வானில் நிலவின் விளையாட்டு!
முழு சந்திரகிரகணம்- சிவப்பு நிலா
27,28 - 07 - 2018
27,28 - 07 - 2018
நாளை (27-07-2018) இரவு முழு சந்திரகிரகணம் நடைபெற உள்ளது. முழு சந்திரகிரகணம் வானில் நிகழும் வழக்கமான நிகழ்வுதான். இதை சிவப்பு நிலா என்கிறார்கள்.
சந்திரகிரகணம் எனப்படும் இந்த நிலவு மறைவு எப்படி ஏற்படுகிறது?
முன்பெல்லாம், நிலாவை பாம்பு விழுங்குவதால்தான் முழுநிலா திடீரென மறைந்து போகிறது என்று மக்கள் நம்பினார்கள். தேவர்கள், அசுரர்கள், ராகு, கேது என்று கதைகளையும் சொன்னார்கள். ஆனால், இன்று அறிவியலின் வளர்ச்சியால் அவை கட்டுக்கதைகள் என்பதும் பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்பதும், பள்ளிப்பிள்ளைகளுக்குக் கூட தெரியும். நிலவு, தானாக ஒளி விடுவதில்லை, அது சூரியனின் ஒளியைத்தான் எதிரொளிக்கிறது.
பூமி சூரியனைச் சுற்றிவருவதும், நிலா பூமியை சுற்றிவருவதும் நாம் அறிந்ததுதான். அப்படி சுற்றும்போது ஏதோ ஒரு சமயத்தில் இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. அப்போது பூமியானது நிலவுக்கும் சூரியனுக்கும் இடையில் வருவதாக வைத்துக் கொள்வோம். அப்போது, நிலவின் மீது படும் சூரியவெளிச்சம் பூமியால் தடுக்கப்படுகிறது. அதாவது, பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது. அதனால் சந்திரன் சிறிது நேரம் மறைந்து போகிறது. பூமியின் நிழலில் இருந்து வெளியில் வந்தவுடன் மீண்டும் பிரகாசிக்கிறது. இதனைத் தான் நாம் சந்திரகிரகணம் (Lunar Eclipse) என்கிறோம். சூரியன் இருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் நிலவு இருக்கும்போதுதான் இது நடைபெற வாய்ப்புள்ளது இல்லையா? அதனால்தான் சந்திர கிரகணம் எப்போதும் முழுநிலவு நாளில்(Full Moon Day) நிகழும்.
சிவப்பு நிலா(Blood Moon) என்றால் என்ன?
சந்திரகிரகணம் எனப்படும் நிலவு மறைவின்போது, நிலவு உதிக்கும்போது பூமியின் நிழலால் மறைக்கப்பட்டு உதிக்கும் அப்போது சூரியஒளி நிலவின் மேல் நேரடியாக படாது. ஆனால், நமது வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி நிலவின் மேல்படும். குறைந்த அலைநீளமுள்ள ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடையும். இதனால் அது சிவப்பு நிறமாகத் தோன்றுமல்லவா இதையே 'சிவப்பு நிலா’(Blood Moon) என்கிறோம்.
கிரகணம் நடைபெறும் போது வெளியே வரலாமா?
வெளியே வரலாம், நமது இயல்பான வேலைகளைச் செய்யலாம். கிரகணம் என்பது வழக்கமாக பூமி, சந்திரன் இவை சுற்றும்போது ஏற்படும் நிழல் விளையாட்டுதான் என்பதால், அந்த சமயத்தில் நாம் வெளியில் வருவதாலோ, உணவு உண்பதாலோ, கருவுற்ற தாய்மார்கள் வெளியில் வருவதாலோ எந்த பாதிப்பும் ஏற்படாது.
கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என்கிறார்களே?
சூரிய கிரகணத்தைத்தான் வெறும் கண்ணால் பார்க்கக்குகூடாது. சந்திர கிரகணத்தை வெறும் கண்ணாலோ, தொலைநோக்கி வழியாகவோ, பார்க்கலாம். எந்தவிதமான பாதுகாப்பு சாதனங்களும் தேவையில்லை.
எப்போது பார்க்க வேண்டும்?
இரவு 10:45 மணிக்கு பூமியின் நிழல் நிலவின் மேல் மெதுவாக விழ ஆரம்பிக்கும். இது பகுதி சந்திர கிரகணம் எனப்படுகிறது. 1:50 மணிக்கு பூமியின் நிழல் முழுதாக நிலவை மூடியிருக்கும். இதுவே, முழு சந்திர கிரகணம். பிறகு நிழல் மெதுவாக விலக ஆரம்பித்து விடியற்காலை 4:58 மணிக்கு முழுமையாக விலகிவிடும்.
எங்கிருந்துப் பார்க்கலாம்?
நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பார்க்கலாம். எங்கள் பள்ளிக்கு வந்தால் வல்லுநர்களின் விளக்கத்துடன் தொலைநோக்கியில் பார்க்கலாம். உங்களுக்கு எழும் பல்வேறு வினாக்களுக்கு விடைக் காண வாருங்கள்.
Tamilnadu Science Forum Trichy Branch, Trichy Astro Club, Bharathi School இணைந்து நடத்த உள்ள இந்த நிகழ்வுக்கு உங்களை அழைக்கிறோம்.
இடம்: பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, இந்தியன்வங்கி காலனி, கே.கே நகர் சாலை, திருச்சி -21.
நேரம் : மாலை 7 மணி.
- பாலா பாரதி
(9944966826)
(9944966826)


Super
ReplyDelete