ளது மேலும், அந்தக் காலகட்டத்தில் அவ்வூர் சற்றுத் தள்ளிக் கூட இருந்திருக்கலாம். எனவே இத்தகைய கணக்கீடுகளில் 3° பாகை பெரிய வேறுபாடு அல்ல. முடிவாக இதை இப்படிக் கூறலாம் லங்கோஜையினி மத்திய ரேகை இன்றைய தீர்க்க ரேகை +70° இக்கும் +75° இக்கும் இடையே உள்ளது. இந்த ரேகையின் தென் முனையே நிரட்சலங்கை. ராபர்ட் சீவல் (Robert Sewell) என்பவரால் எழுதப்பட்ட த இந்தியன் காலண்டர் (The Indian Calendar) என்ற புத்தகத்தில் பூஜ்ஜிய அட்சரேகையில் உள்ள நிலப்பகுதியில் இருந்து உஜ்ஜைனியை சேர்க்கும் நெடுவரையைப் பற்றிய குறிப்பு உள்ளது.

(...  Here Lanka is pot es but a place supposed to be on the equator, or in lat. 0° 0 0 on the meridian of Ujjain, or longitude 75 46. It is of great importance to know the exact cast longitude of Ujjain, since upon it depends the verification of apparent phenoment throughout India. Calculation by the different. Siddhidintas can be checked by the best European science if that point can be certainly determined. The great Trigonometical Survey map makes the centre of the city 75° 49' 45" E. long, and 23° 11' 10 N. lat. But this is subject to two corrections; first, a corrention of 1' 0 to reduce the longitude to the origin of the Madras Observatory taken as 80° 17' 21",  and secondly, a farther reduction of 2' 30 to reduce it to the latest valuc, 80° 14' 51", of that Observatory, total 3' 39. This reduces the H. long, of the centre of Ujjnin city to 75° 46' 06. I take it therefore, that amidst conflicting authorities, the best of whom vary from 75° 43' to 75° 51, we may for the present accept 75° 46' as the nearest is found to exist between the new fixture and 80° 14' 51", that difference applied to 75° 40' will give the correct value of the approach to the truth. The securacy of the base, the Observatory of Madras, will before long be again tested, and whatever difference E. long, we require.  The Indian Calendar - Robert Sewell , Sankara Balakrishna Dikshit)

 

அட்ச ரேகை

தீர்க்க ரேகை

இன்றைய உஜ்ஜையினி நகரம்

 23°30' N

 73°14'E

பஞ்சாங்கங்களின்படி மத்திய ரேகை

0° - 23°30'

 70°14'E

நமது கணக்கீட்டின்படி நிரட்ச்சலங்கை

 0°

 73°14'E

 

நிரட்சலங்கையின் இருப்பை மேற்கத்திய ஆய்வாளர்களின் கூற்று உறுதிச் செய்கிறது. 

         அலெக்ஸாண்டர் கோந்தரதோவ் என்ற ருஷ்ய எழுத்தாளர் தன்னுடைய ‘Riddles of three Oceans' என்ற நூலில் இலங்கையைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.

 "நிலப்பரப்புகள் பற்றிய புதியகண்டுபிடிப்புகளைக் குறித்து எழுதும் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் பண்டைக் கிரேக்கர்களும் ரோமர்களும் அறிந்திருந்த 'தாமிரபரணியை’ இன்றைய இலங்கை என்று நம்புகிறார்கள் ஆனால் தாமிரபரணியைப் பற்றி பல விளக்கங்கள் இன்றைய இலங்கையோடு பெரும்பாலும் பொருந்தவில்லை. மேலும் தொன்மையான குறிப்புகள் பல தாமிரபரணியைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. எவரொருவரும் தாமிரபரணியை இதுவரை கடல்வழியாகச் சுற்றி வந்ததாகத் தெரியவில்லையாதலால் அது ஒரு தீவாக இருக்க முடியாது. ஆனாலும் அது வேறொரு உலகத்தின் தொடக்கமாகவும் புவிக்கோளத்தின் எதிர்ப்பக்கம் வாழ்பவர்களுடைய நிலத்தின் வடக்கு விளிம்பாகவும் இருக்கலாம் என்பதாகக் கிப்பர்க்கஸ் (Hipparchus) குறிப்பிடுகிறார்.

 (...Most historians of geographical discoveries believe Ceylon to be the place that was known to the Greeks and Romans as Taprobane. But there are many features in the description of Taprobane that do correspond to what we know about Ceylon. Taprobane is mention in very old sources. Hipparchus noted that no one hade yet circumnavigated Taprobane so that it might very well have not been an island but the beginning of another world the northern edge of the lands of those living opposite....)

 தாமிரபரணியில் நிழல்கள் வடக்கு நோக்கி விழுவதற்கு மாறாகத் தெற்கு நோக்கி விழுகின்றன. கதிரவன் இடப்பக்கம் தோன்றி வலப்பக்கம் மறைகிறது என்று பிளினி கூறுகிறார். இத்தீவு தென்கோளரையில் இருந்ததையே இது புரிய வைக்கிறது. ஆனால் இன்றைய இலங்கையோ வடக்கு அட்சரேகை 5இக்கும் 9இக்கும் இடையே அமைந்திருக்கிறது.

 (...Pliny said that on Taprobane the shadows fell to the south instead of north, and the sun rose in the left and set on the right. This means the island was in the southern Hemisphere. Yet Ceylon is situated roughly between 5 degree and 9 degree north....) “

(The riddles of three Oceans P. 169-170)

 வடஅரைக் கோளத்தில் இருப்பவர்களின் நிழல் சற்று வடக்கே விழும், மேலும் சூரியன் வலப்பக்கம் தோன்றி இடப்பக்கம் மறையும். தென்அரைக் கோளத்தில் இருப்பவர்களின் நிழல் சற்று தெற்கே விழும், மேலும் சூரியன் இடப்பக்கம் தோன்றி வலப்பக்கம் மறையும். தாமிரபரணியில் நிழல்கள் வடக்கு நோக்கி விழுவதற்கு மாறாகத் தெற்கு நோக்கி விழுகின்றன. கதிரவன் இடப்பக்கம் தோன்றி வலப்பக்கம் மறைகிறது என்று பிளினி கூறுவதிலிருந்து அது தெற்கு அரைக்கோளத்திலுள்ள நிலத்தைக் குறிக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். இந்த நிலம் நாம் கூறும் நிரட்சலங்கையை ஒட்டிய தெற்கே இருந்த நிலப்பகுதியாக இருக்கவேண்டும்.

 லங்கா என்ற சொல்லை மேலைநாட்டார் சிலோன் என்றே ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்திருக்கிறார்கள். இதனாலேயே இன்றைய இலங்கை பண்டைய ரோம கிரேக்கக் குறிப்புகளோடு பொருந்தவில்லை. அவர்களின் குறிப்புகளிலிருந்து இலங்கையைத் தாமிரபரணி (Taproboni) என்றே குறிப்பிட்டடுள்ளனர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.  பஞ்சாங்கத்தின் மற்றொரு குறிப்பில் நிரட்சலங்கை என்ற இடம் பூஜ்யம் பாகையில் (நிலநடுக்கோடு) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிரட்சம் என்ற சொல்லிற்குப் பூகோள சம ரேகை என்று தமிழ்மொழி அகராதி என்று பொருள் சொல்கிறது. (நிராசை - ஆசை இல்லாமல், அட்சம் - அட்சரேகை, நிரட்சம் - அட்சம் பூஜ்ஜியமான,  நிரட்சலங்கை - பூஜ்ஜிய அட்சரேகையில் அமைந்த இலங்கை என அழைக்கப்பட்ட நிலப்பரப்பு). அலெக்சாண்டர் கோத்திரத்தோவ்வின் கூற்றையும் இணைத்துப் பார்க்கையில் அவர் லங்கா என குறிப்பிடுவது நிலநடுக்கோட்டின் மேலிருந்த நிரட்சலங்கை என்ற தீவையே என்றும், அது தற்போதைய மாலத்தீவுக்கு சற்று தென்கிழக்கே நிலநடுக்கோட்டின் மீது இருந்தது என்றும் முடிவுக்கு வரமுடியும்.

 இதை உறுதி செய்ய மேலும் சில தரவுகளைப் பார்ப்போம். கில்பர்ட் சிலேட்டர் (Gilbert Slater) என்னும் ஆங்கிலேயஆய்வாளர் தமிழர்களின் வானியல் அறிவை "இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு (The Dravidian element in Indian culture)"என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இதில் தமிழர்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் நேரங்களைக் கணிக்க தங்களுக்கென்று தனியான நெடுவரைகளை அமைத்திருந்தனர் எனக் கூறுகிறார். மேலும் தமிழர்கள் தாங்கள் அமைத்திருந்த நெடுவரையில் வானாராய்ச்சி நிலையத்தையும் கட்டமைத்து வானாய்வு செய்துள்ளனர் என தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். தனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தெரிந்துகொண்டதாகக் கூறுகிறார். 

 அப்புத்தகத்தில் பின்வருமாறு விவரிக்கிறார்.

             வான் மண்டலம் பன்னிரண்டு மனையகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஞாயிறு ஒரு புது மனையகத்தில் புகும் நேரம் காலையாயினும் சரி, நண்பகலாயினும் சரி, இரவாயினும் சரி, அந்தக் கணத்திலேயே மாதம் பிறக்கிறது. நாட்களும் ஞாயிற்றெழுச்சியுடன் தொடங்குகிறது. ஆனால், ஞாயிற்றெழுச்சி என்பதும் இந்தியாவில் ஏதேனும் ஒரு பகுதியில் ஞாயிறு தோன்றும் வேளையன்று; 1 உலக நடு நேர் கோட்டில், 2 நடுநிரைகோடு' அக்கோட்டுடன் சந்திக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்கில் ஞாயிறெழும் வேளையாகவே அது அமைந்துள்ளது. தமிழர் தமக்கென்று வகுத்த இந்த நடுநிரைகோடு தமிழர் பண்டை வானாராய்ச்சி நிலையம் அமைந்திருந்த இடத்துக்கு நேராயிருந்ததாக அறிகிறோம்.

 [¹ Equator.  2 Meridian.]

 உலகின் இத்தனியுயர் சிறப்புக்குரிய ஆண்டுக் கணிப்புமுறை தமிழருக்கு எப்போது ஏற்பட்டது என்று எவரேனும் காலவரையறை கண்டுணர்ந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது தனியுயர் சிறப்புடைய தென்பதும், நடை முறையில் எவ்வளவு வசதிக்கேடாயிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அம்முறை  இடைச் சங்கங்கள், கடைச் சங்கங்கள் இருந்து நடைபெற்ற தமிழகப் பகுதி இன்று கடலுளாழ்ந்துவிட்டது. அதில் ஒரு பண்டைத் தலைநகரமே தமிழரின் இவ்வாராய்ச்சிக்குரிய மூல இடம் என்று கருதலாம். அது பஃறுளி ஆற்றின் கரையிலிருந்த தென்மதுரை என்று கருத இடம் உண்டு. ஆண்டுத் தொகுப்பில் கணிக்கப்பட்ட நிலையில் அது குமரிமுனைக்குத் தெற்காகவும் இலங்கைக்கு மேற்காகவும் கடலில் ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டுவதாயுள்ளது.

 பிடிவாதமாகப் பின்பற்றப்படுகிறது என்பதும், மற்றெல்லா ஆண்டுத்தொகுப்பு முறைகளையும் விட அது துல்லியமான வானிலைக் கணிப்பைக் குறியாகக்கொண்டுள்ளது என்பதும் தனிப்படக் குறிப்பிடத்தக்கன. இந்தியாவிலேயே, திராவிடமல்லாப் பண்புகளின் தலையீடில்லாத பகுதியிலேயே - அதாவது தமிழகத்திலேயே - திராவிட அறிவுநூல்கள் முழுத் தற்சார்புடன் தொடர்ச்சியான வளர்ச்சிபெற்றிருந்தன என்பதை இது காட்டுகிறது.

 இதுவரை வேதங்களிலுள்ள திராவிட நகரங்கள், திராவிடக் கலைகள் ஆகியவை பற்றிய சில குறிப்புகள் தவிர, திராவிட நாகரிகத்தின் தொல்பழமைக்கு முடிவான சான்றாக மதிக்கக்கூடிய எதையும் நாம் குறிப்பிடவில்லை. ஆயினும் தென் இந்தியாவுக்கும் உலகின் மற்ற நாகரிக மையங்களுக்கும் இடையேயுள்ள தொல்பழந் சான்றுகள் ஏராளமான தொடர்புகளைப்பற்றிய ஜி. எலியட் சுமித்,' வில்ப்ரிட் எச். ஷாப்', ஜே. வில்ப்ரிட் ஜாக்ஸன்', டப்ளியூ. ஜே. பெரி' முதலிய பலரின் ஆராய்ச்சி வெளியீடுகளில் காணலாம். இவ்வெல்லா ஆராய்ச்சியாளர் முடிபுகளையும் பொதுமுறை வாசகர்களுக்கு எளிதாகத் திரு. பெரி “ஞாயிற்றின் சேய்கள்” என்ற தம் நூலில் தொகுத்துரைத் துள்ளார்.

[1. G. Elliot Smith, 2. Wilfrid H. Schoff, 3. J. Wilfrid Jackson,.4. W, J. Perry, 5. Logan's Classic, District Manual of Malabar.] ] “

 தமிழ்நாட்டுக்குக் கீழே நடுவரையில் தமிழர்கள் சூரியனை ஆய்வுசெய்யும் வான்ஆய்வு மையத்தை கட்டியிருந்தனர் என கில்பர்ட் சிலேட்டர் கூறுகிறார்.

நிலநடுக்கோட்டின் மீதும் நெடுவரையின் மீதும் அமைந்த பண்டைய தமிழர்களின் வான் ஆய்வு மையங்கள் நிரட்சலங்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை தற்போது எங்கேயுள்ளன என நாம் பார்க்கலாமா?

 பண்டைய தமிழர்கள் கட்டமைத்த சூரிய ஆய்வு நிலையங்கள் இன்றைய மாலத்தீவிற்கு அருகே தென்கிழக்கில் தற்போது கடலில் மூழ்கியுள்ள தீவுவுகளில் இருக்கவேண்டும்  என்பதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. ஆய்வு மையங்கள் என்றால் சூரியனின் நகர்வுகளை ஆண்டு முழுவதும் பார்ப்பதற்கு ஏதுவான கட்டட அமைப்பும், செங்குத்தாக நட்டுவைக்கப்பட்ட குச்சியின் நிழலை துல்லியமாக அளக்க ஏதுவான அமைப்புகளும் என நாம் புரிந்துகொள்கிறோம். மேலும் இந்தக் கட்டட அமைப்பு சூரியனின் வட, தென் செலவுகளை துள்ளியமாகக் கணிக்க கிழக்குத் திசையை நோக்கி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

 இன்றைய மாலத்தீவு குமரிக் கடலில் உள்ள பல தீவுகளைக் கொண்ட ஒரு தீவுநாடாகும். மாலேயை தலைநகராகக் கொண்ட இந்நாடு தமிழ்நாட்டின் தென்மேற்கே நிலநடுக்கோட்டிற்கு அருகே அமைந்துள்ளது.

  "கடலுக்கு கீழ் ஒரு நீண்ட மலைத்தொடராகக் காணப்படும் இப்பகுதி ஒரு காலத்தில் நிலப் பகுதியாக இருந்தது என்பதையும், அங்கு மக்கள் வசித்திருக்கிறார்கள் என்பதையும், அங்கு நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அங்கு வழங்கப்படும் மொழி, கலாச்சார, வாய்மொழி, ஒப்பீட்டு வரலாறுகள் சங்க காலத்திலேயே கிமு 300 இக்கு முன்பே மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள் எனவும் அவர்கள் தமிழர்கள் எனவும் சொல்கின்றனர் (மாலன், புதிய தலைமுறை, பிப்ரவரி 2012 மாதஇதழ் பக்கம் 24)."

 மாலத்தீவுகளில் தொல்பொருள் ஆய்வு ஹெச். சி. பீ. பெல் (Harry Charles Purvis Bell) என்பவர் செய்த ஆய்விலிருந்து தொடங்குகிறது. அவரது ஆய்வில் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இலங்கையில் இருந்து பௌத்தம் கொண்டுவரப்பட்டது என்றும், பௌத்தம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இஸ்லாம் வரும் வரை தொடர்ந்தது என்றும் தெரியவந்தது.

 1980 இல் மாலத்தீவு அரசு தொல்பொருள் ஆய்வு செய்ய ஏயெரத்தாள் (Thor Heyerdahl) என்ற நார்வே நாட்டு ஆய்வாளருக்கு அனுமதி அளித்தது. மாலத்தீவில் இஸ்லாம், பௌத்தத்திற்கு முந்தைய கலாச்சாரம் ஒன்று அங்கிருந்ததை ஏயெரத்தாள்  கண்டுபிடித்தார். அவர் ஆய்வின்படி கி.மு. இரண்டாயிரம் காலப்பகுதியிலேயே மாலத்தீவு கடல்வழி வணிகத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளது. அவரின் கருத்துப்படி “சூரிய வணக்கம் செய்த கடலோடிகளே” மாலத்தீவின் பூர்வ குடிகளாவர். இப்போதும் இங்குள்ள பள்ளிவாசல்கள் கிழக்கு நோக்கியே உள்ளன. தீவாக இருப்பதால் கட்டிடப் பொருள்கள் தட்டுப்பாடுக் காரணமாக புதியக் கலாச்சாரங்கள் தோன்றும்போது பழையக் கலாச்சாரத்தின் கட்டிடங்களின் அத்திவாரத்தின் மீது புதியக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இதனால் பள்ளிவாசல்கள் சூரிய வணக்கக் கோயில்கள் மீது எழுப்பப்பட்டுள்ளன என ஏயெரத்தாள்பதிவு செய்தார். 

 ஏயெரத்தாள் சூரிய வணக்கக் கோயில்கள் என்று கருதியவை பண்டைய தமிழர்களின் சூரிய ஆய்வுக் கூடங்கள் ஆகும். தீவுகளின் நடுவே கிழக்கே சூரியனின் எழுச்சியைப் பார்க்க ஏற்றவாறு அமைக்கப்பட்ட இந்த ஆய்வகங்களில் இருந்து பண்டையத் தமிழர்கள் சூரியனின் நகர்வுகளை உற்று நோக்கி, சூரியனின் வடசெலவு, தென்செலவு காலங்களை அளந்து, சூரிய நாட்காட்டியை உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய மாலத்தீவிற்குச் சற்றுத் தென்கிழக்கே கடல் மட்டம் குறைவாக உள்ள நிலநடுக்கோட்டின் மீது 'நிரட்சலங்கை' இருந்திருக்கிறது. தற்போதைய மாலத்தீவின் தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டுமானங்களைப் போல் இங்கும் சூரியஆய்வு கூடத்திற்கான கட்டுமானங்கள் கிடைக்கக்கூடும். இனிவரும் காலங்களில் அங்கு கடலாய்வு செய்தால் அத்தகையக் கட்டுமானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்படலாம். ஏயெரத்தாளின் இந்த ஆய்வு முடிவை மற்ற ஆய்வாளர்கள்  ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், சூரிய வணக்கம் செலுத்திய கடலோடிகள் என்பது வரை சரியாகப் பயணித்தவர் பின்னர் தடம் மாறிவிட்டார். கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டக் கட்டிடங்களைப் பார்த்தவர் அவை சூரியனை ஆய்வுச் செய்ய ஏற்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் என்பதை புரிந்து கொள்ளாமல் சூரியனை வணங்கிய மக்கள் எழுப்பியக் கட்டடங்கள் எனப் புரிந்து கொண்டார். அதனால் சூரிய வணக்கத்தைக் கொண்டிருந்த அஷ்டக்குகள், மாயன்கள் போன்றவர்களுடன் தொடர்புபடுத்தி தனது ஆய்வை வேறு திசையில் கொண்டு சென்றுவிட்டார். இதனால் அவரின் இந்த மிகப்பெரியக் கண்டுபிடிப்பு ஆய்வாளர்களின் கவனத்தைப் பெறாமல் போய்விட்டது. இப்போது நமக்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது. எவ்வளவோ நிலப்பகுதிகள் இருந்தும் கடலின் நடுவே உள்ள சிறு தீவுகளை ஏன் பழந்தமிழர்கள் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

 வடசெலவு, தென்செலவு ஆகிய சூரியனின் கிடைமட்ட நகர்வுகளை நுட்பமாக அளக்க நிலநடுக்கோட்டில் இருந்து ஆய்வுச் செய்வது இன்றியமையாததாகும். அதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போமா? கிழக்கு, மேற்காக 'அ', 'ஆ',  'இ' என மூன்று குத்துக் கோடுகள் போடப்பட்டிருப்பதாகக் கற்பனை செய்துக் கொள்ளுங்கள். நாம் கிழக்கு நோக்கி நிற்பதாகக் கொள்வோம். சரியான கிழக்கு நோக்கி இருக்கும்போது இடப்புறம் உள்ள 'அ'  கோடு வடக்கேயும் வலப்புறம் உள்ள 'இ' கோடு தெற்கேயும் இருக்கும் அல்லவா? இப்போது ஒருவர் கோடு 'அ' விலிருந்து கோடு 'இ' யிற்கு கிடைமட்டத் திசையில் நகர்ந்துப் போவதாகக் கொள்வோம். கோடு 'அ' விலிருந்து பார்க்கும்போது அவர் வடக்கிலிருந்து தெற்கே "போனது" போலவும், கோடு 'இ' யிலிருந்து பார்க்கும்போது வடக்கில் இருந்து தெற்கே "வந்தது" போலவும் தெரியும். அதுவே கோடு 'ஆ' விலிருந்து பார்க்கும்போது அவர் வடக்கிலிருந்து "வந்து" பின்னர் தெற்கு நோக்கி "போனது" போலத் தெரியும். நகர்பவரைச் சூரியனாகக் கருதினால் நடுவில் உள்ள கோடு 'ஆ' விலிருந்து பார்க்கும் ஒருவருக்குச் சூரியன் வடக்கேயும், தெற்கேயும் பயணிப்பது தெரியும். பூமியில் கடகரேகைக்கும், மகரரேகைக்கும் இடையே நிலநடுக்கோடு உள்ளது. சூரியனின் நகர்வை நுட்பமாகக் கணிக்க நிலநடுக்கோட்டின் மீது இருப்பது இன்றியமையாதது. எனவேதான் நாட்காட்டியையும், நெடுவரைகளையும் உருவாக்கிய பண்டைய தமிழர்கள் சூரியனின் நகர்வை நுட்பமாக அளக்க நிலநடுக்கோட்டுப் பகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இன்றைய தமிழ்நாட்டுக்கு மிக அருகில் இருக்கும் நிலநடுக்கோட்டு நிலப்பகுதி 'நிரட்சலங்கையே' எனவே தங்களின் சூரிய ஆய்விற்கும், நெடுவரைக்கும் நிரட்சலங்கையை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.



மேகலா நகரங்கள்

உலகமெங்குமுள்ள நிலப்பரப்புகளின் நேரங்களைக் கணிக்கவென்றே ஒரு நடுவரையை முதன்முதலில் அமைத்த தமிழர்கள் இதற்கென நான்கு நகரங்களை நிலநடுக்கோட்டின் மீது அமைத்தனர். அந்நகரங்களே மேகலா நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. அவை லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்திராசுவம் ஆகிய நான்குமாகும். மேகலா நகரங்கள் குறித்து திரு. வெள்உவன் அவர்கள் தென்னிலங்கை, மறைந்துபோன மாட்டுத் தாவணிகள் என்னும் நூலில் விரிவாகப் பேசுகிறார்.

 லங்காபுரி (நிரட்சலங்கை), ரோமகபுரி, சித்தபுரி,  பத்திராசுவம் ஒன்றுக்கொன்று 90° பாகையில் மேகலா ரேகையில் (நிலநடுக்கோட்டில்) அமைந்த இடங்களாகும். மயனுடைய சூரிய சித்தாந்தம் என்ற நூலில் இந்நான்கு நகரங்களைப் பற்றிய மிக விரிவான குறிப்புகள் காணப்படுகின்றன என டாக்டர்.ஆர்.ஆர். கார்னிக் தன்னுடைய "Mayan and Surya Siddhandha, Mayans on the high seas" என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

 "புவிக்கோளத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் ஒரே விதத்தில் கதிரவன் ஒளிர்வதில்லை. எனவேதான் இடத்திற்கு இடம் காலவேறுபாடுகள் ஏற்படுகின்றன. இதை விளக்க, மயன் 90° பாகை இடைவெளிகளில் நான்கு இடங்களைத் தேர்ந்தெடுத்தான். இந்நான்கு இடங்களும் துறைமுகங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவை கிழக்கிலிருந்து தொடங்கி பத்திராசுவ கண்டத்தில் ஏமகூடம், பரத கண்டத்தில் லங்காபுரி, கேதுமால் கண்டத்தில் ரோமகபுரி, குருகண்டத்தில் சித்தபுரி என நான்காகும்".

 (To demonstrate further the sun does not shine on all the earth at the same time and that there is a delay in the local time all the world. Mayasura selects four places are separated by 90 degrees. It is to be noted that all these four places are seaports. The places starting from the east the Yamakodi in land called Bhadrasva, then Lanka land called Bharata then Romaka in land called ketumala, and then Siddhapuri in land called Kuru) (சூரிய சித்தாந்தம் xxii-38-39-40)

 'பத்ராசுவக் கண்டத்தில் கதிரவன் உச்சியில் இருக்கும் போது, பரத கண்டத்தில் எழுகிறது. கேதுமாலக் கண்டத்தில் நள்ளிரவும் குருகண்டத்தில் கதிரவன் மறைவும் நிகழ்கிறது. நண்பகல், கதிரவன் எழுச்சி, நள்ளிரவு, கதிரவன் மறைவு என்ற இந்தச் சுழற்சி பரதகண்டத்தை நடுவாகக் கொண்டு உலகம் முழுவதும் கணக்கிடப்படுகிறது என்று சூரியசித்தாந்தம் விளக்குகிறது’.

 (inxxiiiin xxii-70-71 it states when sun is over head in Bhadrasva, it is just rising in Bharata, it is midnight in Ketumala and set in kuru. The cycle of Miday, sun rise, mid night, and sun set rotates from Bharata and rotates (round the world)

 புரி என்ற சொல் பட்டினம் (கடற்கரை நகரம்) என்று பொருள் கொள்ளும். மேகலா நகரங்கள் எனக் குறிப்பிட்டப்படுகின்ற நான்கு நகரங்களும் துறைமுகங்களாக இருந்தன என்பதைச் சூரிய சித்தாந்தக் குறிப்புகளிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது. இன்றைய கிரீன்விச் மைவரைக் கணக்குப்படி கிழக்கு 75-76 பாகைகளுக்கு இடையில் இந்து மாக்கடலில் இலங்காபுரியும், மேற்கு 14-15 பாகைக்கு இடையில் தென் அட்லாண்டிக் கடலில் உரோமகப்புரியும் மேற்கு 104-105 பாகைக்கு இடையில் தென்பசிபிக் கடலில் சித்தபுரியும், கிழக்கு 165-166 பாகைக்கு இடையில் கிரிபதி தீவுக் கூட்டங்களுக்கு அருகில் பத்திராசுவமும் இருந்திருக்க வேண்டும் என்பதைச் ‘சூரிய சித்தாந்தம்’ உணர்த்துகிறது. இந்நான்கு மேகலா நகரங்களும் கடலுள் மூழ்கி விட்டன.

 லங்கோச்சயினி மத்திய ரேகை என்று சொல்லிலிருக்கிற உச்சயினி நகரம் கடகத் திருப்பத்தில் இருக்கிறது. மேலும் இந்த உச்சயினி நகரம் இந்திய வான இயலில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது என்பது தெரிந்தது. அந்தச் சொல்லில் வரும் இன்னொரு நகரமான இலங்கா மகரத் திருப்பத்தில் இருந்திருக்கிறது என்பதை அந்தச் சொல்லமைப்பின் அடிப்படையிலேயே நாம் உய்த்துணர முடியும். மகரத்திருப்பத்தின் இலங்கையையும் கடகத்திருப்பத்தின் உச்சயினியையும் இணக்கிற மைவரையையே ‘லங்கோச்சயினி மத்திய ரேகை' என்று குமரிக்கண்டத் தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர். 'ஞாலத்தின் நடுவரையுடன் ஒரு குறிப்பிட்ட மைவரை சேர்கின்ற இடத்தை வைத்தே ஞாயிறு எழும் வேளையைத் தமிழர்கள் கணக்கிட்டு வந்தனர்' என்று "இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு" என்ற தன் நூலில் கில்பர்ட் சிலேட்டர் குறிப்பிட்டுள்ளது கவனத்திற்குரியது. லங்கோச்சயினி மைவரை நிலநடுக்கோட்டை வெட்டுமிடத்தில் அமைந்திருந்த நகரமே ஐந்திரக் குறிப்புகளில் 'நிரட்சலங்கை' என்று குறிப்பிடப்படுவதும் மேகலா நகரங்களில் ஒன்றுமாகிய இலங்காபுரியே.

 உலகமெங்குமுள்ள நிலப்பரப்புகளின் நேரங்களைக் கணிக்கவென்றே ஒரு மைவரையை முதன்முதலில் அமைத்தவர்கள் குமரிக் கண்டத் தமிழர்களே. அவர்கள் அமைத்த அந்த மைவரையின் அடிப்படையில் தான் ஆங்கிலேயர்கள் தங்கள் தலைநகர் இலண்டன் அருகில் உள்ள கிரீன்விச் வழியாகச் செல்லும் நிரைவரையை, மைவரையாக்கி அதனடிப்படையில் உலகநாடுகளின் நேரங்களை வரையறுத்துள்ளனர். உலகத்திணைப் படத்தில் குமரிமுனைக்குத் தெற்கே 75டிகிரி கிரீன்விச் கிழக்கு நிரைவரையை ஒட்டித் தென்முனை வரை நீண்டு பரந்த கடல் பகுதியின் ஆழம் 600 அடிக்குட்பட்டதாகவே குறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இப்பகுதிகள் குமரிக்கண்டம் சிறுகச் சிறுகக் கடலில் மூழ்கியபோது இறுதியில் மூழ்கியவை என்பது புலனாகிறது.

 மகரத்திருப்ப இலங்காவையும் அதைச் சார்ந்த பெரும் நிலப்பரப்பையும் தான் உரோம, கிரேக்கர்கள் பழங்குறிப்புகளில் தாமிரபரணி என்று குறிப்பிட்டு வந்துள்ளனர் என்பதை நாம் தெளிவாய்ப் புரிந்து கொள்ளலாம். மேலும் இதைத்தான் தமிழிலக்கியங்களும் தென்னிலங்கை எனச் சொல்லிச் சிறப்பிக்கின்றன. எனவே இந்தப் பகுதியே இராவணன் ஆண்ட ‘தென்னிலங்கை'யாக இருந்தல் வேண்டும் என்பது தெளிவு. தமிழ் மொழி அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையைத் தென்னிலங்கையாகவும் இலங்காபுரியை நிரட்சலங்கையுமாகவும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

 தென்னிலங்கை பற்றிய தேடலுக்கு அடிப்படையாய் அமைந்தவை ஐந்திரத்தில் வரும் ‘லங்கோச்சயினி' மற்றும் 'நிரட்சலங்கை' என்கிற சொற்கள் தாம். இவை குமரிக்கண்டத் தமிழர்களின் வான இயல் குறித்த மிகச்சிறப்பான பதிவுகள் என்பதில் ஐயமில்லை. இவை மட்டுமல்ல ஐந்திரங்களின் முதன்மைப் பகுதியில் இருப்பவை முற்றிலும் வான இயல் செய்திகளே. அச்செய்திகளுக்கும் கணியத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பண்டைத்தமிழர்களின் வான இயல் நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்கு ஐந்திரங்களிருந்து வான இயலுக்குப் பொருந்தாத குப்பைக் கூளங்களை அகற்றிவிட்டு அவற்றை ஆய்வு செய்தல் இன்றியமையாதது. தமிழர் வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வுகளில் நாட்டமுள்ளோர் இதில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும்.

 (தென்னிலங்கை, மறைந்துபோன மாட்டுத் தாவணிகள் - வெள் உவன்)



பாறை ஓவியங்களில் வானியல் பதிவுகள்

பழங்காலத்தில் மனிதர்கள் தாங்கள் வாழ்ந்த குகைகளில் வரைந்து வைத்துள்ள ஓவியங்களைப் பாறை ஓவியங்கள் அல்லது குகை ஓவியங்கள் என்கிறோம். வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய இப்பதிவுகள் மனிதப் பண்பாட்டு வளர்ச்சியைத் தெரிந்துக்கொள்ள உதவுவனவாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் பாறை ஓவியங்கள் பற்றி உலகிற்குத் தெரியவந்தது. உலகின் பலபகுதிகளில் கிடைக்கும் இவ்வோவியங்களில் பிரான்ஸ் நாட்டில் லாஸ்காஸ், சாவெட் குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்கள் புகழ்பெற்றவை. அதுபோல இந்தோனேஷியா தீவில் கண்டுபிடிக்கப்பட்ட கை ஓவியங்கள் மிகவும் பழமையானவைகளாகக் கருதப்படுகின்றன. இந்தியாவில் மத்தியப்பிரதேசத்திலுள்ள பிம்பெட்காவில் புகழ்பெற்ற பாறை ஓவியங்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய ஓவியங்கள் கிடைப்பது சிறப்பானதாகும். தமிழ்நாட்டில் கிடைக்கும் ஓவியங்கள் பெரும்பாலும் சிவப்பு, வெள்ளை நிற ஓவியங்களாக உள்ளன. இவ்வோவியங்களில் மனித, விலங்கின உருவங்கள், வேட்டைக் காட்சிகள், சண்டைக் காட்சிகள், அன்றாடச் செயல்பாடுகள் போன்ற காட்சிகளுடன் வானியல் குறியீடுகளும் ஓவியங்களாகக் காணப்படுகின்றன.

 பிரான்ஸ் நாட்டின் லாஸ்காஸ் குகைகளில் ஓரையான் உடுக்கணம், காளை உடுக்கணத்துடன் கார்த்திகை விண்மீன் கூட்டமும் வரையப்பட்டுள்ளன. இது வரையப்பட்ட காலம் 15,000 ஆண்டுகள் என்கிறார்கள். அதாவது 15,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே வானில் உள்ள விண்மீன்களைக் கண்டு அவற்றைத் தொகுதிகளாகப் பிரித்துப் பதிவுச் செய்யும் வழக்கம் இருந்துள்ளது. இதுபோல ஓரையான் உட்பட பல உடுக்கணங்களைத் தமிழ்நாட்டிலும் தொல்பழங்கால மக்கள் குகைகளில் வரைந்து வைத்துள்ளனர். பாறை ஓவியங்களில் இரண்டுவகை உண்டு. ஒன்று வண்ணக் கலவைக் கொண்டு பாறைகளில் வரைவது (Pictographs) மற்றொன்றுப் பாறைகளைக் கீறி உருவங்களை உண்டாக்கும் பாறைக்கீறல் ஓவியங்கள் (Petroglyphs).

 நீலகிரி மாவட்டம் கொணவக்கரையில் ‘ஏர்பெட்' என்ற இடத்திலுள்ள ஒரு குகையில் பாறைக்கீறல்களாக வானியல் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றில் மனிதன், தேள், பாம்பு ஆகிய உருவங்கள் முதன்மையாகக் காட்டப்பட்டுள்ளன. இவற்றில் மனித உருவம் ஓரையான் உடுக்கணத்தையும், தேள் உருவம் விருச்சிக உடுக்கணத்தையும், பாம்பு உருவம் நமது பால்வெளி மண்டலத்தையும் குறிப்பதாக இருக்கலாம். மேலும், இங்குச் சூரியன், நிலவு போன்ற உருவங்களும் காணப்படுகின்றன. இதுபோலப் பல இடங்களில் வானியல் தொடர்பான ஓவியங்கள் கிடைத்தாலும், அவற்றுள் 'புலிக்கரடு' ஓவியங்கள் தனித்துவமானவைகளாகத் திகழ்கின்றன. மதுரை மாவட்டம், பேரையூர் அருகிலுள்ள புலிக்கரடு என்ற குகையில் வெள்ளை நிறத்தில் நிறைய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்கள் பாறை ஓவியங்கள் ஆய்வாளரான திரு. க.த.காந்திராஜன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. இக்குகையின் தலைக்குமேலே உள்ள பாறையில் சூரியன், நிலவு உருவங்கள் ஒளிரேகைகளுடன் வரையப்பட்டுள்ளன. இரண்டுக்கும் இடையில் வளைகோடொன்று போடப்பட்டு அதில் குறுக்காகச் சிறு கோடுகள் போடப்பட்டுள்ளன. இந்த சிறு குத்துக் கோடுகள் எண்ணிக்கைக்காகப் போடப்பட்டுள்ளன. மேலும், இதில் பதினைந்து கோடுகள் உள்ளன. இந்த எண்ணிக்கை நிலவின் இரு நிலைகளான அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடைப்பட்ட நாட்களின் எண்ணிக்கையாகும். இரண்டு ஒளிரேகைகளுடன் கூடிய வட்டங்களில் ஒன்று சூரியன் மற்றது நிலவு. எது சூரியன்? எது நிலவு? என்ற கேள்விக்கு சாதக நூலொன்றில் உள்ள பாடலிலிருந்து விடை கிடைக்கிறது.

 

"ஐந்திருபத் தொன்றேழ் அதன்பின்னோற்

       கொன்பது பத்(து)

உந்திய லீரெட்டு நான் கொரு நான்

       (கு)-உந்தும் 

கதிராதி பாம்பீறாய்க் கட்டுரைத்த கோள்கட்(கு) 

எதிரா வருங்கதிராம் என்."

 

(பக்கம் 4, காலச்சக்கரம், தஞ்சாவூர் சரசுவதி மகால் வெளியீட்டு எண்:125, தில்லைநாயகப் புலவர் இயற்றியது, பதிப்பாசிரியர் வித்துவான் திரு.அடிகளாசிரியர், முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர்).

 பொருள்: சூரியனுக்கு ஐந்து, சந்திரனுக்கு இருபத்தொன்று, செவ்வாய்க்கு ஏழு, புதனுக்கு ஒன்பது, வியாழனுக்குப்பத்து, வெள்ளிக்கு பதினாறு, சனிக்கு நான்கு, இராகுவிற்கு நான்கு கதிராகும். 



ஓவியத்தின் வலப்புறத்திலுள்ள வட்டத்தில் ஐந்து ரேகைகளும், இடப்புறத்திலுள்ள வட்டத்தில் இருபத்தொன்று ரேகைகளும் காட்டப்பட்டுள்ளன. மேற்கண்ட பாடலின் பொருள்படி வலப்புறத்திலுள்ளது சூரியன், இடப்புறத்திலுள்ளது நிலவும் ஆகும். நிலவு தேய்ந்து வளர்வது சூரியனின் ஒளியினால், மேலும் அது தேய்ந்து மறையும் காலம் பதினைந்து என்பது இவ்வோவியத்தின் பொருளாகும். இவை வரையப்பட்ட காலம் என்னவாக இருக்கும்? லாஸ்காஸ் ஓவியங்களில் காணப்படும் வானியல் குறியீடுகள் 15,000 ஆண்டுகள் பழமையானவையாதலால் அதுபோல வரையப்பட்ட இந்த ஓவியமும் மிகப் பழமையானதாகத்தான் இருக்கும். குறைந்தது 5000 முதல் 10,000 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கும் என்பது நமது மதிப்பீடு. அறிவியல் ஆய்வின் மூலம் காலத்தைக் கணிக்கும்போது அதன் பழமை நமக்குத் தெரியவரும். மேற்கூறிய பாடல் சினேந்திரமாலை என்னும் நூலில் உள்ளதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். எனவே இப்பாடல் வடமொழியிலிருந்து வந்துள்ளது எனப் புரிந்துகொள்ளலாம். ஆனால், வடமொழிக்கு தமிழிலிருந்து போயுள்ளது என்பதை இந்த ஓவியம் மூலம் உறுதியாகக் கூறலாம். இக்குகையில் வாழ்ந்த கணியர்கள் வரைந்து வைத்துள்ள ஓவியங்கள் இவை. இவ்வோவியங்களின் எழுத்து வடிவங்களான பாடல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டன. ஓலைச்சுவடிகளை இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்குமேல் பாதுகாக்க முடியாது. மூல ஓலைச்சுவடிகள் அழிந்து விட்டாலும் அவற்றின் ஓவிய வடிவம் குகையொன்றில் கிடைப்பது சிறப்பானதாகும்.

 முதல் மாதம் தையா...? சித்திரையா...?

தமிழர் ஆண்டுக் கணக்கில் முதல் மாதமாக வருவது தையா? சித்திரையா? என்பதில் நீண்டகாலமாகவே விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தையே முதல் மாதம் என்பதற்கு அதன் சார்பானவர்கள் பல தரவுகளையும், சித்திரையே முதல் மாதம் என்பதற்கு அதன் சார்பானவர்கள் பல தரவுகளையும் கொடுத்து வருகின்றனர்.

 தை மாதம்தான் ஆண்டின் முதல்மாதம் என்பதற்கு அதைச் சார்ந்தவர்கள் பின்வரும் காரணங்களைக் கூறுகிறார்கள்:தமிழர்கள் சூரியன் தனது வடசெலவைத் துவங்கும் நாளையே முதல் நாளாகக் கொண்டிருந்தனர். விவசாய அறுவடை திருநாளில் சூரியனையும் மாடுகளையும் வணங்கி அந்நாளைக் கொண்டாடினர். பஞ்சாங்கத்தில் தை மாதத்தை அடிப்படையாகக் கொண்ட மகர சங்கராந்தி ஆண்டுபலன் என்னும் பெயரில் ஆண்டு பலன்கள் கணித்து வெளியிடுவது தற்போதும் நடைமுறையில் உள்ளது. பொங்கல் பண்டிகை தமிழருக்கு முதன்மையான திருநாள், ஆகவே அதுவே புத்தாண்டாக இருக்க முடியும்.

 'தை பிறந்தால் வழி பிறக்கும்'

எனும் நம்பிக்கையூட்டும் பழமொழியையும் சான்றாகக் கொள்ளலாம். ஒரு ஆண்டு இளவேனில் (சித்திரை-வைகாசி), முதுவேனில் (ஆனி-ஆடி), கார் (ஆவணி-புரட்டாசி), கூதிர் (ஐப்பசி-கார்த்திகை), முன்பனி (மார்கழி-தை), பின்பனி (மாசி-பங்குனி) என ஆறு பருவங்களாகக் பிரிக்கப்பட்டு, இளவேனிற்காலம் முதன்மையாகக் கொள்ளப்பட்டது. தைமாதத்தை இலக்கியங்களும் பெருமை பேசுகின்றன.

 “தைஇத் திங்கள் தண்கயம் போல்" எனப் புறநானூறும்

"தையில் நீராடி தவம் தலைப் படுவாயோ" எனக் கலித்தொகையும்

"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" எனக் குறுந்தொகையும்

தையை சிறப்பித்துக் கூறுகின்றன. முதற்காலத்தில் ஆண்டுப்பிறப்பு சித்திரை முதல்நாளாக இருந்ததில்லை என டாக்டர் மு.வ. கூறுகிறார். இராமநாதபுரம் கீழக்கரையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டின் மூலம் தை மாதம் முதல் மாதமாக இருந்தது தெரிகிறது. சித்திரையை முதல் மாதமாகக் கொண்ட அறுபதாண்டு சுழற்சிமுறை தமிழர்களுக்கானதல்ல வடமொழியினரின் புகுத்தல், அறுபது ஆண்டுகளின் பெயர் அனைத்தும் வடமொழிப் பெயர்கள். வடநாட்டினர் தமிழர்களின் மீது ஆதிக்கம் செலுத்தவே சித்திரையை முதன்மையாகக் கொண்ட ஆண்டுமுறையைத் தமிழர்களின் மீது திணிக்கின்றனர்.

 "நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டமும், கற்பித்ததே

அறிவுக் கொவ்வா அறுபது ஆண்டுகள். தரணி ஆண்ட, தமிழனுக்கு 

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”

என்று பாவேந்தர் பாரதிதாசன் சாடுவதாகக் கூறுவர். தமிழர் வாழ்வில் உழவுக்கே முதலிடம். அதனால்தான் வள்ளுவர் 'ஏர்ப்பின்னது உலகம்' என்றார். தை பிறந்தால் வழிபிறக்கும் எனக் காத்திருக்கும் உழவர்களுக்கு தை மாதம் தானே முதல் மாதமாக இருக்க முடியும். அருட்பிரகாச வள்ளலாரும் தமிழர்க்கு ஏற்றமாதம் தை என்பதோடு, தவ ஆற்றலுக்கு ஏற்றது என்பதால், தை மாதத்தில் தைப்பூசத்தில் அருட்சோதி காண்பித்தார். தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் என திருஞான சம்பந்தரும் தை மாதத்தின் சிறப்பைக் கூறுகிறார்.

 பூமி சூரியனை (நீள்)வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஒருமுறை சுற்ற ஆகும் காலம் ஓர் ஆண்டு. பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் பூமியைச் சுற்றி வருவதைப்போல் தெரிகிறது. அவ்வாறே எடுத்துக்கொள்வோம். சூரியனின் வட்டப்பாதை எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது எனக்கூற முடியாது. ஏனெனில் ஒரு வட்டத்திற்கு ஆரம்பமும் இறுதியும் இல்லை. இவ்வட்டத்தில் நாமாக ஒரு புள்ளியைக் குறித்து இது முதற்புள்ளியாகக் கணக்கிட முடியுமல்லவா? தமிழர்கள் அவ்வாறே செய்தனர். சூரியப்பாதையும் வான் நடுவரையும் வெட்டிக்கொள்ளும் இருபுள்ளிகளில் ஒரு புள்ளியை எடுத்துக்கொண்டனர். அந்தப் புள்ளியில் சூரியன் இருக்கும்போது பகலும் இரவும் சமமாக இருக்கும். அதாவது அப்புள்ளி சமநோக்குப்புள்ளி (Vernal Equinox) எனப்படுகிறது.

 அடுத்து பன்னிரண்டு இராசிகளில் மேழத்தை முதல் இராசியாகக் கொண்டனர். மேழ இராசி தொடங்கும் முதற்புள்ளி (First Point of Aries) யில் சமநோக்குபுள்ளி சந்திக்கும் நாள் அவ்வாண்டின் முதல் நாள். அதாவது மேழ இராசியில் சூரியன் நுழையும் முதல் நாள் அவ்வாண்டின் முதல் நாளாகக் கணக்கிடப்படுகிறது. இக்கணக்கீட்டின்படி பார்த்தால் சித்திரை மாதமே ஆண்டின் முதல் மாதமாக அமைகிறது. ஒர் ஆண்டில் சூரியனின் இயக்கத்தை வேறொரு வகையிலும் புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் திசையை ஆண்டு முழுவதும் நோக்கினால் இப்புள்ளிகள் இட வலமாக நகர்வதைப் பார்க்கலாம். சூரியன் வலக் கோடியிலிருந்து இடக் கோடியை நோக்கிப் பயணிப்பதுபோல தோன்றும். இது வடசெலவு (உத்திராயணம்) எனப்படுகிறது. நமக்கு வலக் கோடியிலிருந்து இடக் கோடிக்குப் பயணம் தை முதல் நாளன்று தொடங்குகிறது. சூரியனின் ஓர் ஆண்டின் இயக்கத்தை இடது வலதாகப் பார்த்தால் ஆண்டின் முதல் மாதம் தை மாதம் எனவருகிறது. தை மாதம் தான் ஆண்டின் முதல் மாதம் என்பதற்கும் பல தரவுகள் கொடுக்கப்படுகின்றன.

 சித்திரையே முதல் மாதம் என வாதிடுபவர்கள் பின்வரும் கருத்துகளை முன்வைக்கின்றனர்:

"திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக

விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து 

முரண்மிகு சிறப்பிற் செல்வனொடுநிலை இய 

உரோகிணி நினைவனள் நோக்கி" (நெடுநல் வாடை 160-163)

என்று நக்கீரனார் பாடியிருக்கிறார். சூரியன் வட்டப்பாதையில் சுற்றுகிறது. அதில் ஆரம்பப்புள்ளி, இறுதிப்புள்ளி என்று ஏதுமில்லை. இருந்தும் இது ஆகாய நடுவரையை வெட்டும் புள்ளியைக் கொண்டு இப்புள்ளி மேழ உடுக்கணத்தில் நுழையும் நாளே ஆண்டின் முதல் நாள், அந்த மாதம் சித்திரையாகும். பாடலில் நக்கீரனார் ஆடுதலை எனக் குறிப்பிடுவது மேழ உடுக்கணத்தைத்தான். பழமையான கோயில்களில் இருபத்து ஏழு விண்மீன்கள் சிற்ப வடிவில் காட்டப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக ஆவுடையார் கோயில் சிற்பத்தில் இந்த இருபத்து ஏழு விண்மீன்களைப் பார்க்கலாம். இதில் முதலாவதாக அசுவதி விண்மீன் உள்ளது. இந்த அசுவதிக்குச் சூரியன் வரும் நாளே சித்திரை முதல் நாள். அசுவதி விண்மீன் மேழத்தில் இயங்குவது. எனவே சித்திரைத்தான் ஆண்டின் முதல் மாதம். பிங்கல நிகண்டு இராசியின் பெயர்களை மேடமு மிடபமு மிதுனமுங் கடகமும் சிங்கமும் கன்னியும் துலாமும் தேளும் தனுவும் மகரமும் கும்பமும் மீனும் என்றே வரிசைப்படுத்துகிறது.

 கோடைக் காலமே முதலாவது பருவம். 'தலைவந் திசைவேனில்' (சீவக-648)  எனச் சீவகசிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது. கோடைகாலத்தின் தொடக்கம் சித்திரையாகும். வீரமாமுனிவரும் தமிழர்கள் ஏப்ரல் மாதத்தில் ஏதோ ஒரு நாளில் ஆண்டின் முதல் நாளைக் கொண்டுள்ளனர் என்கிறார். சென்னை பல்கலைக்கழகத்தால் 1912 ஆம் ஆண்டு, பதிப்பிக்கப்பட்ட தமிழ் பேரகராதியில் 'சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' எனக் கூறப்பட்டுள்ளது. கிரிகோரியன் நாட்காட்டியை அனைவரும் ஏற்றுக்கொண்டு ஜனவரி முதல் தேதியை ஆண்டின் முதல் நாளாகக் கடைபிடிக்கிறோம். இவ்வாண்டு அனைவரும் கடைபிடிக்கும் பொது ஆண்டு. வங்கிகளும், பணம் வரவு, செலவு செய்கிறவர்களும் ஏப்ரல் முதல் தேதியை ஆண்டின் முதல் நாளாகவும், அவ்வாண்டை நிதி ஆண்டு (Finalcial Year) என்றும் அழைக்கின்றனர். பள்ளிகள், கல்லூரிகளில் ஜுன் மாதத்தை முதல் மாதமாக் கொண்ட கல்வி ஆண்டு (Academic Year) கடைபிடிக்கிறார்கள். எனவே பொது ஆண்டு அனைவருக்குமானது, செய்யும் தொழிலைப் பொறுத்து மற்றொரு ஆண்டு முறையையும் நாம் பயன்படுத்துகிறோம் அல்லவா? பயிர்த்தொழில் புரியும் விவசாயிகள் பொது ஆண்டுடன் விவசாய ஆண்டைப் பயன்படுத்துவது இயல்புதானே? சித்திரை மாதத்தை முதல் மாதமாகக் கொண்ட ஆண்டு முறையைப் பொது ஆண்டாகவும், தை மாதத்தை முதல் மாதமாகக் கொண்ட ஆண்டை விவசாய ஆண்டாகவும் கடைபிடித்துள்ளனர். அதனால்தான் இரண்டு கருத்துக்களுக்கும் தரவுகள் கிடைக்கின்றன. ஏன் தை மாதத்தை முதல் மாதமாகக் கொள்ளவேண்டும்? கல்வி ஆண்டு(Academic Year) ஏன் ஜுன்மாதம் ஆரம்பிக்கிறது? ஆண்டுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விட்டபின் ஜுன் மாதம் பள்ளிகள் ஆரம்பித்தால் நிர்வாக வசதிப்படி எளிதானது. இந்தியாவில் மே மாதம் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். தேர்வுத் தாள்களை ஆசிரியர்கள் திருத்தி மதிப்பெண்பட்டியல் தயாரிப்பதையும் செய்துவிடலாம். அதாவது செய்யப்படும் தொழிலின் வசதிக் கருதி ஆண்டுமுறையைக் கடைபிடிக்கிறோம். 

 விவசாயிகளைப் பொறுத்தவரை 'ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பார்கள். ஆடியில் விதைக்கிறார்கள். தையில் அறுவடைச் செய்கிறார்கள். அறுவடையின் பலனைக் கண்டு மகிழ்ந்து அதற்கு துணைபுரிந்த மாடுகளுக்கும், இயற்கைக்கும் நன்றி கூறி அதை விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இந்த மாதம் அவர்களுக்குச் செல்வம் புழங்கும் மாதம் எனவே பயிர்த்தொழில் புரியும் விவசாயிகள் தங்களின் விவசாய ஆண்டை தைமாதத்தில் தொடங்குகின்றனர். வங்கித் தொழில் புரிவோர் பொது ஆண்டையும், நிதி ஆண்டையும் (Financial Year)  கடைபிடிக்கின்றனர். கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் பொது ஆண்டையும், கல்வி ஆண்டையும் (Academic Year) கடைபிடிக்கின்றனர். அதுபோலவே விவசாயத் தொழில் புரிவோர் பொதுஆண்டின் முதல் மாதமான சித்திரையையும், விவசாய ஆண்டின் முதல் மாதமான தையையும் கடைபிடித்திருக்கின்றனர். எனவே தமிழர் ஆண்டுமுறையில் முதல் மாதம் சித்திரையா? தையா? என்ற கேள்விக்கு நமக்குக் கிடைக்கும் பதில் இரண்டும்தான். சித்திரை முதல் மாதம் என்பது வடமொழியினர் தமது மீது திணித்ததாகத் தையைக் கடைபிடிப்பவர்கள் கருதுகிறார்கள். ஆனால் சித்திரை மாதமும் தமிழர்களுக்கு உரியதுதான். சூரிய நாட்காட்டியில் மேழம் என்று பெயர் பெற்றிருந்த மாதம் சூரிய-சந்திர நாட்காட்டியில் சித்திரை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது, அவ்வளவே.

 ஆக, சித்திரை முதல் நாள் பொது ஆண்டின் தொடக்கம். தை முதல் நாள் விவசாய ஆண்டின் தொடக்கம். இரண்டும் தமிழர்களுக்கு உரியதே.

 நிற்க!

இதில் ஒரு இடர்ப்பாடு உண்டு. தற்காலங்களில் சித்திரை முதல் நாளும், தை முதல் நாளும் அதற்குரிய நாட்களில் வருவதில்லை. மேழ இராசியின் முதற்புள்ளியில் சூரியன் நுழையும் நாளே சித்திரை முதல்நாள் எனப் பார்த்தோம். ஆனால் இவ்வாண்டு சூரியன் மேழத்தில் பங்குனி ஏழாம் தேதியன்றே நுழைந்துவிட்டது. அதாவது ஆண்டு பிறப்பை இருபத்து மூன்று நாட்கள் கழித்துக் கொண்டாடி இருக்கிறோம். அதுபோல இந்த ஆண்டு சூரியன் வடசெலவை தொடங்கிய நாள் மார்கழி ஆறாம் தேதி, ஆனால் நாம் இருபத்து மூன்று நாட்கள் கழித்துக் கொண்டாடி இருக்கிறோம். இதற்குக் காரணம் நம் நாட்காட்டி இருபத்து மூன்று நாட்கள் முன்னோக்கிப் போய்விட்டது. இதைப் புரிந்துகொள்ள நாம் மீண்டும் வானியலுக்குப் போக வேண்டும்.

 நாட்காட்டி வரலாறு

தற்போது உலகில் பல நாட்காட்டிகள் வழக்கில் இருந்தாலும் கிரிகோரியன் நாட்காட்டியே உலகின் பொது நாட்காட்டியாகச் செயல்படுகிறது. கி.மு 45 இல் ரோமானியப் பேரரசர் ஜுலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட நாட்காட்டி ஜுலியன் நாட்காட்டி (Julian Calender). இதில் சில மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டதே கிரிகோரியன் நாட்காட்டி. அலோசியஸ் லிலியஸ் என்ற இத்தாலிய மருத்துவரால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட புதுநாட்காட்டி அப்போதைய போப் பதின்மூன்றாம் கிரிகோரி அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. அதனால் அந்த நாட்காட்டி கிரிகோரியன் நாட்காட்டி எனப் பெயர் பெற்றது. கிரிகோரியன் நாட்காட்டி வழக்கத்திற்கு வருமுன்னர் பழைய ரோமானிய நாட்காட்டியில் பத்து மாதங்களே இருந்தன. ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என பத்து மாதங்களின் பெயர்கள் இருந்தன. ஏழிலிருந்து பத்து வரையான மாதங்களின் பெயர் அந்த எண்களாகவே அழைக்கப்பட்டன. செப்டம் - ஏழு, ஆக்டா - எட்டு, நானோ - ஒன்பது, டெசி - பத்து. ரோமானிய பழைய நாட்காட்டியில் இருந்த குறைகள் காரணமாக நாட்காட்டி பருவகாலங்களுடன் ஒத்தியங்கவில்லை. இதனால் புது நாட்காட்டி ஒன்றை உருவாக்க ஜுலியஸ் சீசர் கேட்டுக்கொண்டதன் பேரில் உருவாக்கப்பட்டதே ஜூலியன் காலண்டர். இதில் பத்து மாதங்கள் பன்னிரண்டு மாதங்களாக்கப்பட்டன.

 புதிதாகச் சேர்க்கப்பட்ட இரு மாதங்களும் ஜுலியஸ் சீசர், அகஸ்டஸ் சீசர் பெயரால் ஜூலை, ஆகஸ்ட் எனப் பெயரிடப்பட்டு ஏழு, எட்டாம் மாதங்களாக்கப்பட்டன. இதனால் ஏழிலிருந்து பத்துவரை இருந்த மாதங்கள் ஒன்பதிலிருந்து பன்னிரண்டு என மாறின. அதனால் செப்டம்பர் என்றால் ஏழாம் மாதம் எனப் பொருள்படும்படி இருந்த மாதம் ஒன்பதாகவும், அக்டோபர் என்றால் எட்டு, அது பத்தாவதாகவும், நவம்பர் ஒன்பது பதினொன்றாகவும், டிசம்பர் பத்து பன்னிரண்டாவதாகவும் தற்போது மாறிப் பொருளில்லாமல் உள்ளது. இந்த நாட்காட்டியிலுள்ள குறைகளைக் களைந்து 1582 ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் கிரிகோரியன் நாட்காட்டி. இது உருவாக்கப்படும்போது கணக்கீடுகளைச் சரிசெய்ய பத்து நாட்கள் விடப்பட்டன. ஆண்டு தொடக்கம் மார்ச் 25 இலிருந்து ஜனவரி 1 இக்கு மாற்றப்பட்டது. புதுக் கணக்கீட்டில் நெட்டாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஓர் ஆண்டு நான்கால் மீதியின்றி வகுபட்டால் அது நெட்டாண்டு, மேலும் நூற்றாண்டுகள் 400 ஆல் வகுபடுபவை நெட்டாண்டுகள். இம்முறை ஆரம்பத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படாமல் 1752 வரை பழைய முறை, புதிய முறை என இரு முறைகளையும் பயன்படுத்தி வந்துள்ளனர். இக்குழப்பத்தைத் தீர்க்க இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 1750 ஆம் ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி மீண்டும் கணக்கீடுகள் செய்யப்பட்டு மேலும் பதினொரு நாட்கள் விடப்பட்டன. அதன்படி 1752 ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் செப்டம்பர் 3 முதல் 13 வரையான பதினொரு நாட்கள் நீக்கப்பட்டன. 1752 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத நாட்காட்டியை இணையத்தில் பார்த்தீர்களென்றால் அந்த மாதத்தில் பத்தொன்பது நாட்களே இருப்பதைப் பார்க்கலாம்.

 இந்திய தேசிய நாட்காட்டி

தென்னிந்தியா முழுவதும் பொதுவாகக் கடைபிடிக்கப்பட்ட முறை சக ஆண்டு முறையாகும். தென்னிந்தியாவைத் தவிர தென்னிந்தியவை ஒட்டிய நிலப்பகுதிகளிலும் குறிப்பாக குஜராத், வங்காளம், அசாம் மாநிலங்களில் இவ்வாண்டுமுறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்திய பண்பாட்டு பரவல் காரணமாக இவ்வாண்டுமுறை தெற்காசிய நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் சகாப்தம், சாலிவாகன சகாப்தம், சக வருஷம், சககாலம் என பலப்பெயர்களில் வழங்கப்படுகிறது. சாதவாகன மன்னன் கௌதம புத்ர சதர்கணியின் பெயரை இவ்வாண்டுமுறை தாங்கியுள்ளதாகக் கூறுவர். ஆனால் இவர் காலத்திற்கு முன்பாகவே இவ்வாண்டு முறையின் பெயர் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. சகாப்தம் 78 எனக்கொள்வதால் இது கனிஷ்கரின் ஆண்டாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இவ்வாண்டின் பெயர் தென்னிந்தியாவில் முதலாம் சாளுக்கிய மன்னன் முதலாம் புலிகேசியின் வாதாபி கல்வெட்டில் வருகிறது. இதன்காலம் சகம் 465 ஆகும் (465+78=553). பொதுவாகக் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கும் சக ஆண்டுடன் 78ஐ கூட்டித் தற்கால ஆண்டுக்கணக்கைக் கணக்கிடுகின்றனர்.

            இந்திய விடுதலை நாளுக்குப் பிறகு கிரிகோரியன் நாட்காட்டியே இந்திய அரசின் நாட்காட்டியாக இருந்துள்ளது. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு இந்த நாட்காட்டி சீரமைப்புக்குழு (Calendar Reform Committee) தனது அறிக்கையை இந்திய அரசிடம் வழங்கியது. இக்குழு கொடுத்த அறிக்கையின்படி இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியாக சக ஆண்டுமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1957ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் நாள் முதல் இந்நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. இந்தியா முழுமைக்கும் ஒரே நாட்காட்டியைப் பயன்படுத்துவதற்குக் காரணம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பஞ்சாங்கங்கள் நடைமுறையிலுள்ளன. எனவே பண்டிகை நாட்களைத் தெரிந்துகொள்வதில் வேறுபாடுகள் வருகின்றன. ஒரு பண்டிகை, அதற்கான விடுமுறை எனில் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் எனக்கருதிய அக்குழு, நாடு முழுவதிலும் வழக்கிலுள்ள பஞ்சாங்கங்களை ஆராய்ந்து, இந்தியா முழுமைக்கும் ஒரே பஞ்சாங்கத்தை கணிக்கும் விதமாக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தது. அவ்விடம் மத்திய பிரதேச மாநிலத்தில் (தற்போதைய சத்திஸ்கர் மாநிலம்) உள்ளது. இவ்விடத்தின் புவியியல் குறியீடுகள் 82°30'E, 23°11N ஆகும். இவ்விடத்தைக் கொண்டு பஞ்சாங்கம் கணிக்கப்பட்டு பண்டிகைகளின் தேதிகளை அறிவிக்கின்றனர். நாட்காட்டிதான் உள்ளதே ஏன் பஞ்சாங்கத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறதல்லவா?

            சூரியனை அடிப்படையாகக் கொண்ட பண்டிகைகளின் நாட்களை நாட்காட்டியிலிருந்து தெரிந்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக பொங்கல் பண்டிகையைச் சொல்லலாம். பொங்கலானது தை மாதம் முதல் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், நிலவை வைத்து பண்டிகை நாளை குறிக்கும்போது பஞ்சாங்கம் தேவைப்படும். எடுத்துக்காட்டாக தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாத அமாவாசையன்று வருவதைக் கூறலாம். அதனால்தான் பொங்கல் விழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14. இல் வருகிறது, ஆனால் தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் தேதி மாறுகிறது. அடுத்து சக ஆண்டு தற்காலத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது எனக் காண்போம். கிரிகோரியன் நாட்காட்டி உள்வாங்கப்பட்டு சக ஆண்டில் பொருத்தப்பட்டது. ஆண்டின் மாதங்கள் சைத்ர, வைசாக, ஜ்யேஷ்ட, ஆஷாட, சிராவண, பாத்ரபத, ஆஷ்வின, கார்த்திக, மார்கசீர்ஷ, பௌஷ, மாக, பால்குன எனக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் 30 அல்லது 31 நாட்கள். கிரிகோரியன் நாட்காட்டியைப் போலவே நெட்டாண்டும் உண்டு. கிரிகோரியன் நாட்காட்டியில் நெட்டாண்டில் அதிகமாகும் ஒரு நாள் பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்படுவதைப் போல இங்குசைத்ரவில்சேர்க்கப்படுகிறது. சாதாரண ஆண்டில் சைத்ரவில் 30 நாட்கள் இருக்கும். நெட்டாண்டில் 31 நாட்கள் இருக்கும். மொத்த நாட்களின் எண்ணிக்கையும் கிரிகோரியன் நாட்காட்டி போன்றே 365 மற்றும் 366 நாட்கள்.

  சாதாரண ஆண்டு

நெட்டாண்டு

எண்

மாதம்

நாள்

கிரிகோரியன் நாள்

எண்

மாதம்

நாள்

கிரிகோரியன் நாள்

01

சைத்ர

30

மார்ச் 21

01

சைத்ர

31

மார்ச் 22

02

வைசாக

31

ஏப்ரல் 21

02

வைசாக

31

ஏப்ரல் 21

03

ஜ்யேஷ்ட

31

மே 21

03

ஜ்யேஷ்ட

31

மே 21

04

ஆஷாட

31

ஜுன் 22

04

ஆஷாட

31

ஜுன் 22

05

சிராவண

31

ஜுலை 23

05

சிராவண

31

ஜுலை 23

06

பாத்ரபத

31

ஆகஸ்ட் 23

06

பாத்ரபத

31

ஆகஸ்ட் 23

07

ஆஷ்வின

30

செப்டம்பர் 23

07

ஆஷ்வின

30

செப்டம்பர் 23

08

கார்த்திக

30

அக்டோபர் 23

08

கார்த்திக

30

அக்டோபர் 23

09

மார்கசீர்ஷ

30

நவம்பர் 22

09

மார்கசீர்ஷ

30

நவம்பர் 22

10

பௌஷ

30

டிசம்பர் 22

10

பௌஷ

30

டிசம்பர் 22

11

மாக

30

ஜனவரி 21

11

மாக

30

ஜனவரி 21

12

பால்குன

30

பிப்ரவரி 20

12

பால்குன

30

பிப்ரவரி 20

 

 

365

நாள்

 

 

 

366

நாள்

 

            சக ஆண்டுடன் 78ஐ கூட்டியபின் கிடைக்கும் எண் நான்கால் வகுபட்டால் அது நெட்டாண்டு. சக ஆண்டுகள் 1878, 1882, 1886, 1894, ஆகியவை நெட்டாண்டுகள். ஏனெனில் 1878+78=1956, 1882+78=1960, 1886+78=1964, 1890+78=1968, 1894+78=1972 ஆகிய நான்கால் வகுபடும் ஆண்டுகள் எனவே நெட்டாண்டுகள். நூற்றாண்டுகளைப் பொருத்தவரை 400 ஆல் வகுபட்டால் மட்டுமே நெட்டாண்டாகும். அதன்படி சக ஆண்டுகள் 2022, 2122, 2222, 2422, 2522, 2622 ஆகியவை நெட்டாண்டுகள் அல்ல. ஏனெனில் 2022+78=2100, 2122+78=2200, 2222+78=2300, 2422+78-2500, 2522+78=2600 , 2622+78=2700 ஆகியவை 400 ஆல் வகுபடக் கூடியவை அல்ல. அதேவேளையில், சக ஆண்டுகள் 2322, 2722, 3122 ஆகியவை நெட்டாண்டுகள். ஏனெனில் 2322+78=2400, 2722+78=2800, 3122+78=3200 ஆகியவை 400 ஆல் வகுபடக்கூடியவை.

 தேசிய நாட்காட்டி உருவாக்கும்போது நாட்காட்டிக் குழு நாட்காட்டி எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுக்கிறது.

 

  • ஆண்டு சரியாக வரையறை செய்யப்பட வேண்டும்.
  • பருவகாலங்கள் வானியல்படி சரியான தேதிகளில் நடைபெற வேண்டும். 
  • வானியல் அடிப்படையில் தொடங்குவதாக இருக்க வேண்டும். 
  • ஒரு நாளானது நள்ளிரவில் ஆரம்பமாக வேண்டும்.
  • ஆண்டுப் பிறப்பானது சூரியன் கோடைகால சமநோக்குப் புள்ளியைக் (Vernal

Equinox) கடக்கும் நாளாக இருக்க வேண்டும்.

  • ஓர் ஆண்டின் நாட்களின் எண்ணிக்கை பருவ ஆண்டாக (Tropical Year)

இருக்க  வேண்டும்.

  • ஓர் ஆண்டு ஆறு பருவங்களையும், ஒரு பருவம் இரண்டு மாதங்களையும்

கொண்டிருக்க வேண்டும்.

  • ஒரு மாதம் என்பது சூரியப் பாதையில் சூரியன் 30 பாகை பயணிக்கும்

காலமாக இருக்க வேண்டும்.

  • சாதாரண ஆண்டில் 365 நாட்களும், நெட்டாண்டில் 366 நாட்களும் இருக்க

வேண்டும்.

  • சக ஆண்டுடன் 78ஐ கூட்ட வரும் எண் நான்கால் வகுபட்டால் அது

நெட்டாண்டாகும். நூற்றாண்டுகளில் 400 ஆல் வகுபடுபவைநெட்டாண்டுகள்..

  • சைத்ர மாதம் ஆண்டின் முதல் மாதம். இம்மாதம் சாதாரண ஆண்டில் 30

நாட்களையும் நெட்டாண்டில் 31 நாட்களையும் கொண்டிருக்கும்.

  • நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டி நாள்களுடன் பொருந்தியிருக்க

வேண்டும்.

  

பருவ காலங்கள்

 கோடைக் காலம்

வைசாக – ஜ்யோஷ்ட

மழைக் காலம்

ஆஷாட – சிராவன

இலையுதிர் காலம்

பாத்ர – அஷ்வின

பின் இலையுதிர் காலம்

கார்திக – மார்கசீர்ஷ

குளிர் காலம்

பௌஷ – மாக

வசந்த காலம்

பால்குன - சைத்ர

  

சைத்ரா 1

மார்ச் 22 / 23

வைசாக 1

ஏப்ரல் 21

ஜ்யோஷ்ட 1

மே 22

ஆஷாட 1

ஜுன் 22

சிராவன 1

ஜுலை 23

பாத்ரா 1

ஆகஸ்ட் 23

அஷ்வின 1

செப்டம்பர் 23

கார்திக 1

அக்டோபர் 23

மார்கசிர்ஷ 1

நவம்பர் 22

பௌஷ 1

டிசம்பர் 22

மாக 1

ஜனவரி 21

பால்குன 1

பிப்ரவரி 20

 

  • நேரக் கணக்கீட்டிற்கு 82°30'E, 23'11'N என்ற புவியியற் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும்.
  • புதிய நாட்காட்டியை நடைமுறைப் படுத்தும்போது சூரிய நாட்காட்டி நடைமுறையில் உள்ள மாநிலங்கள் (வங்காளம், ஒரிசா, அசாம், தமிழ்நாடு) ஆண்டுப்பிறப்பு சைத்ர (மார்ச் 21/22) அன்று இருக்குமாறு காலப்போக்கில் மாற்றிக்கொள்ள வேண்டும். தற்போது வங்காளம், ஒரிசா, அசாம் மாநிலங்கள் சூரிய ஆண்டுப்பிறப்பு ஏழு நாட்கள் தாமதமாகவும், தமிழ்நாட்டில் சூரிய ஆண்டுப்பிறப்பு 23 நாட்கள் முன்னதாகவும் நடைபெற்றுவிடுகிறது.
  • ஓர் ஆண்டில் நாட்களின் எண்ணிக்கை 365/366 என்றவாறு இருக்க வேண்டும். அதாவது தற்போது கிரிகோரியன் ஆண்டுமுறைபோல பொது ஆண்டில் 365 நாட்களும் நெட்டாண்டில் (Leap Year) 366 நாட்களும் இருக்க வேண்டும். மேலும் 400 ஆல் வகுபடும் நூற்றாண்டுகள் நெட்டாண்டுகள் எனவும் கொள்ளவேண்டும்.

 ஒரு சிறந்த நாட்காட்டியின் கூறுகள்:

 (அ) ஓர் ஆண்டு நன்கு வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.

(ஆ) அது கோடைக்கால சமநோக்கு நாளில் தொடங்க வேண்டும்

(இ) பருவகாலங்களின் அடிப்படையில் இயங்க வேண்டும்.

(ஈ) மாதங்களிலும், ஆண்டிலும் வரும் நாட்களின் எண்ணிக்கை முழு எண்களாக இருக்க வேண்டும்.

(உ) ஒரு நாளானது நள்ளிரவில் தொடங்க வேண்டும்.

 ஐரோப்பியர்கள் இந்த இடர்ப்பாடுகளை எவ்வாறு கையாண்டனர்?

            நமக்குதான் இந்த இடர்ப்பாடுகளா? இல்லை இது அனைவருக்குமானது. ஐரோப்பியர்கள் இதை எவ்வாறு கையாண்டனர் எனப் பார்ப்போம்.  ஐரோப்பியர்களின் ஆண்டு கணக்கீடு வேறுவகையானது. நள்ளிரவு பன்னிரண்டு மணியிலிருந்து அடுத்தநாள் பன்னிரண்டு மணி வரும் வரைக்குமான காலம். அதாவது சரியாக 24 மணிநேரம். ஒரு ஆண்டிற்கு 365 நாட்கள். உண்மையில் 365 நாட்கள், 6 மணி, 12 நிமிடம், 30 விநாடிகள் ஆகும். இதனால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சேரும் ஒரு நாள் நான்காவது ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்பட்டு அவ்வாண்டு நெட்டாண்டாக (Leap Year) கணக்கிடப்படுகிறது. ஆறு நிமிடங்கள் நான்கு சேர்ந்து இருபத்து நான்கு மணி அதாவது ஒரு நாளாக மாறியது. மீதமுள்ள 12 நிமிடம், 30 விநாடி எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்றால், ஒவ்வொரு 400 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மூன்று நாட்கள் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும்.

 12நிமிடம்X400=4,800 நிமிடம்

30விநாடிX400=12,000விநாடி=200 நிமிடம்

மொத்தம் 4,800+200= 5,000 நிமிடம்=5,000÷60=83மணி÷24=3.4 நாள்

 இது தற்போதுள்ள நடைமுறை பிற்காலங்களில் இதுவும் மாற்றப்படலாம். ஐரோப்பியர்களின் நாட்காட்டியானது ரோமானிய நாட்காட்டி, ஜுலியன் நாட்காட்டி என பல நிலைகளில் பல மாற்றங்களை உள்வாங்கியது. நாம் ஏற்கனவே கூறிய 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடும் ஒரு நாள் கணக்கை உணர்ந்த ஐரோப்பியர்கள், தாங்கள் ஏற்கனவே தவறவிட்ட நாட்களை ஈடு செய்வதற்கு சில நாட்களை நாட்காட்டியிலிருந்து நீக்கிவிட்டனர். கடந்த ஆண்டுகளில் சில நாட்களை சேர்க்க வேண்டுமெனில் வரும் ஆண்டில் அந்த நாட்களின் எண்ணிக்கையை நீக்க வேண்டும். 

 கி.பி 1582 ஆம் ஆண்டில் போப் கிரிகோரி XII செப்டம்பர் மாத நாட்காட்டியில் செப்டம்பர் 3 முதல் 13 வரையிலான 11 நாட்களை நீக்கிவிட்டார். முதலில் சில நாடுகளே இதை ஏற்றுக்கொண்டன. இரஷ்யா போன்ற நாடுகள் கி.பி 1752 ஆம் ஆண்டில் கிரிகோரியன் முறையை நடைமுறைப்படுத்தின. அந்த ஆண்டுகளின் பழைய நாட்காட்டியைப் பார்த்தால் செப்டம்பர் மாதத்தில் 19 நாட்களே இருக்கும். இதனால் கிரிகோரியன் நாட்காட்டி பருவகாலங்களுடன் ஒத்தியங்குகிறது அவர்களின் பண்டிகைகளும் ஆண்டின் ஒரே நாளில் வருகிறது. தமிழ் நாட்காட்டியும் இவ்வாறு பருவகாலங்களுடன் ஒத்தியங்க 23 நாட்களை நீக்கி இப்போது பயன்படுத்தும் நாட்காட்டியில் மாற்றம் கொண்டு வரலாம். 

 இவ்வாறு மாற்றம் செய்யவில்லை எனில் என்ன நிகழும்? பருவ காலங்களின் நாட்கள் நாட்காட்டியுடன் ஒத்து இயங்காது. வரும் காலங்களில் நாம் பருவகாலங்களைப் புரிந்துகொள்வதில் இடர்பாடு ஏற்படும். இதைத் தவிர்க்க நமக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று காலம் செல்லச் செல்ல பருவகாலங்களின் தேதிகளை மாற்றி அறிவித்துக் கொண்டே வரவேண்டும். ஆனால் இது அவ்வளவு சிறந்த வழி அல்ல. மக்களிடத்தில் குழப்பம் ஏற்படும். மற்றொரு வழி நாட்காட்டியில் மாற்றம் கொண்டுவருவது. இரண்டாவது வழியே சிறந்தது. நாட்காட்டியில் 23 நாட்களை நீக்குவதால் பஞ்சாங்கம் கணிப்பதிலும், சாதகக் கணிப்பிலும் மாற்றம் நிகழுமா எனில், இல்லை. தேதிகள் மட்டுமே மாறும் மற்ற கணக்கீடுகள் யாவும் அப்படியே இருக்கும்.

 நாட்காட்டி திருத்தத்திற்கான எமது பரிந்துரைகள்

 ·        பொதுவாக நாட்காட்டிகள் காலந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருபவை. மிகமிகத் துல்லியமான நாட்காட்டி என்று எதுவும் இல்லை. ஐரோப்பியர்களின் நாட்காட்டி பலமுறை மாற்றியமைக்கப்பட்டதைக் கண்டோம். அதுபோல் தற்போது சக ஆண்டு மாற்றியமைக்கப்பட்டு இந்திய நாட்காட்டியாக உள்ளது. அந்த வகையில் தமிழ் நாட்காட்டியும் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது. தமிழ் நாட்காட்டியின் முதன்மையான இடர்ப்பாடு பருவக்காலங்களிலிருந்து 23 நாட்கள் விலகி இருப்பது. இது மேலும் விலகிச் சென்றுகொண்டுள்ளது. இதைத் தீர்க்க நாட்காட்டியில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

 

·        நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆண்டைக் கணக்கிடும்போது ஆண்டுக்கு 0.01656 நாட்கள் வேறுபாட்டின் காரணமாக 1500 ஆண்டுகளில் இது 23 நாட்களாக மாறியுள்ளது. நாட்காட்டியில் முன்னோக்கிச் சென்ற இந்த 23 நாட்களை வரும் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு மாதத்திலிருந்து நீக்கிவிட்டால் நாட்காட்டியானது பழைய நிலைக்குத் திரும்பிவிடும். அதன்பிறகு தேவைக்குத் தகுந்தவாறு மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். இவ்வாறு ஓர் ஆண்டின் ஒரு மாதத்தில் 23 நாட்களை நீக்குவதென்பது சில குழப்பங்களை விளைவிக்கலாம். ஆனால், அதை நாம் எதிர் கொண்டேயாக வேண்டும். ஐரோப்பியர்கள் தங்களின் நாட்காட்டியில் பதினொரு நாட்களை நீக்கினார்கள் என்றும் பார்த்தோம். அவ்வாறு நாட்கள் நீக்கப்பட்டபோது எதிர்ப்பு இருந்தது. பல நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் படிப்படியாக அனைவரும் ஏற்றுக்கொண்ட நாட்காட்டியாகியது. அப்போதைய காலகட்டத்தில் மக்களின் புரிதலினால் எதிர்ப்புகள் அதிகம் இருந்திருக்கலாம். அறிவியல் வளர்ச்சியுற்ற தற்காலத்தில் அவ்வளவு எதிர்ப்பு இருக்காது என்று நினைக்கிறோம். நாட்காட்டி திருத்தத்திற்கான குழுவில் நாட்களை நீக்குவதன் விளைவுகளை ஆராய்ந்து அதற்குத் தகுந்தவாறு செயல்படலாம்.

·        முதலில் நாட்காட்டியில் சிறிய மாற்றம் செய்யவேண்டியத் தேவை ஏன் வந்துள்ளது எனப் பார்ப்போம். சூரியன் வடசெலவைத் தொடங்கும் நாள் தை மாதம் முதல் நாள் எனக் கருதி வருகிறோம். ஆனால்  தற்போது சூரியன் தனது வடசெலவை மார்கழி மாதம் ஆறாம் தேதியே தொடங்கிவிடுகிறது. அதுபோல தென்செலவு ஆடி முதல் நாள் நிகழாமல் ஆனி மாதம் ஏழாம் தேதியில் நிகழ்கிறது. இதற்குக் காரணம் சூரியனின் இயக்கத்தில் ஏற்பட்ட மாறுதல் அல்ல. நமது நாட்காட்டி காலத்தை நுட்பமாக அளவிடாததே. நமது நாட்காட்டியின் இந்தக் குறை குறுகியக் காலத்தில் உணரப்படாது, நீண்ட காலகட்டத்தில்தான் தெரியும். நாட்காட்டி பருவக்காலங்களுடன் சேர்ந்து இயங்கவில்லை எனில் பருவக் காலங்களைப் புரிந்துக்கொள்வதில் இடர்பாடு ஏற்படும். நீண்டக் காலகட்டத்தில் நோக்கும்போது பருவக் காலங்களும், பண்டிகைக் காலங்களும் பின்னோக்கி நகர்ந்திருப்பதைக் காணலாம். இதற்கு மற்றொரு சான்று சங்ககாலத்தில் நடைபெற்ற தைநீராடல் விழா தற்காலங்களில் மார்கழி நீராடல் விழாவாக நடைபெறுகிறது.

·        இவ்வாறு 23 நாட்கள் நீக்கப்பட்டால் இன்று பங்குனி 7 அன்று சூரியன் மேழத்தில் நுழையும் நாள் சித்திரை 1 அன்று நடைபெறும். அதாவது சித்திரை 1 கோடைகால சமநோக்கு நாளாக (Vernal Equinon) மாறிவிடும். அதேபோல மார்கழி 6 அன்று நடைபெறும் வடசெலவின் தொடக்கம் தை 1 அன்று நடைபெறும். அதாவது தை 1 ஆனது கோடைக்கால கதிர்திரும்பும் (Summer Soletice)  நாளாக மாறிவிடும். எனவே இயல்பாகவே பொது ஆண்டு சித்திரை 1 ஆகவும் விவசாய ஆண்டு தை 1 ஆகவும் மாறிவிடும். இவ்வாறு நாட்களை நீக்காமல் இருந்தால் இன்று 23 நாட்கள் இருந்த வேறுபாடு மேலும் அதிகரித்துப் பருவகாலங்களின் தேதிகள் மாறிவரும். நாம் கோடைக் காலம் என நினைக்கும் மாதங்களில் காற்றடிக்கும், காற்றடிக்கும் என்று கூறும் மாதங்களில் மழை பெய்யும். உண்மையில் வானிலையில் மாற்றமில்லை, எனினும் பருவகாலங்களுக்கும் மாதங்களின் பெயர்களுக்கும் உள்ள நமது புரிதலின் காரணமாக இந்தக் குழப்பம் அதிகரித்துக் கொண்டேதான் போகும். ஏதேனும் ஒரு நிலையில் இம்முடிவை நாம் எடுத்தேயாகவேண்டும். இல்லையெனில் இந்திய தேசிய நாட்காட்டி போன்று புதிதாக ஒரு நாட்காட்டி முறையை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கும் நிலையில் புதிதாக உருவாக்கப்படும் ஆண்டுமுறையில் மார்ச் 21 ஆம் தேதியன்று சித்திரை 1 வருமாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.

 

·        நாட்களை நீக்குவதன் விளைவாகச் சூரியனை அடிப்படையாகக் கொண்ட நிகழ்வுகள் அல்லது பண்டிகைகள் மீண்டும் பழைய தேதிக்கு மாறும் எனபார்தோம். அப்போது நிலவை அடிப்படையாக கொண்ட பண்டிகைகள் எவ்வாறு மாறும்? அவற்றின் தேதிகள் மாறிவரும். பண்டிகைகளின் நாட்களை சாதகம் கணக்கிடுகிறவர்கள் தங்கள் கணக்கீடுகளின்படி அவற்றின் தேதிகளை அறிவிக்கின்றனர். நிலவை அடிப்படையாகக் கொண்ட நிலவு மாதத்திற்கும் (Synodial Year) பருவ ஆண்டிற்கும் (Tropical Year) வேறுபாடு இருப்பதால் நிலவை அடிப்படையாகக் கொண்ட பண்டிகைகள் ஒரே தேதியில் வராது. தீபாவளியை எடுத்துக்கொள்ளுங்கள், ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு தேதிகளில் வருகிறது. ஏனெனில் தீபாவளியானது ஐப்பசி அமாவாசையில் வரும், அந்தநாளை நாம் கிரிகோரியன் நாட்காட்டியில் பார்க்கிறோம். அதனால்தான் ஒரே பண்டிகை வெவ்வேறு நாட்களில் வருகிறது. நாட்கள் நீக்கப்படுவதனால் இந்தக் கணக்கீடுகளில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. 

·        பொது நாட்காட்டிக் கணக்கீட்டிற்காக ஒரு நாளானது நள்ளிரவு பன்னிரண்டு மணியிலிருந்து தொடங்க வேண்டும். மதம் தொடர்பானச் செயல்பாடுகளுக்கோ, சாதகம் கணிப்பதற்கோ சூரிய உதய நேரத்தைத் தனியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

·        தமிழ்நாட்டின் மையப்பகுதி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அவ்விடத்தின் நேரத்தைக் கொண்டே நாட்காட்டி அமைக்கப்படவேண்டும்.

·        இந்திய தேசிய நாட்காட்டி சக ஆண்டை தொடராண்டாகக் கொண்டுள்ளதைப்போல தமிழ் நாட்காட்டிக்கும் தொடராண்டு வேண்டும். நமக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று ஏற்கனவே நாம் ஏற்படுத்தி வைத்துள்ள திருவள்ளுவராண்டை தொடர்வது. இரண்டாவது கலியாண்டை சில மாற்றங்கள் செய்து எடுத்துக்கொள்வது. மூன்றாவது புதிதாக ஒரு தொடராண்டு முறையை உருவாக்குவது. திருவள்ளுவராண்டையே தொடரலாமெனில் அதில் சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டியிருக்கும்.  ஆண்டு சித்திரை ஒன்றில் தொடங்கவேண்டும்.  திருவள்ளுவராண்டு தைமாதம் தொடங்குவது. நெட்டாண்டு முறையையும் கடைபிடிக்க வேண்டும். திருவள்ளுவராண்டை உருவாக்கியவர்கள்  தமிழறிஞர்கள் ஆனால் தற்கால வானியலை முழுமையாக உள்வாங்கி அமைக்கவில்லை. உணர்வை அடிப்படையாக அமைக்கப்பட்டது. மேலும் கலியாண்டு முறை தமிழர்களுடையது அல்ல என்று எண்ணியிருப்பர் போலும். நமக்குள்ள இரண்டாவது வாய்ப்பு கலியாண்டுமுறையை தொடராண்டாகக் கொள்வது. இவ்வாய்ப்பு நமக்கு சிறந்ததாகப்படுகிறது. மூன்றாவதாக உள்ள வாய்ப்பான புதிய தொடராண்டை உருவாக்கிக் கொள்வது.அவ்வளவு சிறந்தத் தேர்வாக இருக்காது.

·        சுருங்கக் கூறின் இது கிரிகோரியன் மற்றும் இந்திய தேசிய நாட்காட்டியின் கலவையாக இருக்கும். சிறந்தது எங்கிருந்தாலும் அதை நாம் எடுத்துக்கொள்வதில் தவறில்லை.

·        தமிழர்கள், வானியல் அறிஞர்கள், பஞ்சாங்கம் உருவாக்குவோர், சாதகம் கணிப்போர், வரலாற்று அறிஞர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி நாட்காட்டியில் மாற்றம் செய்வது குறித்தும், தொடராண்டு குறித்தும் விவாதித்துத் தேவையான சரியான முடிவை எட்டலாம். 

முடிவுரை

தமிழர்கள் தங்களின் வானியல் அறிவைக் கொண்டு உலக நாடுகளின் நேரங்களைக் கணக்கிடும் நெடுவரை முறையை உருவாக்கிக் கொடுத்துள்ளனர். நாட்காட்டி உருவாக்கம் உட்பட இன்றைய காலக் கணக்கீடுகளுக்கு வழிவகுத்தனர். இவர்கள் கணித்த வானியல் கணக்கீடுகள் இன்றும் வழங்கிவருகின்றன. இவர்களின் சூரிய நாட்காட்டி பின்னர் சூரிய-சந்திர நாட்காட்டியாகி மேலும் பல கூறுகளை உள்வாங்கி இன்றைய இந்திய நாட்காட்டியாகத் திகழ்கிறது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்துவிட்டபடியால் தற்போதைய தமிழ் நாட்காட்டியானது பருவ காலங்களிலிருந்து 23 நாட்கள் முன்னோக்கிச் சென்றுள்ளது. இதைச் சரிசெய்ய வேண்டிய சரியான நேரம் இது. காலத்திற்கேற்ற வகையில் அதில் சிறிய மாற்றம் கொண்டுவந்தால் மேலும் சிறப்படையும். இல்லையெனில் இந்நாட்காட்டி பருவ காலங்களிலிருந்து மேலும் விலகிப் போகும். அதனால் நாம் வெயில் காலம் என எண்ணியிருக்கும் காலத்தில் மழை பெய்யும், மழைக்காலம் என்று எண்ணியிருக்கும் காலத்தில் காற்றடிக்கும். இந்த இடர்ப்பாட்டை எதிர்கொள்ள நாட்காடியில் திருத்தம் கொண்டுவந்தே ஆக வேண்டும். உலக நாட்காட்டியிலும், இந்திய நாட்காட்டியிலும் திருத்தம் செய்யப்பட்டுவிட்டது. தமிழ் நாட்காட்டியிலும் திருத்தம் செய்தாக வேண்டும். இதற்காக வானியல் அறிஞர்கள், தமிழறிஞர்கள், சாதகம் கணிப்போர், வரலாற்று, தொல்லியல் அறிஞர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இதுகுறித்து விரிவாக விவாதித்து அதன்படி செயல்படுதல் நலம்.

 

நன்றி

கா. பாலகிருஷ்ணன் 

                                                                                                                         (பாலா பாரதி)

  பார்வை நூல்கள்:

01. தொல்காப்பியம், மூலம், கழகம் 1967.

02. நெடுநல்வாடை, NCBH, 2007.

03. கலித்தொகை, கழகம், 1967.

04. பரிபாடல், NCBH, 2007.

05. ஆண்டிறீக்கு அடிகளார் இயற்றிய அடியார் வரலாறு, தமிழ் இலக்கிய

   கழகம், தூத்துக்குடி 1967.

06. இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு, கில்பர்ட் சிலேட்டர், 

   (மொழிபெயர்ப்பாசிரியர் பன்மொழிப் புலவர் திரு கா. அப்பாதுரை, பூம்புகார்

   பதிப்பகம், சென்னை.

07. தமிழர் நாகரிகமும் பண்பாடும், டாக்டர் அ.தட்சிணாமூர்த்தி, யாழ்

   வெளியீடு, சென்னை.

08. இலக்கியத்தில் சோதிடம், முனைவர் தி. மகாலட்சுமி, உலகத்தமிழ்

   ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 1996.

09. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், டாக்டர் கே. கே. பிள்ளை, உலக

   தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 2002. 

10. குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு ,திரு கே. அப்பாதுரை

   பிள்ளை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்

   கழகம், சென்னை, 1941.

11. இந்திய தத்துவக் களஞ்சியம், தொகுதி 1, டாக்டர். சோ.நா. கந்தசாமி, 

    மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

12. சாதக அலங்காரம், கீரனூர் நடராஜர்

13. காலச்சக்கரம், சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர்,

14. வள்ளுவத்தின் வீழ்ச்சி, குணா தமிழக ஆய்வரண் வெங்காலூர்.

15. கலியுகம் (தமிழர் அறிவியல் மரபு), பேராசிரியர் கா. நெடுஞ்செழியன்,

   தமிழிய ஆய்வாளர்.

16. சாதக கணித முறைகள், B.A. பட்டப் படிப்பு, இளங்கலை முதலாம்

   ஆண்டு, சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,.

17. சிற்பச்செந்நூல், தொழில்நுட்பக் கல்வி இயக்கம், தமிழ்நாடு.

18. தமிழர் அறிவியல் மரபு, பன்மைவெளி, சென்னை 2018.

19. எனது இந்தியா, எஸ். இராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை.

20. திரு. வெள்உவன் அவர்களின் இணையவழிக் கட்டுரைகள்

21. பிறைவாசி,  நேரு காலண்டர், வரலாற்று பார்வை, இணையக் கட்டுரை ..

22. கல்வெட்டியல், முனைவர் கா.இராஜன், மனோ பதிப்பகம், தஞ்சாவூர் 2006.

23. Report of the calendar reform committee,  Govt. of India, Council of Scientific and

   Industrial Research, New Delhi, 1955.

24. Mayamata, Sitaram Bhartia Institute of Science and Research,  New Delhi.

25. The Aryabhatiya of Aryabhata, The University of Chicago Press, Chicago,  Illinois.

26. The Maldive Mystery, Thor Heyerdahl, Adler & Adler Publishers,United States, 1986,ISBN

   0-917561-19-8

27. Almanack, Joseph Whitaker, 1945, Pelman Institute, London.

28. The Children of Mu, James Churcjward, Ives Washburn Publisher, Newyark, 1931.

29. The Indian Calendar, Robert Sewell, Sankara Balakrishna Dikshit , Dr. Robert Schram, 

   Motilal Banasidass Publishers Private Limited, New Delhi.

கட்டுரையாளர்:

 பெயர் : கா.பாலகிருஷ்ணன் M.Sc., M.Ed., DIAE.,

(பாலா பாரதி)

முதல்வர் மற்றும் தாளாளர்,

பாரதி பதின்ம மேல்நிலைப் பள்ளி,

இந்தியன் வங்கிக் குடியிருப்பு,

திருச்சி, 620 021. தமிழ்நாடு.

புலனம் : 09944966826

மின்னஞ்சல் முகவரி : balabcc@gmail.com

 

2 comments:

  1. அருமையான சிறப்பான கட்டுரை. வாசித்து, வியந்து மகிழ்ந்தேன். மேலும் கட்டுரை தொடர்பாக வாசிக்க தகுந்த நூல்களை பட்டியல் செய்தால் உதவியாக இருக்கும் ஐயா

    ReplyDelete
  2. பட்டியல் ஏற்கனவே கொடுத்து உள்ளீர்கள். நான்தான் கவனிக்க வில்லை. நன்றி ஐயா

    ReplyDelete