BHARATHI MAT HR SEC SCHOOL, INDIAN BANK COLONY, K.K.NAGAR ROAD, TRICHY-21, 0431-2456583, 9944966826.
Thursday, 25 June 2026
தமிழர் பண்பாட்டில் ஓரையான் உடுக்கணத்தின் பதிவுகள்
இரவு வானில் வைரங்களாக மின்னும் விண்மீன்கள் பார்ப்போரைக் கவரும் வகையில் அமைந்த உடுக்கணங்களில் முதன்மையானது ஓரையான் உடுக்கணம் (Orion Constellation) ஆகும். விண்மீன்களை எளிதில் அடையாளம் காண ஏதுவாக, அவற்றை வெவ்வேறு விண்மீன் தொகுதிகளாகப் பிரித்து, கற்பனையான வடிவங்களை வழங்கி உடுக்கணங்களாக அறிகிறோம். சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) மொத்தம் எண்பத்து எட்டு (88) உடுக்கணங்களை அங்கீகரித்துள்ளது. அவற்றில், சூரியப் பாதையில் இயங்கும் பன்னிரண்டு உடுக்கணங்களை நாம் இராசிகள் (Zodiacal Constellations) என்கிறோம்.
பொதுவாக, உடுக்கணங்களில் சில வடிவத்தால் பெரிதாகவும், தங்களின் பெயருக்கேற்ற தோற்றத்துடனும் திகழ்பவை. அவற்றுள் ஓரையானுக்குத் தனிச்சிறப்பான இடமுண்டு. வான் நோக்குபவர்களுக்குத் தொடக்கத்திலேயே எளிதாகக் கண்டறியக் கூடியதாகவும், காண்பவரின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகவும் இவ்வுடுக்கணம் விளங்குகிறது. குளிர்கால வானை அலங்கரிக்கும் இவ்வுடுக்கணத்தின் வேட்டைக்காரன் தோற்றமும், பொலிவுமிக்க திருவாதிரை (Betelgeuse), ரைஜல் (Rigel) ஆகிய முதலாம் தரப் பொலிவெண் கொண்ட விண்மீன்களும் பார்ப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டக்கூடியவை.
1. மேற்கத்திய மரபும் வான் வழிகாட்டியும்
மேற்கத்திய கிரேக்கர்கள் இவ்வுடுக்கணத்தை ஒரு வேட்டைக்காரனாகப் (Hunter) பார்த்தார்கள். வேட்டைக்காரன் ஒருவன் தனது வலக்கையில் தடியொன்றைத் தூக்கியவாறும், இடக்கையில் கேடயத்தை ஏந்தியவாறும் நின்றுள்ள தோற்றத்தை வானில் எளிதில் காணலாம். நேர்கோட்டில் வரிசையாக இருக்கும் மூன்று விண்மீன்கள் வேட்டைக்காரனின் இடுப்புப் பகுதியை (Orion's Belt) உணர்த்துகின்றன. அந்த இடுப்புப் பகுதியிலிருந்து கத்தி ஒன்று தொங்கிக்கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தில், மங்கலான விண்மீன்கள் புகைபோலக் காட்சியளிக்கும். இதுவே புகழ்பெற்ற ஓரையான் வான்முகில் (Orion Nebula - M42) ஆகும்.
ஓரையானைக் கொண்டு வான்மண்டலத்தின் மற்ற விண்மீன்களையும் உடுக்கணங்களையும் எளிதாக அடையாளம் காண முடியும் என்பதால், இது வானின் சிறந்த வழிகாட்டியாகப் பயன்படுகிறது:
ஓரையானின் பெல்லாட்ரிக்ஸ் (Bellatrix) மற்றும் பீட்டில்ஜுஸ் (Betelgeuse) விண்மீன்களை இணைத்து அக்கோட்டை நீட்டினால், அது புரோசியான் (Procyon) விண்மீனை அடையும்.
அவனது இடுப்பிலுள்ள மூன்று விண்மீன்களை இணைத்து ஒரு நேர்க்கோடு வரைந்தால், அக்கோட்டின் இடப்புற நீட்சி சிரியஸையும் (Sirius), வலப்புற நீட்சி அல்டிபெரானையும் (Aldebaran - ரோகிணி) நோக்கிச் செல்லும்.
இடுப்பு விண்மீன்களில் வலது கோடியிலுள்ள விண்மீனிலிருந்து 'ரைஜல்' வழியே கோடு வரைந்தால், அக்கோடு 'அக்கிர்னர்' (Achernar) என்ற விண்மீனை அடையும்.
இடக்கோடியிலுள்ள விண்மீனிலிருந்து 'சைப்' (Saiph) வழியே கோடு வரைந்தால், அக்கோடு 'கேனபஸ்' (Canopus - அகஸ்தியர் விண்மீன்) எனும் விண்மீனை அடையும்.
இடுப்புக் கச்சையிலிருந்து ‘பெல்லாட்ரிக்ஸ்' வழியே செல்லும் கோடு ஆரைகா (Auriga) உடுக்கணத்தில் உள்ள 'காப்பெல்லாவை' (Capella) அடையும்.
இடுப்புக் கச்சையிலிருந்து 'பீட்டில்ஜுஸ்' வழியே செல்லும் கோடு மிதுன ராசியின் 'கேஸ்டர்' (Castor), 'பொலக்ஸ்' (Pollux) விண்மீன்களை அடையும்.
இவ்வாறு வானின் மற்ற உடுக்கணங்களையும், விண்மீன்களையும் அடையாளம் காண உதவுவதால், ஓரையான் வானின் "கலங்கரை விளக்கமாக" திகழ்கிறது. கிரேக்கப் புராணக் கதைகளிலும் ஓரையானுக்கு மிக முக்கியமான இடமுண்டு.
2. நடராஜர் வடிவமும் பிரபஞ்ச நடனமும்
கிரேக்கக் கதைகளில் ஓரையான் ஒரு வேட்டைக்காரனாகக் கூறப்பட்டுள்ள நிலையில், தமிழ் மரபில் இவ்வுடுக்கணம் பல்வேறு இறைவடிவங்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓரையான் உடுக்கணத்தின் தோற்ற அமைப்பிலிருந்தே சிவபெருமானின் ஒரு வடிவமான நடராஜர் திருவுருவம் வடிவமைக்கப்பட்டது.
இவ்வுடுக்கணத்தின் இரு தோள்களுக்கு இரு விண்மீன்கள், இரு கால்களுக்கு இரு விண்மீன்கள், இடுப்பில் அமையும் மூன்று விண்மீன்கள் என மொத்தம் ஏழு முதன்மை விண்மீன்களும் இணைந்து வானில் ஒரு உடுக்கை (Damaru) வடிவத்தை ஏற்படுத்துகின்றன. இதனைச் சுற்றியுள்ள மற்ற விண்மீன்களுடன் சேர்த்துப் பார்க்கும்போது, வலக்காலை ஊன்றி, இடக்காலைத் தூக்கியபடி நடனமாடும் காட்சி புலப்படும். இதையே சிவனின் பிரபஞ்ச நடனம் (Cosmic Dance) என்பார்கள்.
நடராஜரின் இடத்தோளில் தெரியும் செந்நிற விண்மீனே திருவாதிரை (Betelgeuse) ஆகும். இத்திருவாதிரை வடமொழியில் 'ஆருத்ரா' என அழைக்கப்படுகிறது. ஓரையான் உடுக்கணம் இரவு வானில் மிக உயர்ந்து உச்சிக்குக் காணப்படும் மார்கழி மாதத்தில் தான், சிவாலயங்களில் புகழ்பெற்ற "ஆருத்ரா தரிசனம்" மற்றும் நடனத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. நடராஜர் சிலாரூபங்களைச் சுற்றிக் காணப்படும் 'திருவாசி' (Aureole) என்பது, ஓரையான் உடுக்கணத்தைச் சுற்றியுள்ள விண்மீன் கூட்டங்களின் பேரொளிப் பரவலாகும். சிவபெருமானின் கையில் இருக்கும் உடுக்கை ஆயுதமும் இவ்வுடுக்கணத்தின் உடுக்கை வடிவ அமைப்பிலிருந்து பெறப்பட்டதே ஆகும்.
முயலகன் அரக்கன் தொடர்பு
நடராஜர் திருவுருவத்தில் இடது காலின்கீழே ஒரு சிறிய மனித உருவம் மிதிபட்டுக் கிடப்பதைக் காணலாம். இவனை அகந்தைக் கொண்ட 'முயலகன்' என்ற அரக்கன் என்று கூறுவர். இந்த அமைப்பிற்கு 'முயல்' என்ற பெயர் வரக் காரணம் என்னவெனில், ஓரையான் உடுக்கணத்திற்குச் சரியாகக் கீழே தெற்குப் பகுதியில் ஒரு சிறிய விண்மீன் கூட்டம் அமைந்துள்ளது. நவீன வானியலில் இதற்கு முயல் உடுக்கணம் (Lepus Constellation) என்று பெயர். வான்மண்டலத்தில் ஓரையான் (சிவன்) வடிவிற்கு நேர் கீழே முயல் உடுக்கணம் அமைந்திருப்பதாலேயே, நமது முன்னோர்கள் அதைச் சிவனின் காலடியில் மிதிப்படும் 'முயலகன்' அரக்கனாக உருவகித்துச் சிற்பக்கலையில் வடித்தனர்.
3. காலபைரவர் தோற்றம்
சிவனின் மற்றொரு வடிவமான காலபைரவரும் ஓரையான் உடுக்கணத்தின் தோற்ற அமைப்பிலிருந்து உள்வாங்கப்பட்ட வடிவமே ஆகும். காலபைரவரின் சிற்பத் தோற்றம் நின்றபடியிருக்கும் மனித உருவத்தையும், அவரது காலுக்கு அருகில் ஒரு நாயையும் கொண்டதாக இருக்கும். ஆன்மீகக் குறியீட்டில் நாய் அங்கு இடம்பெறக் காரணம் ஒரு வானியல் நிகழ்வே ஆகும்.
ஓரையான் உடுக்கணத்தின் அருகே கிழக்குத் திசையில் அமைந்துள்ள விண்மீன் கூட்டம் பெருநாய் உடுக்கணம் (Canis Major Constellation) ஆகும். பெயருக்கேற்றவாறு நாய் ஒன்றின் வடிவ போலவே காட்சியளிக்கும் இவ்வுடுக்கணத்தில்தான், இரவு வானின் மிகப்பொலிவான விண்மீனான சிரியஸ் (Sirius) அமைந்துள்ளது. இதில் சிரியஸ் விண்மீன் நாயின் தலையாகவும், மற்ற விண்மீன்கள் முன்னங்கால்கள் மற்றும் பின்னங்கால்களாகவும் அமைந்து, நாய் ஒன்று நடந்து வருவது போன்ற தோற்றத்தைத் தரும்.
வானில் ஓரையான் வடிவமானது நாயுடன் வேட்டைக்குச் செல்வது போலவும், காலுக்கு அருகே முயல் இருப்பது போலவும் அமைந்திருந்ததால் கிரேக்கர்கள் ஓரையானை வேட்டைக்காரனாகக் கருதினர். ஆனால் தமிழர்களோ, ஓரையானுக்கு அருகே இருக்கும் பெருநாய் வடிவத்தைச் சேர்த்து, அதற்குச் சிவபெருமானின் 'காலபைரவர்' என்ற திருவுருவத்தை வழங்கினர். 'பைரவர்' என்றாலே நாயை வாகனமாகக் கொண்டவரைக் குறிக்கும். இதனுடன் 'கால' என்ற முன்னொட்டு ஏன் வந்தது எனில், தமிழ் மொழியில் 'ஓரை' என்பது காலத்தை அளக்கும் முதன்மை அலகுகளுள் ஒன்றாகும். ஓரை என்பது காலத்தைக் குறிக்கும் சொல் என்பதால், இவ்வுடுக்கணத் தொடர்பால் 'காலபைரவர்' என்ற திருநாமம் உருவானது.
4. கங்காதரர் மூர்த்தியும் பால்வீதியும்
கங்காதேவியைத் தனது சடைய முடியில் தாங்கியிருக்கும் சிவனின் வடிவமான கங்காதரர் சிற்பப் பல கோயில்களில் செதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், திருச்சி மலைக்கோட்டையிலுள்ள பல்லவர் கால மேல்குடைவரைக்கோயில் ஆகியவற்றில் கங்காதரரின் அற்புதமான சிற்பங்களைக் காணலாம். இச்சிற்பங்களில் கங்காதரரின் காலுக்குக் கீழ் முயலகனும் (Lepus), அருகில் பைரவரும் இருப்பதுடன், அவரது இடப்புறத்தில் சற்று மேலே ஒரு நாய் காட்டப்பட்டிருக்கும். அந்த நாய் அங்குச் சிற்பமாக வடிக்கப்பட வான்மண்டல அமைப்பே காரணமாகும்.
ஓரையான் உடுக்கணத்திற்கு கிழக்கே சற்றுத் தள்ளி, பெருநாய் உடுக்கணத்திற்கு மேலே ஒரு சிறிய விண்மீன் தொகுதி உள்ளது. இது சிறிய நாய் உடுக்கணம் (Canis Minor Constellation) என அழைக்கப்படுகிறது. இதில் உள்ள மிகப்பொலிவான விண்மீன் புரோசியான் (Procyon) ஆகும். இந்தச் சிறிய நாய் உடுக்கணத்தின் குறியீடே கங்காதரர் சிற்பத்தில் மேல் பகுதியில் நாயாகக் காட்டப்பட்டுள்ளது.
கங்கையைச் சூடிய வானியல் இரகசியம்
சிவன் கங்காதேவியை ஏன் தலையில் சூடியுள்ளார் என்ற புராணக் கதைக்கு விடை நமது விண்மீன் மண்டலத் தோற்றத்தில் உள்ளது. நமது சூரியக் குடும்பம் பால்வீதி (Milky Way Galaxy) எனும் சுருள் வடிவ அண்டத்தினுள் இயங்குகிறது. நாம் இந்த அண்டத்தின் உள்ளே இருப்பதால், அதன் முழுமையான சுருள் வடிவத்தை பூமியிலிருந்து பார்க்க இயலாது. ஆனால், அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காண முடியும். இரவு வானில் உற்றுநோக்கினால், புகை போன்ற எண்ணற்ற விண்மீன்களுடன் தெற்கிலிருந்து வடக்காக ஒரு மலைப்பாம்பு படுத்திருப்பது போல இப்பால்வீதி காட்சியளிக்கும்.
இதன் வெண்ணிறப் புகை போன்ற தோற்றத்தைக் கண்ட மேலை நாட்டினர், வான்மண்டலத்தில் பால் கொட்டிக்கிடப்பதாக எண்ணி 'Milky Way' எனப் பெயரிட்டனர். ஆனால், நம் தமிழ் முன்னோர்களோ அவ்வெண்ணிறக் காட்சியை வான்வெளியில் 'கங்கை ஆறு' ஓடுவதாகக் கற்பனை செய்தார்கள்.
பூமியிலிருந்து பார்க்கும்போது பால்வீதி இரு நிலைகளில் தெளிவாகக் காட்சியளிக்கும். ஒன்று கோடைக்காலத் தோற்றம் (மிகவும் பொலிவான பகுதி), மற்றொன்று குளிர்காலத் தோற்றம். இவற்றில் பால்வீதியின் குளிர்காலத் தோற்றப் பகுதி, வான்மண்டலத்தில் சரியாக ஓரையான் உடுக்கணத்தின் தலைப்பகுதிக்கு மேலாகக் கடந்து செல்கிறது. வானில் ஓரையான் வடிவத்தைச் சிவனாகவும், அதன் தலைக்கு மேல் செல்லும் பால்வீதியை வான் கங்கையாகவும் தமிழர்கள் உருவகித்ததால், சிவபெருமான் கங்காதேவியைத் தனது தலைமுடியில் சூடியுள்ளதாகக் 'கங்காதரர்' தொன்மம் உருவானது.
5. முக்கண்ணன் (மிருகசீரிடம்)
சிவபெருமானுக்கு நெற்றிக்கண் உள்ளதால் அவருக்கு 'முக்கண்ணன்' என்ற பெயர் வழங்கப்படுகிறது. நெற்றியில் கண் இருப்பதாகக் கூறப்பட்டதன் பின்னணியிலும் ஒரு வானியல் அவதானிப்பு உள்ளது.
ஓரையான் உடுக்கணத்தின் தலைப்பகுதியில் அமைந்துள்ள விண்மீன் தொகுதி மிருகசீரிடம் (Meissa) ஆகும். இதனைத் தமிழ் மரபில் 'மான்றலை' என்று அழைப்பார்கள். இந்த விண்மீன் பகுதியை உற்று நோக்கினால், அங்கு மூன்று விண்மீன்கள் மிக நெருக்கமாக அமைந்திருப்பது தெரியும். இம்மூன்று விண்மீன்களும் பார்ப்பதற்குத் தேங்காயில் உள்ள மூன்று கண்களைப் போலவே காட்சியளிக்கும். இதனைப் பழங்கால வானியல் பாடல் ஒன்று பின்வருமாறு விவரிக்கிறது:
"மான்றலை மூன்றும் தேங்காய்க்கனிபேர் ஆன்ற சிங்கத்தைந்தேகாலே..."
இப்பாடலின் மூலம், இம்மான்றலை (மிருகசீரிடம்) விண்மீன் இரவு வானின் உச்சிக்கு (Zenith) வரும் வேளையில், கிழக்குத் தொடுவானில் சிம்ம ராசி உதித்து ஐந்தேகால் நாழிகை ஆகியிருக்கும் என்ற வானியல் கணக்கீட்டையும் நமது முன்னோர்கள் துல்லியமாகக் கணித்துள்ளனர். சூரிய வீதியில் இயங்கும் பன்னிரண்டு இராசி உடுக்கணங்களில் ஓரையான் ஒரு இராசியாக இடம்பெறவில்லை எனினும், மிருகசீரிட விண்மீன் ஓரையான் உடுக்கணத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், சாதகம் கணிக்கும்போது அது ரிஷப (காளை) இராசிக்குரிய விண்மீனாகக் கருதப்படுகிறது.
6. உமையொருபாகன் / அர்த்தநாரீஸ்வரர்
சிவபெருமான் தனது உடலின் இடப்பாகத்தைத் தனது இணையரான உமையாளுக்கு வழங்கி 'உமையொருபாகனாக' அல்லது 'அர்த்தநாரீஸ்வரராக' விளங்குவதாகப் புராணங்கள் கூறுகின்றன. இத்தத்துவ வடிவமும் ஓரையானின் வான் தோற்றத்திலிருந்து உள்வாங்கப்பட்டதே ஆகும்.
ஓரையான் உடுக்கணத்தின் முதன்மை விண்மீன்கள் உருவாக்கும் 'உடுக்கை' வடிவத்தை இரு பாகங்களாகப் பிரித்தால், நமக்கு இரண்டு முக்கோண வடிவங்கள் கிடைக்கும்:
மேல்நோக்கிய முக்கோணம் (▲): இது ஆண் தன்மையைக் குறிக்கும் குறியீடாகும் (சிவம்).
கீழ்நோக்கிய முக்கோணம் (▼): இது பெண் தன்மையைக் குறிக்கும் குறியீடாகும் (சக்தி / உமை).
குறியீட்டு மரபில் (Symbolism) பிரபஞ்சத்தின் ஆண் மற்றும் பெண் ஆற்றல்களின் இணைவை உணர்த்தும் இந்த இரு முக்கோணங்களின் வடிவமே, வான்மண்டல ஓரையான் உடுக்கையிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் என்ற உன்னதமான தத்துவ வடிவமாகத் தமிழ் மரபில் மலர்ந்தது.
மேற்கண்ட வானியல் சான்றுகளிலிருந்து, நமது முன்னோர்கள் இரவு வானை ஆழமாக உற்று நோக்கி, விண்மீன் உடுக்கணங்களின் வடிவங்களிலிருந்து தங்களின் கடவுளர்களுக்கான சிற்பக் கலை வடிவங்களையும் தத்துவங்களையும் செதுக்கத் தங்களின் உன்னதமான வானியல் அறிவைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதைத் திண்ணமாக அறியலாம்.
Subscribe to:
Post Comments (Atom)







No comments:
Post a Comment