Thursday, 11 August 2016

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது"

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது"

இது நாம் அடிக்கடி கேட்கும் ஒரு பழமொழி. பொதுவாக துணிமணிகள் , நகைகள் வாங்கும் போதும்,வீட்டில் விசேஷங்களுக்கு நாள் குறிக்கும் போது ,அதிகமாக உபயோகப்படுத்தப்படும் பழமொழி.
வாரத்திற்கு ஒரு முறை புதன் கிழமை வந்து கொண்டு தானே இருக்கிறது. அப்பறமென்ன புதன் கிடைக்காது?
அர்த்தம் புரியாமல், நாம் உபயோகித்து வரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று.
உண்மை என்னவென்று பார்ப்போமா?
பொன் என்பது வியாழன்(JUPITER) கோளைக் குறிக்கும் புதன் என்பது மெர்குரி என்று அழைக்கப்படும் மற்றொருக் கோளாகும்.வியாழன் 12 வருடங்களுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிவருகிறது, புதனோ வருடத்திற்கு நான்குமுறை சூரியனை சுற்றிவருகிறது. இதற்குக் காரணம் புதன் சூரியனுக்கருகிலும் வியாழன் தொலைவிலும் உள்ளதுதான்.
புதன்(MERCURY) சூரியனுக்கு அருகில் இருப்பதால் சூரியனின் ஒளியில் இதை பார்ப்பது இது கடினம், மேலும் சுற்றி வரும் தூரம் மற்றும் வேகத்தால் நம்மால் பார்க்கப்படும் வாய்ப்பு மிக மிக குறைவு. இது அளவிலும் சிறியது.ஆனால், வியாழன் உருவத்தில் பெரியது, சுற்றி வரும் தூரம் மற்றும் சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் அதிகம்.சூரியனை விட்டு மிகவும் தூரத்தில் இருப்பதால் ,சூரிய ஒளியின் தாக்கம் ,புதனை ஒப்பிடுகையில் குறைவு. வெறும் கண்ணால் வியாழனை எளிதாகப் பார்க்க முடியும்.
இப்போது பழமொழிக்கு மறுபடியும் வருவோம்.
வியாழனைப் பார்க்க முடிந்தாலூம் புதனைப் பார்க்க முடியாது அதாவது பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.ஒரே சமயத்தில் வானில் வெறும் கண்ணால் பல கோள்களைப் பார்க்கும் வாய்ப்பு அரிதாகவேக் கிடைக்கும். இந்த அரிதான விய்ப்பு நமக்கு இப்போது கிட்டியுள்ளது.
இன்றும் இன்னும் சில நாட்களுக்கும் மாலை வேளையில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஐந்து கோள்களையும் பார்க்க முடியும்.
கோள்களை(PLANETS) எப்படிப் பார்ப்பது?
மாலை சூரியன் மறைந்தவுடன் வானில் முதலில் கோள்கள்தான் தெரியும் சற்று நேரத்தில் இங்கொன்றூம் அங்கொன்றுமாக நட்சத்திரங்கள்(STARS) தோன்ற ஆரம்பிக்கும். ஆக, சூரியன் மறைந்தவுடன் நட்சத்திரங்கள் தோன்றுவதற்கு முன்பாகக் கோள்கள்(PLANETS) தோன்றூம் என்பதை முதலில் நினைவில் வைத்துக்கொண்டு, சூரியன் மறையும் தருவாயில் மேற்கே பாருங்கள்.
அடிவானில் புதனும்(MERCURY) சற்று மேலே வெள்ளி(VENUS), வியாழன் (JUPITER), செவ்வாய்(MARS), சனி(SATURN) என்று அடுத்தடுத்து ஐந்து கோள்களூம் வரிசையாகத் தெரியும். இவற்றில் புதன் அடிவானில் இருப்பதால் உடனே மறைந்துவிடும், மேலுல் அடிவானில் மேகங்கள் இருக்குமாதலால் மேகத்தினால் மறைக்கப்படும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர் ஒரு பிரபல வானவியல் விஞ்ஞானி தமது மரணப் படுக்கையில் ”புதன் கோளை கடைசி வரை கண்ணால் பார்க்காமலே சாகிறேன்” என்று வருந்தினாராம்.
(பெண் எளிதில் கிடைத்தாலும் புதன்கிழமை பிறந்த, பூப்பெய்திய பெண் கிடைப்பதருமை என்னும் பொருளில் இப்பழமொழியை மக்கள் வழங்குகிறார்கள் எனக்கூறுவோறும் உண்டு).
பாலா பாரதி


1 comment:

  1. Good information,No idea about this till now -Thankyou

    ReplyDelete