Wednesday, 31 August 2016

பிரபஞ்சத்தினூடே ஒரு பயணம்: ஆ…கா…ய கங்கை

வானில் அக்காட்சியைப் பார்த்தபோது ஒரு நிமிடம் மூச்சு நின்றுவிட்டு பின்னர் இயல்பானது. சரியாக ஒரு வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன். அக்காட்சி மனத்தில் நிலைபெற்றிருக்க அந்த பிரமாண்டம், அந்த அழகு இன்னும் பல காரணங்கள் இருக்க வேண்டும். யாம் பெற்ற இவ்வின்பம் இவ்வையகம் பெறவேண்டாமா?

கேரளாவிலுள்ள மறையூர் பாறைஓவியங்களைப்பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த தருணம். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பழனிக்கருகில் எங்கள் வாகனம் சீராக சென்றுக்கொண்டிருந்தது. இனிய பாடல்கள் இசைக்க, ஓட்டுநர் லாவகமாக வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தார்.

முன்பக்க இருக்கையில், மலையேறிய அசதியில் அரைத்தூக்கத்தில் அமர்ந்திருந்த என் கண்முன்னே வாகனத்தின் கண்ணாடியின் வழியே வானம் விரிந்திருந்தது. ஒவ்வொரு திருப்பத்திலும் திரும்பும்போதும் வானிலுள்ள விண்மீன்கள் மாறி மாறி விளையாட்டுக்காட்டிக்கொண்டிருந்தன.

அப்போதுதான் நினைவுக்கு வந்தது, கோளரங்கில் மாணவ மாணவிகளுக்கு விண்மீன்களைப்பற்றி வகுப்பு எடுக்கும்போது "பால்வீதி மண்டலம்- MILKYWAY GALAXY' எப்படிப்பார்ப்பது என்று பயிற்சிக் கொடுப்போம். ஆகாய கங்கை எனவும் அழைக்கப்படும் இந்த பால்வீதியை வானில் எப்போதும் பார்க்க முடியாது. குறிப்பிட்ட காலம், அதற்கு ஏதுவான நேரம், சரியான இடம், சாதகமான சூழல் ஆகியவை ஒருசேர அமைந்தால்தான் நாம் பால்வீதி மண்டலத்தைப் பார்க்க முடியும்.

முதுவேனில் மாலைப்பொழுது அது, சூரியன் மறைந்தும் வெளிச்சம் மட்டும் போகலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் இருக்க இருளோ அதை விரட்ட முயல, அதாவது ரெண்டும் கெட்டான் நிலை. சற்று முன் மழைப் பெய்திருக்க வேண்டும், அதனால்தான் வானிலுள்ள தூசிகளெல்லாம் நீங்கி, வானமே கழுவிவிட்டதைப்போன்று ஒரு பளபளப்பு. விருச்சிக இராசி (SCORPION CONSTELLATION) வானில் உயர்ந்திருந்த ஒரு நிலை. நாங்கள் பயணம் செய்துகொண்டிருந்தது காட்டுப் பகுதியாதலால் சுற்றுப் பகுதியில் விளக்கு வெளிச்சத்தின் தாக்கம் சற்றும் இல்லாத நிலை. அப்படியே அனைத்துச் சூழலும் சரியாக அமைந்துவிட்டிருப்பது நினைவில் வர, உடனே வாகனத்தை நிறுத்தச் சொல்லிக் கீழே இறங்கி வானைப் பார்த்தபோது எனக்கு எற்பட்டதுதான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்தநிலை.

அக்காட்சி.....

மிகப்பெரிய கருமையான மலைப்பாம்பு ஒன்று தனது உடலில் வைரங்களைப் பதித்துக்கொண்டு வானத்தின் தெற்கிலிருந்து வடக்காகப் படுத்துக்கிடந்தது.
ஆம்...
பகட்டான தோற்றம்கொண்ட பிரபல "பால்வீதி மண்டலம்" அது.

(குறிப்பு: அப்போது வைத்திருந்த கேமிராவால் அக்காட்சியை படமெடுக்க முடியாது எனவே இப்போதைக்கு இணையத்திலிருந்துப் படத்தைப் போட்டிருக்கிறேன். அடுத்தமுறை எனது கேமிராவில் எடுக்க முயல்கிறேன்.
வானின் சுவாரஸ்யங்களை ஒரு பதிவில் முடிக்க முடியுமா என்ன? தொடர் பதிவாக எழுதத்திட்டம்)

நாம் இருக்கும் இப்பூமியும், சூரிய மண்டலமும் பால்வீதி (MILKYWAY) என்றழைக்கப்படும் ஆகாய கங்கை என்னும் அண்டத்தில்தான் இயங்கி வருகிறது. இப்பால்வீதி அண்டத்தை எப்போதாவது நேரில் பார்த்ததுண்டா? இல்லையெனில் பார்ப்போமா? அதற்குமுன் சில உண்மைகளைத் தெரிந்துகொள்வோம்.

நாம் இருப்பதே பால்வீதிக்குள்தான். பின்னர் எப்படி அதைப் பார்க்க முடியும் எனத்தானே கேட்கிறீர்கள்?
நாம் ஒரு கட்டடத்தின் ஒரு அறையில் இருப்பதாகக் கற்பனை செய்துக்கொண்டால் அக்கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றத்தை காணமுடியாவிட்டாலும் அந்த அறையிலிருந்தவாறே அக்கட்டடத்தின் ஒருசில பகுதிகளைச் சன்னல் வழியாக பார்க்க இயலுமல்லவா? அதுபோலத்தான் பால்வீதியின் முழுத்தோற்றத்தைப் பார்க்க முடியாவிட்டாலும் நமது சூரியமண்டலம் இயங்கும் விளிம்பை நாம் பார்க்கமுடியும்.

இரவு வானத்தை பார்க்கும்போது ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தெற்கு, வடக்காக வெண்மைநிற மங்கலான ஒளிப்பட்டை படர்ந்திருப்பதைப் பார்க்கலாம். பார்ப்பதற்கு மேகம் போலத் தெரிந்தாலும் அந்த ஒளிப்படலமே பால்வீதியாகும். இப்படலத்தை உற்றுநோக்கினால் அதில் கோடி கோடியாக விண்மீன் கூட்டங்கள் உள்ளமை தெரியாவிட்டாலும், ஒரு தொலைநோக்கி மூலமாகவோ, பைனாகுலர் மூலமாகவோ பார்க்கும்போது விண்மீன்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதைப் பார்க்கலாம்.
விண்மீன்களின் தொகுதிகளைக் கற்பனையாகச் சில உருவங்களுடன் பொருத்தி அவற்றை அடையாளம் காண்பதற்காக விண்மீன் தொகுதிகள் (உடுக்கணங்கள் - CONSTELLATIONS) என இவற்றை அழைக்கிறோம். இந்த உடுக்கணங்களில் வடக்கே காசியோப்பியாவில் தொடங்கித் தெற்கே பெர்சியஸ், ஆரைகா, ரிஷபம், மிதுனம், ஓரையான் உடுக்கணங்களின் வழியே தென்சிலுவை உடுக்கணம் வரை தரையில் கொட்டப்பட்ட பால் ஒழுகி இருப்பதைப் போல் பால்வீதி காணப்படும். பின்னர் அது வடக்கே திரும்பி விருச்சிகம், தனுசு, அன்னம் வழியே மீண்டும் காசியோப்பியாவைத் தொடும். இதன் வெளிவிளிம்புகளை உன்னிப்பாகக் கவனித்தால், அவை ஒழுங்கற்று இருப்பதும், அகலம்வேறுபடுவதும் தெரியும். ஒருசில இடங்களில் கிளையாகப் பிரிந்து செல்வதையும் காணலாம்.

பொலிவு அதிகமாக உடைய விண்மீன்களான ஆக்கிர்னர், சித்திரை, சுவாதி, மகம், … முதலிய 16 விண்மீன்களும் இந்த பால்வீதிப் பாதைக்குள்ளோ, அதை ஒட்டியோ அமைந்துள்ளன. எனவே இவ்விண்மீன்கள் தோன்றும் காலங்களில் பால்வீதியும் தெரியும். ஆனால் பெருநகரங்களில் விளக்கொளியாலும், காற்றில் உள்ள தூசுமண்டலங்களாலும் பெரும்பாலும் நாம் இதைப் பார்க்க இயலுவதில்லை. நகரங்களின் விளக்கொளி, தூசு மண்டலங்களால் வானத்தின் பார்க்க முடிகிற பகுதி குறைவாக இருப்பதுதான் எதார்த்தமான உண்மை.
விளக்கொளிகள் இல்லாத நகரத்தின் புறப்பகுதிகள் சிறந்த இடமாகும். மழைபெய்து முடிந்த நேரம் சிறந்த நேரமாகும், ஏனெனில் மழைபெய்யும்போது காற்றிலுள்ள தூசிகள் மழை நீரால் நீக்கப்பட்டு வானம் கழுவி விடப்பட்டதைப் போலத் தெளிவாக இருக்கும். இலையுதிர் அல்லது குளிர்பருவ அந்திக் கருக்கல் பொழுதுகளே இந்தப் பால்வீதியினைக் கண்டுகளிக்க சிறந்த நேரமாகும். நிலவும் இதைவிட்டு விலகியிருப்பது நல்லது. இக்காலங்களில் இது வானத்தில் உச்சியில் இருக்குமாதலால் இதனைத் துல்லியமாகக் கவனிக்கலாம்.

பைனாக்குலர் வழியாக பார்த்தோமானால் அதில் அடங்கியுள்ள ஏனைய சுவையான செய்திகளும் விளங்கும். சின்னசின்ன புள்ளிகளால் விண்மீன்கள் செறிந்த வழக்கமான பின்புலத்திற்கு அப்பால் எண்ணற்ற விண்மீன்கள் பதிந்த பகட்டான விண்மீன்கொத்துகளும், கலங்கலான சுடரொளிப் படலங்களும் உண்டு.

நாம் பார்க்கும் போது வெள்ளைநிறப் பட்டையாக காட்சியளித்தாலும் உண்மையில் இது ஒரு பிரமாண்டமான சுருள் அண்டம் (SPIRAL GALAXY) ஆகும். இதன் குறுக்களவு 100,000 ஒளியாண்டுகள் (ஒளியானது ஒரு வினாடியில் பூமியை ஏழு முறை சுற்றிவந்துவிடும், அத்தகைய ஒளியானது ஒருவருடத்தில் எவ்வளவு தொலைவு செல்லுமோ அதுவே ஒரு ஒளியாண்டாகும்). நமது சூரியனும் அதன் சூரியமண்டலமும் மையத்திலிருந்து ஏறத்தாழ மூன்றில் இரண்டுபங்கு தொலைவில் அண்டவெளி விளிம்பினை ஒட்டி இயங்கி வருகிறது.
அந்தத் தட்டைப் பரப்பின் விளிம்பில் பூமியிலிருந்து அண்டத்தின் குறுக்கு வெட்டாகக் காண்பதாலேயே அது நமக்கு ஒழுங்கற்ற வெண்பட்டைபோலத் தோன்றுகிறது. மேல்புறமும், கீழ்ப்புறமும் அதிக விண்மீன்கள் இல்லையாதலால் விண்மீன்களிடையே பரவியுள்ள வெற்றிடத்தின் ஊடாக பிரபஞ்சத்தின் வரம்புகளைக் காணமுடிகிறது.
பூமியிலிருந்து பார்க்கும்போது நம் பால்வீதி அண்டத்தின் மையம் தோராயமாக தனுசு உடுக்கணத்தின் திசையில் அமைந்துள்ளது. இதுவே பால்வீதியின் மிக அடர்த்தியான பகுதி ஆகும்.

பால்வீதி மண்டலத்தின் மையத்தில் ஒரு மிகப்பெரிய கருந்துளை (BLACK HOLE) உள்ளது. இக்கருந்துளையே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. இந்த பிரபஞ்சத்தின் அனைத்தும் இக்கருந்துளையையே சுற்றி வருகின்றன. நமது சூரியன் இக்கருந்துளையை ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 20 கோடி ஆண்டுகள் ஆகும். இதன் தோற்றத்தைப் பின்வருமாறு கற்பனை செய்துகொள்ளலாம். ‘வீட்டில் ஆப்பம்’ செய்வார்கள் தானே? ஆப்பத்தின் மையப் பகுதி உருண்டு, திண்டாகவும் விளிம்பு மெல்லியதாகவும் இருக்குமல்லவா? இந்த திண்டாகவுள்ள மையப்பகுதியே கருந்துளை ஆப்பத்தின் ஓரத்தில் கிடக்கும் ஒரு கடுகே நமது சூரியன்.

இப்பால்வீதியை பைனாக்குலர் கொண்டு கவனித்தால், மணிக்கணக்கில் அற்புதக் காட்சிகளைப் பால்வீதி நமக்கு அளிக்கும். அதனை அனுபவித்து இரசிக்க வேண்டுமானால் நாம் நகரங்களின் வெளிச்சங்களிலிருந்து விலகி இருளாக உள்ள இடங்களிலிருந்து நோக்கவேண்டும்.
பாலை கொட்டிவிட்டது போல தெரிவதால் பால்வீதி(Milkyway) என ஐரோப்பிய மரபிலும் ஆகாயத்தில் பாயும் கங்கை ஆற்றை உருவகப்படுத்தி இந்திய மரபிலும் அழைக்கின்றனர். ஆரம்பத்தில் இதைப் பலர் பதிவு செய்திருந்தாலும் கலிலியோ தான் கண்டுபிடித்திருந்த தொலைநோக்கியின் வாயிலாகப் பார்த்து பதிவுசெய்து வைத்திருந்தார். அன்றைக்கு அவர் பயன்படுத்திய தொலைநோக்கி இன்றைய சாதாரணத் தொலைநோக்கியைக் காட்டிலும் திறன் குறைந்ததாக இருந்தாலும் முதன்முதலில் பலகேள்விகளுக்குப் பதிலளித்துச் சென்றார்.

இவரது ஆய்வை இவரது உதவியாளர்கள் இருவர் தொடர்ந்தாலும் 1920 வரை மற்றவர்களின் கவனத்தை அதிகம் கவரவில்லை. 1920 களுக்குப்பிறகு சேப்லீ, குர்டிஸ், ஹப்பில் ஆகியோரின் பங்களிப்பால் இந்த பிரபஞ்சத்தின் பல இரகசியங்களைப் புரிந்துக்கொண்டுள்ளோம்.
நமது பால்வீதி மண்டலம், விழாக்காலங்களில் எரியும் சங்குசக்கரம் போன்ற தோற்றம் கொண்டது. ஆறு கைககளுடன் பிரமாண்டமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் இதன் ஓரையான் கையில்தான் நமது சூரியமண்டலம் இயங்கி வருகிறது. இதனுள் 100 முதல் 400 பில்லியன்கள் வரை விண்மீன்கள் இருக்கலாம் எனக் கணித்திருக்கிறார்கள். பெருவெடிப்பின்(BIG BANG) போது இது உருவாகி இப்போது 1350 கோடி வருடங்கள் கடந்திருக்கும் என அறிவியலார்கள் கருதுகிறார்கள்.

...தொடரும்

 பாலா பாரதி

No comments:

Post a Comment