கோள்களின் எண்ணிக்கையே வார நாட்கள் என்பது பொதுவான கருத்து. வெறும் கண்களுக்குத் தெரியாத யுரேனஸ், நெப்டியூனைத் தவிர்த்துப் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி என ஐந்து கோள்கள்தான் அந்தக் காலத்தில் தெரியும். ஆங்கிலத்தில் பிளானெட்டுகள் (Planets) எனப்படும் சொல் கிரேக்கத்திலிருந்துப் பெறப்பட்டது. அதற்குத் திரிபவர்கள் (Wanderes) எனப்பொருள். அதாவது விண்மீன்களின் நிலைத்த பின்னணியில் நகரும் இவற்றை கிரேக்கர்கள் திரிபவர்கள் என அழைத்துள்ளனர். அவர்களின் கொள்கைப்படி சூரியனும், சந்திரனும் பிளானெட்டுகள் அல்ல. அவர்கள் வார நாட்களை உருவாக்கியிருந்தால் வாரத்திற்கு ஐந்து நாட்கள் என உருவாக்கியிருப்பார்கள். தமிழர்கள் இவற்றை கோள்கள் என அழைத்துள்ளனர். அதாவது கோளமான (உருண்டை) வடிவத்தைக் கொண்டவை என்ற பொருள்படி. அப்படிப் பார்த்தால் சூரியனும், சந்திரனும் கோள்களே. ஆகவே இவர்கள் கணக்கின்படி மொத்தம் ஏழு கோள்கள். இவ்வேழு கோள்களும் பூமியை வலம் வருவதாகக் கொண்டு ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள் என வகுத்துள்ளனர். இக்கருத்து பின்னர் இராகு, கேதுவையும் சேர்த்து நவக்கிரகங்களாக மாற்றம் பெற்றுள்ளது. கோள்கள் கோளவடிவிலானவை என்பதை மட்டும் அவர்கள் அறிந்திருக்கவில்லை, அவற்றின் அளவுகளைக் கூட அறிந்திருக்கின்றனர். நமது சூரியக் குடும்பத்தின் பெரிய கோள் வியாழன் (Jupiter) என இப்போது நமக்குத் தெரியும். ஆனால் இதைத் தமிழர்கள் வெகுகாலத்திற்கு முன்பே தெரிந்து வைத்திருக்கின்றனர். வியாழன் என்ற சொல்லுக்குப் பெரியது எனப்பொருள்.
வியல் < வியன் < வியாழம் (விசாலம்) < வியாழன்
என வேர்சொல் விரியும்.
“வியல் என் கிளவி அகலப் பொருட்டே” (தொல்-உரி.16)
வியாபித்தல் என்றால் பெரிய இடத்தை நிரப்புதல் என இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். திருச்சிக்கருகில் இன்றைய கருவூர் மாவட்டத்து நெய்தலூர் அருகே 'வியாழமேடு' என்ற ஊர் உள்ளது. பெரியமேடு ஒன்றின் மேல் இவ்வூர் உள்ளது. பெரிய மேடு எனப் பொருள்படும்படி அவ்வூர் வியாழமேடு என அழைக்கப்படுகிறது. வானை நன்றாகப் பார்க்குமாறு அமைந்துள்ள இவ்வூரில் காலத்தைக் கணித்துக்கூறிய கணியர்கள் வாழ்ந்திருக்கவேண்டும். அவர்கள் வழிவந்தவர்களான சாதகம் கணிக்கும் வள்ளுவர் மரபினர் இன்றும் இவ்வூரில் சாதகம் எழுதிக்கொடுக்கின்றனர்.
- பாலா பாரதி
No comments:
Post a Comment